பொங்கல் திரைப்படங்கள் ட்விட்டர்
சினிமா

ஆரம்பம் முதலே தெறிக்கவிடும் ‘கேப்டன் மில்லர்’; பதுங்கி பாய்ந்த ‘அயலான்’-பாக்ஸ் ஆபிஸில் போட்டா போட்டி

Prakash J

இந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ , விஜய் சேதுபதுயின் மேரி கிறிஸ்துமஸ், அருண் விஜய் நடிப்பில் மிஷன் சேப்டர் 1 ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இதில் கேப்டன் மில்லர் மற்றும் அயலான் திரைப்படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவியது.

கேப்டன் மில்லர் - வசூல் நிலவரம் எப்படி?

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’கேப்டன் மில்லர்’ படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இதில் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியான இப்படம், முதல் நாளில் தமிழ்நாட்டில் 8 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில், 2ஆம் நாளில் 5 கோடி ரூபாயாக வசூல் குறைந்தது. ஆனால், மீண்டும் ஜன.14ஆம் தேதி அதன் வசூல் அதிகரித்து 9 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகம் முழுவதும் 30 முதல் 34 கோடி ரூபாய் வசூலை ’கேப்டன் மில்லர்’ முதல் 3 நாட்களில் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அயலான் வசூல் எப்படி?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘அயலான்’ படத்தில், ரகுல்ப்ரீத் சிங், சரத் ​கேல்கர், இஷாகோபிகர், பானுப்ரியா, யோகிபாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படமும் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் தமிழகத்தில் முதல் நாளில் 4 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாகவும், அடுத்து இரண்டாம் நாளில் 6 கோடி ரூபாயாக முன்னேற்றம் அடைந்ததாகவும், மூன்றாம் நாளில் மேலும் ரூ.7 கோடி ரூபாய் வரை வசூலாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக ’அயலான்’ திரைப்படம் 25 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.

2ஆம் நாளிலிருந்து ‘அயலான்’ படத்தின் வசூலில் முன்னேற்றம் இருப்பதாகக் கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு பிடித்தமான படம் என்பதால் அயலான் படத்திற்கு பேமிலி ஆடியன்ஸ் படையெடுத்து வருகிறார்கள். தொடர்ந்து விடுமுறை நாட்கள் இருப்பதால் ’அயலான்’ படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கும் டஃப் கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு இரண்டு படங்களுக்கு நிச்சயம் கூட்டம் இருக்கும். விடுமுறை நாட்களை கடந்த பிறகு தான் யார் வசூலில் வின்னர் என்பதை கணிக்க முடியும்.