biggboss pt web
பிக்பாஸ்

BIGGBOSS Day 1: சிக்கலில் 6 பேர்.. பவா சொன்ன உணர்வுப்பூர்வ கதை.. முதல் நாளில் நடந்ததென்ன?

‘நான் ரெடியா வரவா…’ என்ற பாடலுடன் தொடங்கிய முதல் நாளில் போட்டியாளார்களின் நடனமாகட்டும், கேப்டன் விஜய்யை கூப்பிட்ட பிக்பாஸ், ‘ஒரு ரகசியம்’ எனக்கூறி சிண்டு முடித்துவிடும் வேலையாகட்டும்... ஆரம்பமே அதகளப்பட்டது.

Jayashree A

கேப்டன் விஜய்யை கூப்பிட்ட பிக்பாஸ், ‘ஒரு ரகசியம்’ எனக்கூற, அதென்ன ரகசியம் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. விஜயிடம், பிக்பாஸ் ‘உங்க மனதை குறைவாக கவர்ந்த ஆறுபேரை தேர்வு செய்யுங்கள்’ என சொன்னதும் ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது. பிக்பாஸின் சொல்லுக்கு தலையை ஆட்டிய கேப்டன், பிக்பாஸ் விரிக்கும் வலைக்கு மீன்களை கொத்தி போடும் கொக்காய் காத்திருந்தார். அந்த வலையில் விழுந்தவர்கள் பவா செல்லத்துரை, ஐஸ், அனன்யா, வினிஷா, ரவீனா, நிக்சன் ஆகிய 6 பேர்.

இந்த ஆறு பேரையும் பிக்பாஸ் மூட்டை முடிச்சுகளுடன் ரெடியாக இருக்குமாறு கூறவும், ஆறு பேரின் முகத்திலும் வருத்தம் அப்பட்டமாக தெரிந்தது. இருந்தாலும், வருத்தத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவர்கள் தங்களுக்கான துணிகளை பெட்டியில் அடிக்கிக்கொண்டு காத்திருக்க, அவர்களை வேறு ஒரு பாதை வழியாக ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பினார் பிக்பாஸ்.

“அப்பாடா…” என்று கொஞ்சம் மனம் ஆறுதல் அடைகிறது இந்த ஆறு பேர் கூட்டம். “அதற்குள் ஆசுவாசமானால் எப்படி? இனிமேல் தான் இருக்கு உங்களுக்கு டாஸ்க்...” என்பது போல பிக்பாஸ் இவர்களுக்கு பல சட்டங்களை இயற்றினார். அதன்படி இவர்கள் ஆறு பேரும் பிக்பாஸ் வீட்டிற்கு போகக்கூடாது; ஷாப்பிங் பண்ணக்கூடாது; டாஸ்க் கிடையாது; பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்கள் சொல்லும் மெனுவிற்கு சமைத்து தரவேண்டும்; குறிப்பாக பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்களின் அனுமதி இல்லாமல் ஒரு வெந்நீர்கூட வைக்கக்கூடாது. இப்படி பல கட்டளைகள்.

இதனிடையே பவா செல்லத்துரை ஒரு கருத்தை கூறினார். அதாவது ‘பெண்கள் நன்றாக சமைப்பார்கள் என்று சொல்லக்கூடாது.. ஏனெனில் அந்த பெருமை அவர்களை சமையற்கட்டுக்கு இழுத்துச் சென்றுவிடும்’ என்றார். லட்சக்கணக்கானோர் பார்க்கும் நிகழ்ச்சியில் இப்படிப்பட்ட கருத்துகளை தெரிவிப்பது வரவேற்பிற்குறியது.

சரி… சமையல் செய்வதற்கு பொருட்கள் வேண்டுமல்லவா, இதுதான் பிக்பாஸின் அடுத்த டாஸ்க். அதாவது பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள் அனைவரும் தனக்கு தேவையானவை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அந்தத் தொகை அவர்களின் கணக்கில் பற்று வைக்கப்படும். அவர்கள் டாஸ்க் வெற்றி பெற்று கடனை அடைக்கலாம் என்பதுதான் பிக்பாஸின் சட்டம். அதன்படி பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்கள் தங்களுக்கு தேவையான மளிகை சாமான்களை தங்களின் கணக்கில் வாங்கிக்கொண்டார்கள். ‘அடுத்தவர்கள்தானே சமைக்கிறார்கள்..’ என நினைத்து அனைவரும் தங்களுக்கு பிடித்த மெனு எழுதி தர, ஸ்மால் பாஸ் வீட்டிலிருப்பவர்கள் அவர்களுக்கும் சேர்த்து சமைத்து தந்தார்கள்.

இவர்கள் ஆறு பேரும் சமைக்க… அவர்கள் உட்காந்து சாப்பிட… இது பிக்பாஸுக்கு கண்ணை உறுத்தி இருக்க வேண்டும்!நிம்மதியாக இருக்க விடுவாரா அவர்? இந்த வார நாமினேட் தேர்வு செய்ய உத்தரவு பிறப்பித்து விட்டார். பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்கள், ஸ்மால் பாஸ் வீட்டிலிருப்பவரை தகுந்த காரணத்திற்காக நாமினினேட் செய்யவேண்டும்; அதேபோல் ஸ்மால் பாஸ் வீட்டிலிருப்பவர்கள் பிக்பாஸ் வீட்டிலிருப்பவரை நாமினேட் செய்யவேண்டும்.

தனக்கு போட்டியாக இருப்பவர்கள், பிடிக்காதவர்கள் என்று மனதில் வஞ்சத்தை வைத்துக்கொண்டு கூட இருக்கும் நண்பர்களையே நாமினேட்டாக அறிவித்தார்கள். அதன்படி இந்த வாரம், அதிக ஓட்டுகள் வாங்கி நாமினேட் லிஸ்டில் இடம் பெற்றவர்கள் பவா செல்லத்துரை, ஐஸு, அனன்யா, ரவீனா, யுகேந்திரன், பிரதீப், ஜோவிகா...!

பிறகு ஒன்றுமே நடக்காதமாதிரி அனைவரும் ஒன்றாக இணைந்து பாட்டு ஆட்டம், கும்மாளம் என்று களைகட்டியது. பிறகு இரவு தொடங்கும் சமயம் பவா செல்லத்துரை மற்றவர்களுக்கு ஒரு அறிவுரை வழங்கினார். அது மனதிற்கு மிகவும் டச்சிங்காக இருந்தது. என்ன இருந்தாலும் அவர் அனுபவசாலி என்பது அவரின் முதிர்ந்த பேச்சில் தெரிந்தது.

ஆதவன் சிறுகதை

அவர் படித்த ஆதவனின் “ஓட்டம்” என்ற கதையை அங்கிருப்பவர்களுக்கு சொன்னார். ஒரு பெண் தனது குழந்தைக்காக ஓடி சென்று சாப்பாடு கொடுக்கிறாள். அவளின் ஓட்டம் மற்றவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் அந்த ஓட்டம் அவளுக்கு பிடித்து இருக்கிறது. அதற்கு காரணம் என்ன என்பதை கூறினார் அவர்.

பவா செல்லத்துரையின் சொல்லாடல், வசீகர பேச்சு அங்கிருப்பவர்களை மட்டுமல்ல… நம்மையும் கட்டிப்போட வைத்தது. கதையை கேட்ட ப்ரதீப் கண்களில் தாரை தாரையாக கண்ணீர். இனி.. நாளை என்ன நடக்கும் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.!