தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் தவிர்க்க முடியாதவர் நடிகர் வடிவேலு. ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கான தாக்கத்தையும் கொடுத்து இருப்பவர் வடிவேலு. வெறும் நகைச்சுவை என மட்டும் ஒதுக்கிவிட முடியாத படி தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராகவும் வரலாற்றின் பக்கங்களில் இடம்பிடிக்கும் வடிவேலு இன்று தனது 62வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
ஒரு நடிகராக `என் தங்கை கல்யாணி’ படம் மூலம் சிறிய பாத்திரத்தில் தன் பயணத்தைத் துவங்கியவர். என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன், காதலர் தேசம் என தொன்னூறுகளின் இறுதியில் கவனிக்கப்படும் முகமாக மாறினார்.
அதற்குப் பின்னால் அவரது வளர்ச்சி என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றில்லை. அவர் நடித்த அத்தனை படங்களிலும் அவருடைய காமெடு என்பது தற்போதும் மறக்க இயலாத அளவுக்கு சூப்பர் ஹிட் ஆனவை. சில நேரம் பெயர் தெரியாத படங்களில் கூட அவரின் நகைச்சுவை மட்டும் நினைவில் இருக்கும் ஒன்றாக மாறியது. சில நேரங்களில் பல பிரபலமான நடிகர்களின் படம் கூட வடிவேலுவின் இந்த காமெடி வருமே அந்த படமா என நினைக்க வைக்கும் அளவிற்கு அத்தகைய அசுரத்தனமான திறமையைப் பெற்றிருந்தார் வடிவேலு.
தனியாக நடிப்பது மட்டுமல்லாமல், ஹீரோக்களுடன் அவர் இணைந்து வரும் நகைச்சுவைகளுக்கும் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. விஜயகாந்த், சத்யராஜ், பார்த்திபன், அர்ஜூன் என பல ஹீரோக்களுடன் இவர் இணைந்து நடிக்கும் படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கும். வடிவேலு இருந்தால் காமெடியில் தன்னை ஓவர் டேக் செய்வார் என பயந்த ஹீரோக்களும் உண்டு, அவரது கால்ஷீட் கிடைக்கும் வரை காத்திருந்த ஹீரோக்களும் உண்டு.
நடிகராக மட்டுமில்லாமல் ஒரு பாடகராகவும் மக்கள் மனங்களை வென்றவர் வடிவேலு. எட்டணா இருந்தா, போடா போடா புண்ணாக்கு, யானை யானை, ஓர் ஒண்ணு, கண்ண மேய விட்டியா என அவரின் பாடல்கள் அனைத்தும் கிராமிய பதத்துடனும், யாராலும் எளிதில் பாடக்கூடிய விதத்திலும் மக்களுக்கு நெருக்கமான ஒன்றாக இருக்கும்.
திரையில் அவர் செய்யாத சாதனைகள் இல்லை. எந்த காமெடி சேனலும், இவரின் காமெடி இல்லாமல் தங்கள் முழு நாள் நிகழ்ச்சியை செய்ய முடியாது. இந்த இணைய உலகிலும், அவரின் ஒரு மீம் டெம்ப்ளேட், அவரின் நகைச்சுவை வசனம் இல்லாமல் ஒரு தினத்தைக் கடப்பது என்பது முடியாத காரியம். இருந்தாலும் அவரின் தனிப்பட்ட சில பிரச்சனைகளால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார்.
ஆனால் இப்போது ”நாயகன் மீண்டும் வரார்” எனப் பாடல் ஒலிக்க, தொடர்ச்சியாக நடித்து கம்பேக் கொடுக்க இருக்கிறார். சுராஜ் இயக்கத்தில் `நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் ஹீரோவாக நடித்து முடித்திருக்கிறார். இதில்லாமல் `சந்திரமுகி 2’ படத்தில் ராகவா லாரன்ஸுக்கு இணையான ஒரு வேடத்திலும், உதயநிதியின் `மாமன்னன்’ படத்தில் டைட்டில் ரோலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
வடிவேலுவின் பிறந்தநாளான இன்று, அவர் இன்னும் நிறைய படங்கள் நடித்து, நம்மை எப்போதும் மகிழ்விக்க வேண்டும் என வாழ்த்துவோம்.!
-ஜான்சன்