பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ள கன்னட படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த 32 வயதான கே.எஸ். விஸ்வாஸ் இரு கைகளை இழந்தநிலையிலும், பாரா நீச்சல் போட்டியில் ஏராளமான பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகிறார். இவர் 10 வயதாக இருக்கும்போது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மின்விபத்தில் இவரது தந்தை உயிரிழந்தநிலையில், விஸ்வாஸ் கைகளை இழந்து கோமாவிற்கு சென்று பின்னர் குணமடைந்தார். எனினும், தன்னம்பிக்கை இழக்கமால் குங்ஃபூ, நடனம், பாரா நீச்சல் என பல்வேறு துறைகளில் சாதனை புரிந்துகொண்டு தன்னம்பிக்கையுடன், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல கன்னட திரையுலக இயக்குநர் ராஜ்குமார், விஸ்வாஸின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘அரபி’ (‘Arabbie’) என்ற படத்தை இயக்கி வருகிறார். ஸ்ரீவிஜய ராகவேந்திரா புரடொக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கான அறிவிப்பு கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக்கப்பட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தில் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்றுக்கொண்டு, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், கர்நாடக சிங்கம் என்று அழைக்கப்பட்டவருமான, தற்போதைய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, விஸ்வாஸின் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார். கடந்த 27-ம் தேதி இந்தப் படத்தின் டீசர் வெளியாக இருந்தநிலையில், தொழில்நுட்ப கோளாறால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.