வேட்டையன் - கங்குவா web
சினிமா

ஒரேநாளில் ரிலீஸாகும் கங்குவா - வேட்டையன்... பாக்ஸ் ஆஃபிஸ் பாதிக்கப்படுமா? ரசிகர்கள் கவலை!

Rishan Vengai

தமிழ் திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக இன்றுவரை இருந்துவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தன்னுடைய 170வது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

vettaiyan

ரூ.160 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமன்றி பல்வேறு வெளிநாடுகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிகட்ட வேலைகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் சூர்யாவின் கங்குவா படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கும் அக்டோபர் 10ம் தேதி களமிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சூர்யா மற்றும் ரஜினிகாந்தின் படங்கள் நேருக்கு நேர் மோதவிருக்கின்றன.

கங்குவா-வேட்டையன் ஒரேநாளில் ரிலீஸ்.. ரசிகர்கள் முன்வைக்கும் முக்கியமான விஷயம்!

என்னதான் ரஜினிகாந்த் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் நம்பர் 1 இடத்தில் இருந்தாலும், இன்னும் ஒரு தமிழ் சினிமா கூட 1000 கோடி கலெக்சன் என்ற டார்கெட்டை எட்டமுடியாமல் திணறிவருகிறது. அவ்வளவு ஏன்.. 500 கோடி படங்கள் கூட தமிழ் சினிமாவில் மிகவும் கம்மியாகத்தான் இருந்துவருகின்றன.

அப்படியிருக்கும்போது பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவிருக்கும் கங்குவா மற்றும் வேட்டையன் இரண்டு படங்களும் ஒரேநாளில் வெளியாகும் பட்சத்தில், இரண்டு படங்களுக்குமான பாக்ஸ் ஆபிஸ் கலக்சன் பாதிக்கப்படும் என்ற கவலையை ரசிகர்கள் முன்வைத்துவருகின்றனர். ஒரே நாளில் இரண்டு பெரிய படங்கள் ரிலீஸ் ஆவது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இதையும் படிக்க: ’மருதமலை மாமணியே முருகையா..’! ஆக்சன், காமெடி, எமோசன் என ஃபுல்-பேக்கேஜாக கலக்கும் GOAT ட்ரெய்லர்!

இதுகுறித்து பதிவிட்டிருக்கும் ஒரு ரசிகர், “வேட்டையன் மற்றும் கங்குவா இரண்டும் தனித்தனியாக 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இரண்டு படங்களும் அக்டோபர் 10 ஆம் தேதி ஒரே நாளில் மோதினால் இரண்டு படங்களும் கணிசமான பாக்ஸ் ஆபிஸ் இழப்பை சந்திக்கும்” என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவர், “இரண்டுமே பான் இந்தியா படங்களாக வரவிருக்கிறது, இரண்டிற்கும் தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல்கள் ஏற்படாதா? வசூல் பாதிக்கப்படாதா?” என்ற கேள்வியை வைத்துள்ளார். மேலும் சில ரசிகர்கள் இரண்டு படத்திற்குமான மோதலை வரவேற்ற நிலையில், சூர்யா ரசிகர்கள் சூர்யாவிற்கு ஆதரவாக இருப்பதாகவும் பதிவிட்டுவருகின்றனர்.

இதையும் படிக்க: ‘ரஹ்மானுக்கு விருது கொடுக்காதது அவமானம்’-9 விருதுகளை அள்ளியும் ஆடுஜீவிதம் இயக்குநர் கடும் அதிருப்தி!

கங்குவா

சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.