இலங்கையில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் சுற்றுலா சென்றான். இலங்கையின் கண்டியில் முகாமிட்டிருந்தது அவர்களின் சுற்றுலாக் குழு. அப்பகுதியில் அந்த சமயம் ஆங்கிலப்பட ஷூட்டிங் ஒன்று நடந்து கொண்டிருந்தது. படப்பிடிப்பு தளத்தில் கருப்பு துணியால் மூடி வைக்கப்பட்டிருந்த ஒரு மெஷினைப் பார்த்து, அது என்னவென்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டான் அந்த சிறுவன். அதுதான் 'மோஷன் பிக்சர் கேமரா' என்று பாதர் லோரியோ சொன்னார். பிறகு அதனை தொட்டுப் பார்க்க நினைத்த சிறுவனின் ஆசை நிறைவேற்றப்பட்டது. படப்பிடிப்பில் பிஸியாக நின்று கொண்டிருந்த வெளிநாட்டு இயக்குநர் உரத்த குரலில் 'Rain' எனக் கத்தினார் மழை பெய்தது. திடுக்கிட்டான் சிறுவன். "இந்த வெள்ளைக்கார இயக்குனர் 'RAIN' என்று சொன்னால் மழை பெய்கிறது என்றால் இவர் எவ்வளவு பெரிய சக்தி உள்ளவர்" என வியந்து போனான் அந்த சிறுவன். தானும் வளர்ந்து ஒரு நாள் அப்படி ஒரு சக்திமிக்க ஆளாக ஆக வேண்டும் என ஆசைப்பட்ட அந்த இலங்கைச் சிறுவன்தான் பிற்காலத்தில் இந்திய சினிமாவை ஆட்சி செய்த பாலு மகேந்திரா. இன்று - மே 20 - பாலு மகேந்திராவின் பிறந்த தினம்.
இலங்கையில் மட்டக்களப்பு அருகில் உள்ள கிராமத்தில் 1939-ல் பிறந்தவர் பாலு மகேந்திரா. 1977-ல் வெளியானது 'கோகிலா' என்ற கன்னடப் படம். அதுவே பாலு மகேந்திராவின் முதல் படமும் கூட. அப்படம் பாலுமகேந்திராவுக்கு முதல் தேசிய விருதினை பெற்றுத் தந்தது. பிரதாப் போத்தன், ஷோபா நடிப்பில் பாலு மகேந்திரா இயக்கிய படம் 'அழியாத கோலங்கள்'. இயக்குனராக தமிழில் இதுவே பாலு மகேந்திராவின் முதல் படம். பருவ வயதில் காதலுக்கும் காமத்திற்கும் இடையில் தவிக்கும் வளரிளம் பருவச் சிறுவர்கள் பற்றிய படம். அப்போது வரை தமிழ் சினிமா சென்ற பாதையினை அப்படத்தின் மூலம் திசை மாற்றினார் பாலு மகேந்திரா.
சிறுவனாக இருந்தபோது முதன்முதலில் கேமராவை தொட்டுப் பார்த்த அனுபவத்தைப் பற்றி கூறும்போது 'என் வீட்டு வாழைமரத்தின் பின் அன்னலட்சுமியை தொட்டபோது உண்டான சிலிர்ப்பை கேமராவைத் தொட்டபோது உணர்ந்தேன்' என்றார் அவர். 'அழியாத கோலங்கள்' அப்படியான கதைக்களத்தை கொண்டதுதான். இப்போது கூட அப்படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தங்கள் வளரிளம் பருவகாலம் மனக் குகையில் நிழலாடுவதை தவிர்க்க முடியாது.
1980-ல் வெளியானது 'மூடுபனி'. ஷோபா, பிரதாப்போத்தன் தான் இப்படத்திலும் பாலுவின் தேர்வாக இருந்தது. இளையராஜாவும் பாலு மகேந்திராவும் இணைந்த முதல் படம் இதுதான். 'என் இனிய பொன்நிலாவே..' என்ற பாடல் இப்போதும் இரவு நேரங்களில் FM ரேடியோக்களில் ஒலிக்கிறது.
பாலு மகேந்திராவின் திரைவாழ்வில் என்றென்றும் நினைவுகூரத்தக்க ஒரு சினிமா என்றால் அது 'மூன்றாம் பிறை'. 1982-ல் வெளியான இப்படத்திற்காக கமல்ஹாசன் மற்றும் பாலு மகேந்திரா இருவரும் தேசிய விருதைப் பெற்றனர். இளையராஜாவின் இசையில் கண்ணதாசன் எழுதிய 'கண்ணே கலை மானே...' பாடல் ஐஸ்கிரீம் தலையில் ஜெர்ரிப் பழம் போல அமைந்தது மூன்றாம் பிறைக்கு. அதுவே கண்ணதாசன் எழுதிய கடைசி பாடலும் கூட.
