சினிமா

‘லவ் டுடே’ இந்தி ரீமேக் உரிமையை நான் வாங்கியிருக்கிறேனா? - போனி கபூர் ட்விட்டரில் விளக்கம்

‘லவ் டுடே’ இந்தி ரீமேக் உரிமையை நான் வாங்கியிருக்கிறேனா? - போனி கபூர் ட்விட்டரில் விளக்கம்

சங்கீதா

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ திரைப்படத்தின் இந்தி ரீமேக் செய்யும் உரிமையை அஜித்தின் ‘துணிவு’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் பெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதனை மறுத்து அவர் ட்வீட் செய்துள்ளார்.

‘கோமாளி’ வெற்றிப்படத்தைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்த திரைப்படம் ‘லவ் டுடே’. கடந்த நவம்பர் மாதம் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம், எதிர்பார்ப்பை மீறி பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் சுமார் 5 முதல் 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தத் திரைப்படம், 90 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து, கடந்த 2022-ம் ஆண்டில் அதிக வசூலை ஈட்டியப் படங்களில் இடம் பிடித்தது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இந்தப் படம், அங்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில், கடும் போட்டிகளுக்கிடையில் அஜித்தின் ‘துணிவு’ படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் போனி கபூர் இந்தி ரீமேக் உரிமையை பெற்றுள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதனை மறுத்து தயாரிப்பாளர் போனி கபூர் ட்வீட் செய்துள்ளார். அதில், “ ‘லவ் டுடே’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை நான் வாங்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். சமூக வலைதளங்களில் வரும் இதுபோன்ற செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் போலியானவை” என்று தெரிவித்துள்ளார்.