சினிமா

பீஸ்ட்' மற்றும் 'கே.ஜி.எஃப் 2' - தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் எவ்வளவு?

பீஸ்ட்' மற்றும் 'கே.ஜி.எஃப் 2' - தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் எவ்வளவு?

ஜா. ஜாக்சன் சிங்

விஜய், யஷ் ஆகிய இருபெரும் நடிகர்களின் திரைப்படங்களான பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அவை எவ்வளவு வசூல் செய்திருக்கின்றன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப்-2 திரைப்படத்திற்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த திரைப்படம் சுமார் 350 திரையரங்குகளில் வெளியானது. இதன் முதல் பாகம் தமிழகத்தில் பெரும் வெற்றியை பதிவு செய்ததால், இரண்டாம் பாகத்திற்கும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில், குறைந்த திரையரங்குகளில் மட்டுமே வெளியாகியதால், நள்ளிரவு ஒரு மணி மற்றும் 3 காட்சிகளாக கேஜிஎஃப் 2 திரையிடப்பட்டு வருகின்றன. அந்தக் காட்சிகளும் அரங்கம் நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக முதல் நாளில் கே.ஜி.எஃப்-2 திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 7 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக திரைத்துறையினர் கூறுகின்றனர்.

தமிழகம் தவிர கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் வட இந்தியா ஆகிய இடங்களிலும் கே.ஜி.எஃப்-2 திரைப்படம் வசூலில் பெரும் சாதனை படைத்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் 13-ம் தேதி வெளியானது. தமிழகத்தில் சுமார் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் இந்தப் படம் வெளியிடப்பட்டது. அதிலும், அதிகாலை 4 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை அடுத்தடுத்த காட்சிகள் திரையிடப்பட்டன.

இதன்மூலம், தமிழகத்தில் சுமார் 36 கோடியே 88 லட்சம் ரூபாயை அந்த திரைப்படம் வசூல் செய்திருப்பதாக கூறுகின்றனர். அதில் செங்கல்பட்டு விநியோகஸ்த பகுதியில் அதிகப்பட்சமாக 10 கோடியே 28 லட்சம் ரூபாயை பீஸ்ட் வசூல் செய்துள்ளது. இதுவரை விஜய் நடித்த படங்களிலேயே அதிகபட்சமாக‘சர்க்கார்’ திரைப்படம் தான் முதல் நாளில் 32 கோடியே 10 லட்சம் ரூபாய் வசூல் செய்தது. தற்போது அந்த சாதனையை ‘பீஸ்ட்’ முறியடித்துள்ளது.