தெலுங்கு படமான 'நிரீக்ஷனா', இந்தியில் 'சாத்மா', மலையாளத்தில் 'ஓமக்குயில்' போன்ற படங்கள் பாலு மகேந்திராவின் கலைவாழ்வில் இன்னும் முக்கியமானவை. இப்படங்களுக்கும் இளையராஜாதான் இசை. தொடர்ந்து கலைப் படங்கள் எடுத்துவந்த பாலு மகேந்திராவுக்கு கமர்ஷியல் படங்கள் எடுக்க வராது என்ற விமர்சனம் எழுந்தது. அதனை அவரும் பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை. என்றாலும் ஒரு கட்டத்தில் 'நீங்க என் கிட்ட இதத் தானே எதிர்பாக்குறீங்க. இந்தாங்க பிடிங்க' என்பது போல ஒரு சினிமாவை இயக்கினார். 1984-ல் வெளியான அப்படத்திற்கு 'நீங்கள் கேட்டவை' என்றே பெயரும் வைத்தார்.
தெலுங்கில் 'நிரீக்ஷனா' வெற்றி பெற்றதை அடுத்து அப்படம் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டது. 1985-ல் 'யாத்ரா' என்ற பெயரில் உருவான அப்படத்தில் மம்முட்டி ஷோபனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இரண்டு மனைவி கதைகளை கையாள்வதில் பாலு மகேந்திராவுக்கு நிகர் அவர்தான். ரெட்டைவால் குருவி மற்றும் சதிலீலாவதி ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
சினிமா பெரிய பொருட்செலவிலான கலை என்ற நம்பிக்கை இன்றளவும் உண்டு. ஆனால் பாலு மகேந்திரா பெரிய பெரிய லைட்டுகளை எல்லாம் நம்பாமல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மினிமல் லைட்களைக் கொண்டே சினிமாக்களை எடுத்தார். 'Available lights' எனப்படும் ஒரு சூழல் அப்போது கொடுக்கும் ஒளியை தன் கேமரா மூலம் கட்டுப்படுத்தி எளிமையாக சினிமா செய்தார் பாலுமகேந்திரா. அதனால்தான் அவரை 'God Light Cinematographer'என்றனர்.
'ரெட்டைவால் குருவி' படத்தில் மருத்துவமனையின் வெளிப்புறக் காட்சிக்கு அவர் பெரிதும் மெனக்கெடவில்லை. தற்போதிருக்கும் பிரசாத் ஸ்டுடியோ வாசலில் ஒரு பெயர் பலகையை வைத்து மருத்துவமனையாக காட்டினார். 'சதிலீலாவதி' படத்தில் அதிகமான காட்சிகள் இண்டோரில் படமாக்கப்பட்டிருக்கும். அதிலும் கூட குறைந்த அளவிலான லைட்டுகளைக் கொண்டு தெர்மகோல் உதவியுடன் அழகான ப்ரேம்களை செதுக்கினார் அவர். அவருடைய 'வீடு', 'சந்தியா ராகம்' ஆகிய படங்களை நன்கு கவனித்தால் புரியும். சில காட்சிகளில் வெளி வராண்டாவில் ஒரு வெள்ளை வேட்டியினை காயப்போட்டிருப்பார்கள். உண்மையில் அது வெறும் செட் ப்ராபர்ட்டி கிடையாது. வெள்ளை வேட்டி மூலம் வெளிச்சத்தை தேவையான அளவு பவுண்ட்ஸ் செய்யும் வித்தையினை பாலு மகேந்திரா செய்திருப்பார். இப்படியான காரணங்களால் தான் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சினிமாவாக மாறிப் போனது 'வீடு'. சிறந்த படத்திற்கான தேசிய விருதும் இப்படத்திற்கு கிடைத்தது. வெகுகாலமாகவே தூர்தர்ஷனின் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் மொழியிலிருந்து 'வீடு' மட்டுமே ஒளிபரப்பாகி வந்தது.
அவர் கருவியை விடவும் கதைகளை பெரிதும் நம்பினார். அதனால் தான் 'ஒரு படைப்பாளியிடம் எந்த கேமரா யூஸ் பண்றீங்க...? என கேட்காதீர்கள். மெஷின் கதை சொல்லாது. ஓர் எழுத்தாளனிடம் சென்று என்ன பேப்பர், என்ன பேனா யூஸ் பண்றீங்க என கேட்பீர்களா...?' என்றார்.
பாலு மகேந்திராவின் படத்தில் கேமராவுக்கு அடுத்து அதிக முக்கியத்துவம் உள்ள ஒரு கதாபாத்திரம் உண்டென்றால் அது 'சொக்கலிங்க பாகவதர்'தான். 'வீடு', 'சந்தியாராகம்' தொட்டு 'சதிலீலாவதி' வரை 'சொக்கலிங்க பாகவதர்' பாலுவின் படங்களில் நடித்து வந்தார்.
