ஆதிபுருஷ் PT
பாலிவுட் செய்திகள்

ஆதிபுருஷ் - பேருக்குக்கூட ராமாயணம் படிச்சிருக்க மாட்டாங்க போலயே..!

அனைவருக்கும் தெரிந்த ஒரு இதிகாசத்தில், தவறுகள் செய்தாலோ கதையில் மாற்றத்தைக்கொண்டு வந்தாலோ அது அனைவரின் மனதிலும் அதிருப்தியை ஏற்படுத்திவிடும். அதுதான் இத்திரைப்படத்திலும் நடந்துள்ளது.

Jayashree A

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் வெளிவந்த "ஆதிபுருஷ்" திரைப்படமானது 3D தொழில்நுட்பத்தில் பல மொழிகளில் ஜூன் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இதிகாசமான ராமாயணத்தை மையப்படுத்தி எடுத்த திரைப்படம் என்ற போதிலும் அதில் பல காட்சிகள் இதிகாசத்திலிருந்து வேறுபட்டு தனித்து காட்டப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு, சீதையை இராவணன் புஷ்பக விமானத்தில் தான் தூக்கிச்செல்வதாக இதிகாசத்தில் சொல்லப்பட்டு இருக்கும். ஆனால் ஆதிபுருஷ் படத்திலோ இராவணன் டிராகன் போன்ற ஒரு விலங்கின் மீது சீதையை தூக்கிச்செல்வது போல் தவறாக சித்தரித்து காட்டியிருப்பது முற்றிலும் தவறு. அதுசரி, இதில் டிராகன் இருக்க ஏன் இராவணன் சீதையை தூக்கிச்செல்ல வரவேண்டும்? அதுவே சீதையை சுருட்டி தூக்கி சென்றுவிமே...

Adipurush movie dragon

அதே போல் இதிகாசத்தில் ஜடாயுவானது சீதை கடத்தப்படுகிறாள் என்று தெரிந்ததும், தான் பறந்து சென்று இராவணனுடன் போராடி சீதையை மீட்க நினைக்கும். ஆனால் கோபம் கொண்ட இராவணன் தனது வாளால் ஜடாயூவின் இறக்கையை வெட்டி விடுவான். ஒரு இறக்கையுடன் பறக்க முடியாத ஜடாயூ தரையில் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும். இது தான் புராணம் சொல்லும் கதை.

ஆனால் ஆதி புருஷ் படத்தில், சீதையை கடத்தி செல்லும் டிராகனை ஜடாயூ பின் தொடர்ந்து செல்லும். அப்போது சிறு சிறு டிராகன்கள் வெவ்வேறு திசைகளில் இருந்து வெளிவந்து ஜடாயூவை பிடித்து வைத்துக்கொள்ளும். பின் இராவணன் வந்து வெட்டுவது என அந்தக் காட்சியை நகைப்புக்குரியதாய் மாற்றிவிட்டார்கள்.

இதிகாசத்தின் படி இராவணன் சீதையை கடத்தி கொண்டு சென்ற செய்தியானது ராமர், லெட்சுமணன் இருவருக்கும் தெரியாது. ஆனால் சீதைக்கு ஏதோ ஒன்று நடந்துள்ளது அவள் ஆபத்தில் இருக்கிறாள் என்பதை அறிந்துகொண்டு அவளை தேடிக்கொண்டு இருவரும் செல்கிறார்கள்.

அச்சமயம் கீழே உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஜடாயூ, ராமரை அழைத்து, “அது தங்களின் மனைவியா?... யாரோ ஒரு பெண்னை இராவணன் அவளின் அனுமதியில்லாமல் தூக்கிச்செல்வதை அறிந்து அவளைக்காப்பாற்ற அவனுடன் போராடினேன். ஆனால் அவனின் வாளால் வெட்டுப்பட்டு கீழே விழுந்தேன்” என்று கூறும்.

ஆதிபுருஷ்

அப்பொழுது ராமர் ஜடாயூவிடம் சீதையை தூக்கிச் சென்றவன் யார்? அவன் எங்கிருக்கிறான்?” என்று கேட்ட சமயம், ஜடாயூ ராமரிடம் இராவணனை பற்றியும் அவன் இருப்பிடம் பற்றியும் அவன் சீதையை தூக்கிச் சென்ற திசையைப் பற்றியும் கூறும். அதன் பின் தான் ராமரும் லெட்சுமணனும் சீதையை தேடி தெந்திசை நோக்கி பிரயாணம் மேற்கொள்வார்கள் இது தான் கதை.

ஆனால் படத்தில் இராவணன், ராம, லெஷ்மணன் கண் முன்னே சீதையை தூக்கிச் செல்வது முற்றிலும் தவறாக மற்றும் திரித்துக்கூறப்பட்ட விஷயமாக உள்ளது.

இராவணன் கதாபாத்திரம், பத்து தலைகளை வைத்துக்கொண்டு ஜானகியிடம் பேசும் காட்சியை எப்படி நினைத்து எடுத்தார்களோ தெரியவில்லை. ஆனால் பார்க்கும் நமக்கு அந்நியன் விக்ரம் தான் நினைவுக்கு வருகிறார்! இராவணனுக்கு ஹேர் ஸ்டைலில் பூரான் விட்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஹேர் கலரிங், கர்லிங் எல்லாம் செய்து மாடர்ன் டே கெட்டப்பில் வருகிறார் இராவணணின் மகாராணி.

ஆதிபுருஷ் படத்தில் இராவணன் கதாபாத்திரம்

ஒரு இதிகாசத்தை கதையாக மாற்றும் பொழுது அதில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். ஏனெனில் அனைவருக்கும் இதிகாசமானது தெரிந்திருக்கும். அப்படியான ஒன்றில் தவறுகள் செய்தாலோ கதையில் மாற்றத்தைக்கொண்டு வந்தாலோ அது அனைவரின் மனதிலும் அதிருப்தியை ஏற்படுத்திவிடும். அதுதான் இத்திரைப்படத்திலும் நடந்துள்ளது. இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தை எதிர்த்து இந்துசேனா அமைப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருக்கிறது.

ஓம் ராவத்திற்கு ஒரு செய்தி: திரையரங்குகளில் ஒரு இருக்கை மட்டும் காலி இல்லை. பல இருக்கைகள் காலியாக தான் இருக்கிறது. ஆகவே அனுமன் எந்த இருக்கைகளிலும் அமர்ந்து இப்படத்தை பார்க்கலாம். அதேபோல் படம் பார்த்து திரும்பி வருபவர்களின் காதில் மல்லிகைப்பூ இருப்பதை மானசீகமாக பார்க்கலாம்