போயபட்டி ஸ்ரீனு pt web
சினிமா

“மாட்டிகினாரு ஒருத்தரு.. அவர காப்பாத்தல எடிட்டரு” - வசமாக சிக்கிய இயக்குநர் ஸ்ரீனு

தெலுங்குப் பட இயக்குநர் போயபட்டி ஸ்ரீனு, ராம் பொத்தினேனியை வைத்து ஸ்கந்தா என்றொரு படத்தை எடுத்திருந்தார். பாக்ஸ் ஆஃபிஸில் கலெக்‌ஷனே கட்டாத இந்தப் படம், நேற்று டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியானது.

ஜெ.நிவேதா

தெலுங்குப் பட இயக்குநர் போயபட்டி ஸ்ரீனு, ராம் பொத்தினேனியை வைத்து ஸ்கந்தா என்றொரு படத்தை எடுத்திருந்தார். பாக்ஸ் ஆஃபிஸில் கலெக்‌ஷனே கட்டாத இந்தப் படம், நேற்று டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியானது.

படத்தின் கதைப்படி, ஆந்திர முதல்வரின் மகள் திருமணத்தன்று தன் காதலரான தெலங்கானா முதல்வரின் மகனுடன் திருமண இடத்திலிருந்து தப்பித்துவிடுகிறார். இதனால், தெலங்கானா முதலமைச்சரைப் பழிவாங்க அடியாட்களை அனுப்புகிறார் ஆந்திர முதல்வர். அப்படி வரும் அடியாள், இரண்டு முதல்வர்களின் மகளையும் கடத்திக்கொண்டு தனது கிராமத்திற்குப் போய்விடுகிறார்.

இன்னொருபக்கம், உலகளவில் பிரபலமான ஒரு ஐ.டி நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது. இந்த இரண்டு கதைகளுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் மீதிக் கதை.

இயக்குநர் போயபட்டி ஸ்ரீனு இதற்கு முன் அகண்டா, லெஜண்ட் என நந்தமூரி பாலகிருஷ்ணாவை வைத்து ஆக்‌ஷன் படங்களை இயக்கி ஹிட் கொடுத்தவர். ஆக்‌ஷன் த்ரில்லரும், சண்டை காட்சி வடிவமைப்புகளும்தான் இவர் படங்களின் ஹிட் அம்சங்கள்.

அப்படியிருக்க, ஸ்கந்தாவிலும் அவர் அதை கைவிடவில்லை. அவ்வளவு ஆக்‌ஷன் காட்சிகள். அப்படியொரு ஆக்‌ஷன் காட்சிதான் இப்போது நெட்டிசன்களின் ட்ரோல்களில் சிக்கியிருக்கிறது. அதுவும் க்ளைமேக்ஸ் ஆக்‌ஷன் சீன். ஒருவேளை மேக்கிங் சரியில்லையா என நினைக்கவேண்டாம். கொடூரமான அந்த ஆக்‌ஷன் சீனில், மேக்கிங்கை விட எடிட்டிங்தான் அக்கப்போர் செய்துள்ளது. படத்தில் அந்த சீனில், ஹீரோவுக்கு டூப் போட்டு சீன் எடுத்திருக்கிறார்கள். இதில் டூப் போட்டது வேறு யாருமில்லை.. நம்ம இயக்குநர் போயபட்டி ஸ்ரீனுவேதான்!

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என டைட்டில் கார்டில் எல்லா பட்டத்தையும் தனக்கே போட்டுக்கொள்ளும் இயக்குநர்களுக்கு மத்தியில், சண்டை காட்சிகளில் ஹீரோவுக்கு டூப் போடும் நபர்கள் பட்டியலிலும் தன் பெயரையே போட்டுக்கொள்ளும் ஒரு இயக்குநரை சினிமா இப்போதுதான் பார்க்கிறது.

தன் படத்தில் தானே ஹீரோவுக்கு டூப்பாக நடித்திருக்கிறார் என்பதுகூட பரவாயில்லை, அதில் தவறொன்றும் இல்லை. ஆனால் அதையாவது (!) உருப்படியாக செய்தாரா என்பதுதான் இங்கே விஷயம். ஆம், படத்தில் எடிட்டிங்கின்போது டூப்பை மறைக்காமல் அப்படியே விட்டுவிட்டார்கள். இதனால் சீனில் ராம் பொத்தினேனிக்கு இடையே முகம் காட்டி கொலை செய்வது நம்ம இயக்குநர் போயபட்டி ஸ்ரீனு. இதை கண்டுபிடித்த நெட்டிசன்கள், ‘என்ன சார் நீங்க இந்தப் பக்கம்’ என அவரை டேக் செய்து கலாய்த்து வருகிறார்கள்.

கதை யோசிக்கும்போதுதான் லாஜிக் யோசிக்கல... க்ளைமேக்ஸ் எடிட்டிங்கிலாச்சும் எதுனா பாட்ச் வொர்க் பண்ணிருக்கலாம்ல பாஸ்?