சினிமா

'’தாக்கரே இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் அல்ல’- சஞ்சய் ராவத்

'’தாக்கரே இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் அல்ல’- சஞ்சய் ராவத்

webteam

பால் தாக்கரே, இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் அல்ல என்று சிவசேனா எம்.பியும் ’தாக்கரே’ படத்தை எழுதி தயாரித்துள்ளவருமான சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் வாழ்க்கை வரலாறு ‘தாக்கரே’ என்ற பெயரில் படமாக்கப்பட்டு உள்ளது. இதை சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் எழுதி, தயாரித்துள்ளார். தாக்கரே வேடத்தில் நவாஸூதின் சித்திக் நடித்திருக்கிறார். அவர் மனைவியாக அமிர்தா ராவ் நடித்துள்ளார். அபிஜித் பன்சே இயக்கியுள்ள இந்தப் படம் 25 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, மும்பை பாந்த்ராவில் நேற்று நடைபெற்றது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வெளியிட்டார்.

சஞ்சய் ராவத் கூறும்போது, ‘’’தாக்கரே’ படத்தின் இந்தி பதிப்புக்கு மத்திய சினிமா தணிக்கை குழு அனுமதி அளித்துவிட்டது. மராத்தி பதிப்பு நாளை (இன்று) தணிக்கைக்கு செல்கிறது. இந்த படத்தின் சில காட்சிகளுக்கும், வசனங்களுக்கும் தணிக்கை குழு எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகிறது. அப்படி எதுவும் இல்லை. இது அனைவரும் பார்க்க வேண்டிய படம். தாக்கரே இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் இல்லை. நாட்டின் ஒற்றுமைக்காக மக்களை ஒன்றிணைத்தவர். அவர் எந்த இடத்திலும் மதம் மற்றும் சாதியை முன்னிறுத்தியதில்லை. 

(சஞ்சய் ராவத்)

சமீபத்தில் வெளியான ’ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ படம் ஒரு புத்தகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்தப் படம், எந்த புத்தகத்தின் அடிப்படையிலும் உருவாகவில்லை. இது பிரசாரப் படமும் இல்லை. காந்தி, நெல்சன் மண்டேலா ஆகிய தலைவர்களின் படங் களை போல இது தாக்கரே-வின் வாழ்க்கைக் கதையாக இருக்கும்’’ என்றார்.