சொகுசு கார் வரி ஏய்ப்பு புகாரில் பிரபல மலையாள நடிகர் பகத் ஃபாசில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அன்னாயும் ரசூலும், ஆமென், நார்த் 24 காதம், பெங்களுரு டேஸ், மகேஷின்ட பிரதிகாரம் போன்ற பிரபல திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளவர் நடிகர் பகத் பாசில். கேரள மாநில திரைப்பட விருதுகளை பெற்றுள்ள இவர், நடிப்பில் சில தினங்களுக்கு முன் தமிழில் வேலைக்காரன் என்ற திரைப்படமும் வெளியாகி உள்ளது. இந்நிலையில், சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்த புகாரில் கேரள காவல்துறை முன் பகத் பாசில் ஆஜரானார்.
சொகுசு கார் வாங்க கேரளாவில் கடன் வாங்கிய பகத் பாசில், 20 சதவிகித வரியை தவிர்க்க, அதனை போலி முகவரியில் புதுச்சேரியில் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் சுமார் 20 லட்சம் ரூபாய் அளவுக்கு அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்தப் புகாரில், கைதுசெய்யப்பட்ட பகத் பாசில், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 2 நபர் உத்தரவாதம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் உத்தரவாதத் தொகையுடன் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதேபோல, சொகுசு கார்வாங்கி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக நடிகரும் பாரதிய ஜனதா எம்பியுமான சுரேஷ் கோபி, நடிகை அமலா பால் ஆகியோர் மீது இதற்கு முன் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.