விஜய் டிவியில் இதுவரை 7 சீசன்களை முடித்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி, அடுத்ததாக எட்டாவது சீசனை நோக்கி நகர்ந்து வருகிறது. இதற்காக கமல் தயாராகி வருகிறார் என்ற செய்தி கடந்த சில வாரங்களாக வலைதளங்களில் பரவலாக இருந்த நிலையில், பிக்பாஸ் பயணத்திலிருந்து தான் விலகுவதாக தனது சமூக வலைதள பக்கங்களில் கமல் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய என் பயணத்தில் இருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். சினிமா பணிகள் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னால் தொடர இயலாது.
உங்கள் இல்லங்களில் வந்து உங்களை சந்திக்கும் பாக்கியம் எனக்கு இந்நிகழ்ச்சியால் கிடைத்தது. உங்கள் அன்பையும் பாசத்தையும் நீங்கள் எனக்கு பொழிந்திருக்கிறீர்கள்.
பிக்பாஸ் மேடை மூலம், நான் எனது கற்றலை நேர்மையாக உங்களோடு பகிர்ந்து கொண்டேன். எனக்கு இம்மேடை மூலம் கிடைத்த கற்றலுக்கு என்றென்றும் நன்றியோடு இருப்பேன். உங்கள் ஒவ்வொருவருக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
இத்துடன் விஜய் டிவியின் அற்புதமான குழுவிற்கும், இந்த நிகழ்ச்சியை ஒரு பெரிய வெற்றியாக மாற்றுவதில் ஈடுபட்டிருந்த ஒவ்வொரு குழு உறுப்பினர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வரும் சீசன் மற்றொரு வெற்றியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்”
என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து நடைபெற இருக்கும் பிக்பாஸ் சீசன் 8-ஐ நடத்த இருக்கும் பிரபலம் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு பிக்பாஸ் ரசிகர்களின் மனதிலும் எழுந்துள்ளது.
கடந்த 7 சீசன்களை பொறுத்தவரை, கமல் பங்கு பெறாத சில பிக்பாஸ் எபிசோட்களை நடிகர் சிம்புவும், நடிகை ரம்யா கிருஷ்ணனும் நடத்தியிருந்தனர். அதைக் குறிப்பிட்டு மீண்டும் அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமென கூறப்படுகிறது. எதுவாகினும், பொருத்திருந்து பார்க்கலாம்.
முன்னதாக கடந்த பிக்பாஸ் சீசன் 7ல் பிரதீப் வெளியேற்றப்பட்டதிலிருந்தே கமல் பிக்பாஸ் ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்து வந்தார். இந்நிலையில் அடுத்த சீசனில் தான் தொடரப்போவதில்லை என கமல் தெரிவித்திருப்பது, பேசுபொருளாகியுள்ளது.