தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக, இயக்குநர் பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்த் திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு இயக்குனர் விக்ரமன் தலைவராக இருந்து வருகிறார். இவரது பதவிகாலம் விரைவில் முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இயக்குனர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் இன்று நடந்தது. இதில் சங்கத்தின் அடுத்த தலைவராக பாரதிராஜாவை தேர்ந்தெடுக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவரை எதிர்த்து யாரும் போட்டியிடப் போவதில்லை என்பதால், அவர் ஒரு மனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப் படுகிறார். மற்ற பொறுப்பு களுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் ஆர்.கே.செல்வமணி, கே.பாக்யராஜ், விக்ரமன், பேரரசு உட்பட ஏராளமான இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
தலைவராகத் தேர்வானது பற்றி பாரதிராஜாவிடம் கேட்டபோது, ‘’எதையாவது சாதிக்க வேண்டும் என்று இயக்குனர் சங்க தலைவராக தேர்வாகி இருக்கிறேன். இதில் எனக்கு மகிழ்ச்சி. என் சிஷ்யன் கே.பாக்யராஜ், நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெற்றால் மகிழ்ச்சியடைவேன்’’ என்றார்.