adipurush-RRR-KGF 2 Twitter
பாலிவுட் செய்திகள்

முதல்நாள் வசூலில் ‘ஆர்ஆர்ஆர்’, ‘கேஜிஎஃப்’ படங்களை முறியடிக்காத ‘ஆதிபுருஷ்’ -2 நாட்கள் வசூல் எவ்வளவு?

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களில் 5 கோடி ரூபாய் அளவிலேயே வசூலித்துள்ளது ‘ஆதிபுருஷ்’.

சங்கீதா

வால்மீகி எழுதிய ராமாயணம் கதையை அடிப்படையாகக் கொண்டு, 500 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. பிரபாஸ், சயீஃப் அலிகான், கீர்த்தி சனோன், சன்னி சிங் உள்ளிட்ட பலரின் நடிப்பில் தயாராகியுள்ள இந்தப் படத்தை பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் கடந்த 16-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்தப் படம் 2 நாட்களில் 240 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியான முதல் நாளில் 140 கோடி ரூபாயும், சனிக்கிழமையான நேற்று 100 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. எனினும், ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ மற்றும் ‘பாகுபலி 2’, பிரசாந்த் நீல்-யஷ் கூட்டணியில் உருவான ‘கே.ஜி.எஃப்’ படங்களின் முதல் நாள் வசூலை ‘ஆதிபுருஷ்’ படம் முறியடிக்கவில்லை.

என்னதான் தென்னிந்தியாவில் முன்னணி நடிகரான பிரபாஸ் நடித்திருந்தாலும், எதிர்பார்த்த வசூலைப் பெறாமல் கலவையான விமர்சனங்களையே இப்படம் பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இரண்டு நாட்களில் 5 கோடி ரூபாய் அளவிலேயே வசூலித்துள்ளது.

உலகம் முழுவதும் எட்டாயிரம் திரையரங்கு காட்சிகளில் வெளியானது ‘ஆதிபுருஷ்’ படம்.

ராஜமௌலியின் இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்.’ மற்றும் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘பாகுபலி-2’ ஆகியப் படங்களும், பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘கே.ஜி.எஃப்-2’ உள்ளிட்ட படங்களே இந்தியாவிலிருந்து வெளியாகி உலகம் முழுவதும் முதல் நாள் வசூலில் டாப்பில் உள்ளன. அந்த வகையில்,

1. ஆர்.ஆர்.ஆர். - ரூ.222 கோடி (தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, தமிழ்)

2. பாகுபலி 2 - ரூ.214 கோடி (தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, தமிழ்)

3. கே.ஜி.எஃப். 2 - ரூ.164 கோடி (தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, தமிழ்)

4. ஆதிபுருஷ் - ரூ.140 கோடி (தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, தமிழ்)

5. சாஹோ - ரூ.126 கோடி (தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, தமிழ்)