‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டு பாகங்களையும் மொத்தம் 140 நாட்களில் மணிரத்னம் எடுத்து முடித்துள்ளதாக நடிகர் கார்த்தி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மறைந்த எழுந்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்று புனைவுக் கதையான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, திரைப்படமாக எடுத்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் முன்னணி நட்சத்திரங்களான விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயராம், ரஹ்மான், நிழல்கள் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், பொன்னி நதி மற்றும் சோழா சோழா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத் தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.
பட வெளியீட்டுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால், படத்திற்கான விளம்பரப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தப் படம் குறித்து நடிகர் கார்த்தி கூறுகையில், சவாலான கொரோனா ஊரடங்கு காலத்திலும், 140 நாட்களில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்குநர் மணிரத்னம் எடுத்துமுடித்துள்ளதாக, இந்தப் படத்தில் வந்தியத் தேவனாக நடித்துள்ள நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் படத்தின் முக்கியமான தூண் என்றால், அது நடிகர் விக்ரம்தான் என்றும் கார்த்தி கூறியுள்ளார். அத்துடன் நடிகர் விக்ரம் பேசுகையில், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்ததை ஆசிர்வதிக்கப்பட்டவனாக நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.