பவா செல்லதுரை Bavachelladurai Bava | facebook
பிக்பாஸ்

பிக்பாஸ் 7: “நெஞ்சு வலிக்குது; ஒருநாள் கூட இனி இங்கிருக்க முடியாது” - தானாக வெளியேறினார் பவா

பிடிக்காத மற்றும் மரியாதை குறைவான இடத்தில் ஒரு நிமிடம் இருப்பதென்பதுகூட மிக்கொடுமையான நிலைமை.

Jayashree A

பவா செல்லதுரை - இவரை பற்றி நாம் ஏற்கெனவே நிறைய பார்த்து இருக்கிறோம். இலக்கியவாதியான இவர், தனது நல்ல கருத்துக்கள் உலகத்தில் உள்ள அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என நினைத்து பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.

அங்கிருக்கும் போட்டியாளர்களில் பவா செல்லதுரைதான் வயதில் மூத்தவர். பிக்பாஸ் என்றாலே சண்டைக்கும் சச்சரவுகளுக்கும் பஞ்சம் இருக்காது. இதில் ஒருவரை மிதித்துதான் அடுத்தவர் வெற்றிபெற முடியும். இதெல்லாம் பவாவுக்கும் தெரியும். இருப்பினும் ‘தான் வயதில் மூத்தவர் என்பதால் தனது சொல்லை அனைவரும் கேட்பர். ஆதலால் அவர்களுக்கு நல்ல கதையை கூறலாம், அதன் மூலம் உலக மக்களும் பயனடைவார்கள்’ என்று நினைத்து பிக்பாஸ் வீட்டிற்கு சென்றார் பவா. ஆனால் அதுவே அவருக்கு எதிர்மறையாக்கி விட்டது.

ஆம்.. விசித்திரா, ஜோவிகாவின் பிரச்னையில் அவரால் கூட எது நல்லது என்ற முடிவை எட்டமுடியவில்லை. படிப்பு முக்கியமில்லை என்ற வாதத்திற்கே அவர் வந்துவிட்டார். பூவாய் நுழைந்து நார்களை மணக்க செய்யலாம் என்று நினைத்தவருக்கு, நார்களோடு சேர்ந்து பூ தனது வாசத்தை இழந்துபோகும் நிலை ஏற்பட்டது. இதை அவரே நேற்று நடந்த நிகழ்சியில் உணர்ந்திருப்பார்.

கமல்ஹாசன் பவாவின் கதையை மற்றவர்கள் எவ்வாறு தவறாக நினைத்துக்கொண்டிருந்தனர், அதற்கு சரியான விளக்கம் என்ன என்பதை விவரித்து கூறும் பொழுது, ‘ஓஹோ... இதற்கு இப்படி ஒரு அர்த்தமா?’ என்று நினைக்க தோன்றியது. அதே போல் பவா செய்த தவறையும் கமல்ஹாசன் சுட்டிக்காட்டவும் தவறவில்லை. “பொது இடங்களில் எச்சில் துப்புவது தவறான பழக்கம். அதை சக மனிதர்களுக்காக மாற்றிக்கொள்ளலாமே...” என்று கமல் பவாவிடம் கூறியது, அதற்கு ஓர் சாடி.

இது இப்படி இருக்கையில், அடுத்ததாக யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்கையில் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் பவாவை சொன்னதும், அவரின் நிலைமை நமக்கும், ஏன் அவருக்குமேகூட நன்கு புரிந்தது. மற்ற போட்டியாளர்கள், “அவருக்கு வயதாகிவிட்டது, அவரால் மற்ற போட்டியாளர்களைப்போல் சுறுசுறுப்பாக இயங்க முடியவில்லை. அடிக்கடி காபி, டீ கேட்கிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லை. அவரால் எங்களுடன் சேர்ந்து டாஸ்க்கை விளையாட முடியாது” போன்ற பல குற்றச்சாட்டுகளை அவர்முன் வைத்தனர்.

இதை பார்க்கும் பொழுது நமக்கே பவாவின் நிலைமை பரிதாபமாக இருந்தது. பிடிக்காத அல்லது மரியாதை குறைவான இடத்தில் ஒரு நிமிடம் இருப்பது என்பதுகூட மிகக்கொடுமையான நிலைமை. அதனால் அதிலிருந்து வெளியேற நினைத்த பவா, இன்று கன்சக்‌ஷ்ன் ரூமிற்கு சென்று பிக்பாஸிடம், “நான் என்ன நினைத்து வந்தேன் என்றால், ‘இதுவரையில் ஒரே மாதிரியான வாழ்க்கையில் இருந்தோம். இது கம்பளீட்டா வேற. 20 பேருடன் புதிய வாழ்க்கையை வாழலாம்’ என்று நினைத்துதான் இங்கு வந்தேன். ஆனா இங்க ஒவ்வொரு நாளும் டாஸ்க் இருக்கு, மனித மனதுக்குள் பயங்கரமான குரூரம் இருக்கு. அது ஒவ்வொருத்தர்கிட்ட இருந்தும் வெளிப்படுது. அது வெளிப்படும்தான். தப்பில்லை. எனக்கு கூட வெளிப்படும் என்றுதான் நான் வந்தேன். ஆனா இங்க ஒவ்வொரு நிமிடமும், இவங்க அவங்களை குத்துவது, ஒருத்தர் இன்னொருத்தரை கீழ்மை படுத்துவது... இதெல்லாம் நடக்குது. என் வாழ்க்கையில் இப்படி நான் இருந்ததில்லை.. நான் மனித மனசின் மேன்மைகளை மட்டுமே பார்த்து வளர்ந்தவன். எனக்கு இங்க பயங்கர டிஸ்டர்ப் மூடாகிவிட்டது” என்றார்.

அதற்கு பதிலளித்த பிக்பாஸ், ”இங்க கூல் சுரேஷ், ப்ரதீப், விஷ்ணுவை நம்பி நீங்கள் இல்லை. என்னை நம்பி மீண்டும் வீட்டுக்குள் போங்க..” என்றார்

“இல்லை. எனக்கு உடனே செல்லவேண்டும் என்ற மனநிலை மட்டும்தான் உள்ளது. வேற எதுவும் கிடையாது. என்னால இருக்கவே முடியலை. ப்ளீஸ்...” என்றார் பவா.

“சரி பவா... உங்கள் உடல் நிலை, மனநிலை ரெண்டையும் கருத்தில் கொண்டு, உங்களை இந்த வீட்டை விட்டு வெளியில் அனுப்புறேன். நிச்சயமா நீங்க இந்த நிகழ்ச்சியில பெரிய அளவில் பங்கு கொடுத்திருக்க முடியும்” என்ற பிக்பாஸ் அவரை வெளியில் அனுப்ப சம்மதித்தார்.

இன்னும் யார் யார் வெளியேறப்போகிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.