சினிமா

சுவாரஸ்யமான ஐடியா மட்டுமே போதுமா நல்ல சினிமாவுக்கு? - `வசந்த முல்லை’ எப்படியிருக்கு?

சுவாரஸ்யமான ஐடியா மட்டுமே போதுமா நல்ல சினிமாவுக்கு? - `வசந்த முல்லை’ எப்படியிருக்கு?

PT

மன அழுத்தம் நம்மை எந்த எல்லைக்குக் கொண்டு செல்லும் என்பதைச் சொல்கிறது இந்த ‘வசந்த முல்லை’.

IT வேலையில் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார் பாபி சிம்ஹா. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல், தூங்கி எழுந்தால் அலுவலகம் என இருக்கும் சிம்ஹாவிற்கு ப்ராஜெக்ட்டை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்பது மட்டுமே மனதில் இருக்கிறது. ஒரு கட்டத்தில் எல்லாம் கை மீறிப்போக, கடும் விளைவுகளுக்கு ஆளாகிறார். தொடர்ச்சியாக அவருக்கு எல்லாம் இருண்மையாகி blackout ஆகிவிடுகிறார். மன அழுத்தத்திலிருந்து விடுபட, துணையுடன் நிம்மதியாய் டூர் செல்ல முடிவெடுக்கும் பாபி சிம்ஹா, வழக்கம் போல மலை உச்சிக்குப் பிளான் செய்கிறார். அங்கும் சிக்கல் தொடர்கிறது. அது என்ன சிக்கல், அதிலிருந்து பாபி சிம்ஹா எப்படி மீண்டார் என்பதுதான் ‘வசந்த முல்லை’யின் மீதிக் கதை.

சில ஆண்டுகளுக்குப் பிறகு பாபி சிம்ஹாவிற்கு நல்லதொரு வேடம். என்ன ஒன்று... இன்னும் ரஜினி மாடுலேசனில் அவர் நடிப்பதைத்தான் நிறுத்துவதாய் இல்லை! எமோஷனல் காட்சிகளிலும் ஓக்கேவாக நடித்திருக்கிறார் காஷ்மீரா பர்தேசி. சின்னதொரு கேமியோவில் வருகிறார் ஆர்யா.

நூறு நிமிட படத்தில் கதையின் மையக்கருவுக்குச் செல்ல பல நிமிடங்களை எடுத்துக்கொள்கிறார் அறிமுக இயக்குநர் ரமணா புருஷோத்தமன். லூப் கான்செப்டுக்குள் நுழைந்ததும் படம் வேகெமெடுக்கத் தொடங்குகிறது. படத்தின் டிரெய்லர் வெளியானது முதல், இது எந்த படத்தின் தழுவலாக இருக்கும் என நம்மை யோசிக்க வைத்து, அப்படியெல்லாம் இல்லை சுயமாக யோசித்ததுதான் என்பதையும் ஓரளவு நம்பும்படி இயக்கியிருக்கிறார்.

பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும், பின்னணி இசையை சிறப்பாகவே கொடுத்திருக்கிறார் ‘பிரேமம்’ புகழ் ராஜேஷ் முருகேசன். ஸ்டன்னர் சாம், ஸ்டன்ட் சில்வா கூட்டணியில் சண்டைக் காட்சிகள் சிறப்பாகவே எடுக்கப்பட்டிருக்கின்றன. வாழ்க்கை என்பதே ஒரு பெரிய லூப் என்பதை நினைவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்ட முதல் பாடல் காட்சி அருமை.

படத்தில் `அட இந்தப் போர்ஷன் செமயா இருக்குல்ல’ என நாம் கிளாப் தட்ட ஆரம்பிப்பதற்குள் முடிந்துவிடுகிறது லூப் போர்ஷன். `ஏரோ’ மாதிரியான டிசி தொடர்களில் இத்தகைய காட்சி அமைப்புகளைப் பார்த்திருந்தாலும், தமிழுக்கு நல்லதொரு புதுவரவு. ஆனால், அதை இன்னும் கொஞ்சம் எக்ஸ்ப்ளோர் செய்ய எல்லா வாய்ப்புகள் இருந்தும் அதைச் சட்டென முடித்துவிட்டார்கள்.

சுவாரஸ்யமான ஐடியா மட்டுமே நல்ல சினிமாவாக மாறிவிடாது என்பதற்கு ‘வசந்த முல்லை’யும் உதாரணமாக மாறியிருக்கிறது.