சல்மான் கான், அஜித், கோப்புப் படம்
பாலிவுட் செய்திகள்

‘KisiKa Bhai KisiKi Jaan’.. ‘வீரம்’ படத்தின் இந்தி ரீமேக் வசூல் எப்படி? அஜித்தை விஞ்சினாரா சல்மான்?

சல்மான் கானின் ‘Kisi Ka Bhai Kisi Ki Jaan’ படம், இந்தியில் பார்வையாளர்களின் பொறுமையை சோதிப்பதாகவே விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சங்கீதா

கடந்த 2014-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு, சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வீரம்’. அண்ணன் - தம்பிகள் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், தமன்னா, சந்தானம், விதார்த், பாலா, நாசர், அதுல் குல்கர்னி, அவினாஷ், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

அஜித், விஜய்

விஜய்யின் ‘ஜில்லா’ படத்துடன் வெளியாகியிருந்த ‘வீரம்’ படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனையடுத்து தெலுங்கில் கடந்த 2017-ம் ஆண்டு ‘கட்டமராயுடு’ என்றப் பெயரிலும், கடந்த 2019-ம் ஆண்டு கன்னடத்தில் ‘Odeya’ என்றப் பெயரிலும் வெளியானது.

இதனைத் தொடர்ந்து இந்தியில் சல்மான்கான், பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்ட ‘வீரம்’ திரைப்படம், ‘Kisi Ka Bhai Kisi Ki Jaan’ என்றப் பெயரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் ‘Kisi Ka Bhai Kisi Ki Jaan’ படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தமிழில் எமோஷனலுடன் எடுக்கப்பட்ட நிலையில், இந்தியில் பார்வையாளர்களின் பொறுமையை சோதிப்பதாகவே விமர்சனங்கள் எழுந்தன.

இதனால் முதல் நாளில் 15.81 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து, சல்மான்கான் படங்களின் முதல்நாள் வசூலில் மோசமான சாதனைப் படைத்தது ‘Kisi Ka Bhai Kisi Ki Jaan’ திரைப்படம். எனினும், சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை நாட்களில் பார்வையாளர்களை இந்தப் படம் ஈர்த்த நிலையில், 3 நாட்களில் உலக அளவில் 110 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

இந்தியாவில் மட்டும் 3 நாட்களில் 68 கோடி ரூபாய் இந்தப் படம் வசூலித்துள்ளது. ‘Kisi Ka Bhai Kisi Ki Jaan’ படத்தை சல்மான் கான் தனது பேனரின் கீழ் தயாரித்திருந்தார். ரவி பசுரூர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஃபர்காத் சம்ஜி இயக்கியுள்ளார். ஜீ ஸ்டூடியோஸ் வெளியிட்டு இருந்தது. அண்மையில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்’ திரைப்படம் முதல் நாள் வசூலே 57 கோடி ரூபாய என இருந்த நிலையில், ‘Kisi Ka Bhai Kisi Ki Jaan’ 15 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பதான், கிஸி கா கிஸி கி பாய்ஜான், போலா

மேலும் லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ திரைப்படம், இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் ‘போலா’ என்றப் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், அந்தப் படம் முதல் நாளில் 11.2 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருந்தது. ஆனால், அதனைக் காட்டிலும் ‘வீரம்’ இந்தி ரீமேக் சற்று கூடுதலாக வசூலித்துள்ளது. தென்னிந்தியாவில் வசூலில் சக்கைப்போடு போடும் திரைப்படங்கள், இந்தியில் ரீமேக் செய்யப்படும்போது சில மாற்றங்கள் செய்யப்படுவதால், ரசிகர்களை பெரிதாக கவர்வதில்லை என்ற கருத்து நிலவுகிறது.