1988-ல் வெளியான 'வீடு'., 1989-ல் வெளியான 'சந்தியாராகம்' மற்றும் 1992-ல் வெளியான 'வண்ண வண்ண பூக்கள்' என தொடர்ந்து மூன்று படங்களுக்கு தேசிய விருதினைப் பெற்றார் பாலு மகேந்திரா. 'சந்தியாராகம்' தவிர பாலுமகேந்திராவின் அனைத்து படங்களுக்கும் இசையமைத்துக் கொடுத்தவர் இளையராஜா. சந்தியாராகத்திற்கு இசையமைத்தவர் எல்.வைத்தியநாதன்.
சினிமாவில் கதாநாயகி என்றால் நல்ல வெள்ளைத் தோலுடன்தான் இருக்க வேண்டும் என நம்பியிருந்தது தமிழ் சினிமா. ஆனால் அர்ச்சனா, ஷோபா, சில்க் ஸ்மிதா, மவுனிகா, ப்ரியாமணி என அவரது கதாநாயகிகள் அனைவருமே மாநிற அழகிகள். எம்.எஸ்.விஸ்வநாதனும் பாலு மகேந்திராவின் ஒரு படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். ஆனால் அப்படம் வெளியாகவில்லை. பாண்டியராஜன் நடிப்பில் 'அம்மா அப்பா விளையாட்டு' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
"நாம ஜெயிக்கிறோம், சம்பாதிக்கிறோம், தோக்குறோம், ஒண்ணுமே இல்லாது போறோம். இது எல்லாத்தையும் தாண்டி நாம இஷ்டப்பட்ட வேலையை இஷ்டப்பட்ட நேரத்துல செய்கிறோம்கிறது எவ்வளோ பெரிய பாக்கியம்..!" என்பார் பாலு மகேந்திரா. அதனால் தான் அவர் வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாமால் தனக்கு பிடித்த கதைகளை சினிமாவாக ஆக்கினார். 'ஜூலி கணபதி', 'ராமன் அப்துல்லா' போன்ற படங்கள் அதற்கு சாட்சி.
ஒருமுறை அவர் தன்னுடைய Blog'ல் வேதனையுடன் ஒன்றை பதிவு செய்தார். தான் இயக்கிய 'வீடு' உள்ளிட்ட சில படங்களின் நெகட்டிவ்கள் அழிந்து போய்விட்டன. அதனை பாதுகாக்க முடியவில்லை என்றார். உண்மையில் பாலு மகேந்திராவைக் கொண்டாடும் தமிழ்ச் சமூகம் அவருடைய படைப்புகளை பாதுகாக்க தன்னாலான சிறு உதவியைக் கூட செய்யவில்லை என்பது நாம் வெட்கப்பட வேண்டிய விஷயம்.
கேரளாவில் ஜி.கே.நாயர் என்றொருவர் இருந்தார். முக்கியமான படங்கள் குறிப்பாக ஆவணப் படங்களின் நெகட்டிவ்களை முறையாக பராமரித்து பாதுகாத்து வந்தார். அவர்போலவே மதுரையில் யதார்த்தா ராஜன் என்றொருவர் இருந்தார் அவரும் சர்வதேச அளவில் வெளியான பல முக்கிய சினிமாக்களின் பிரதிகளை தொகுத்து பாதுகாத்து வைத்திருந்தார். தமிழில் வெளியான பல முக்கியப் படங்களின் நெகட்டிவ்களின் நிலை தற்போது என்ன என்பது தெரியவில்லை. அவற்றை பாதுகாக்க முறையான சிஸ்டமும் இங்கு இல்லை. டிஜிட்டலுக்கு தாவிய பின் நாம் பழைய நெகட்டிவ்களை குப்பையில் கொட்டிவிட்டோம். தமிழ் சினிமாவை கொண்டாடுகிறோம் என்று சொல்கிறவர்கள்., கலையை மதிப்பவர்கள் முக்கியமாக தமிழக அரசு தமிழின் உன்னதமான படைப்புகளை பாதுகாக்க 'Film Negative Preservation' அமைப்பை உருவாக்க வேண்டும். அதுவே பாலுமகேந்திரா போன்றவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
ஃபிலிம் கேமராக்களில் துவங்கிய பாலு மகேந்திராவின் பயணம் டிஜிட்டல் காலம் வரை நீண்டது. இறுதியாக அவர் இயக்கி நடித்த 'தலைமுறைகள்' என்ற சினிமாவை இயக்குநர் சசிகுமார் தயாரித்து இருந்தார். அப்படத்தின் ஒரு காட்சியில் தன் பேரனிடம் “தமிழையும், இந்த தாத்தாவையும் ஒரு போதும் மறக்காத” என்றொரு வசனத்தை பேசியிருப்பார் பாலு மகேந்திரா. நிச்சயம் ஒரு போதும் உங்களை நாங்கள் மறக்க மாட்டோம். இந்திய சினிமாவிற்கான உங்களின் பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.
- சத்யா சுப்ரமணி