சினிமா

''உலகின் தொன்மையான மொழி தமிழ்'' - இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தி நடிகர்!

''உலகின் தொன்மையான மொழி தமிழ்'' - இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தி நடிகர்!

webteam

தூய்மையான மொழியை நீங்கள் பேச வேண்டுமென்றால் திராவிட மொழிகளைத் தான் பேச வேண்டுமென்று இந்தி நடிகரும், பாடகருமான ஆயுஷ்மான் குரானா தெரிவித்துள்ளார்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி, மூன்று மொழிக் கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்‌பட்டது. அதன்படி இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தி மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும் எனவும் அதேபோல, இந்தி மொழி பேசும் மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் தவிர பிற பகுதிகளில் ஏதேனும் ஒரு மொழியை கூடுதலாக கற்பிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த மும்மொழிக் கொள்கைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகம், கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.  

இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர்கள், 'யார் மீதும் இந்தி மொழி திணிக்கப்படாது' எனத் தெரிவித்தனர். மேலும் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாக பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரை நீக்கி திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டது.  இந்தப் புதிய வரைவு திட்டத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர். 

இந்நிலையில் இந்தி திணிப்பு குறித்து பாலிவுட் நடிகரும், பாடகருமான ஆயுஷ்மான் குரானா கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்த பதிவை மீண்டும் பகிர்ந்துள்ளார். அதில் ''இந்தி மொழியில் பெர்சியம் மற்றும் அரேபிய மொழியின் தாக்கம் இருப்பதை நெஞ்சை நிமிர்த்தி இந்தி தேசியம் பேசுபவர்கள் உணர வேண்டும். தூய்மையான மொழியை நீங்கள் பேச வேண்டுமென்றால் திராவிட மொழிகளைத் தான் பேச வேண்டும். அவை தான் வேற்றுமொழி கலப்பில்லாத மொழிகள். 

உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று தமிழ். இந்தியை போற்றுபவர்கள் இதனை எளிதாக உணர வேண்டும். இந்தியாவில் அதிகமாக பேசப்படுவது இந்தி மொழியாக இருந்தாலும் அதனை பேசத்தெரியாதவர்களிடம் திணிக்கக்கூடாது. இப்படிச் சொல்லும் நானும் ஒரு இந்தி மொழி விரும்பி தான்’’ என்று தெரிவித்துள்ளார்.