சினிமா

பாய்காட் எதிர்ப்புக்கு இடையே வசூலில் மிரட்டும் `அவதார் 2’! ஆறு நாட்களில் இத்தனை கோடிகளா?

பாய்காட் எதிர்ப்புக்கு இடையே வசூலில் மிரட்டும் `அவதார் 2’! ஆறு நாட்களில் இத்தனை கோடிகளா?

சங்கீதா

‘அவதார் 2 திரைப்படம் பூர்விக அமெரிக்கர்களுக்கு எதிரான படம்' என்ற இனவெறி சர்ச்சையால், அதனை புறக்கணிக்குமாறு எதிர்ப்பு கிளப்பியுள்ள நிலையிலும், 6 நாட்களில் மட்டும் ரூ. 5,000 கோடி வசூலை தாண்டி சாதனைப் படைத்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 16-ம் தேதி வெளியான திரைப்படம் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’. ஹாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படும் ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் உருவான இந்தப் படம் விஷுவல் ட்ரீட்டாக இருப்பதாக கூறப்பட்டாலும், வலுவான கதை மற்றும் மெதுவாக நகரும் திரைக்கதையால் படத்திற்கான வரவேற்பு சற்று குறைந்தே காணப்படுவதாகக் கூறப்பட்டு வருகிறது.

மேலும், பூர்விக அமெரிக்கர்கள், பழங்குடி மக்களுக்கு எதிரான படமாக இந்தப் படம் இருப்பதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. அத்துடன் வெள்ளை இனத்தவர்களை காக்கும் பொருட்டே படம் உருவாகியிருப்பதாகவும் அதாவது வெள்ளை மீட்பர் கதை என்றும், இனவெறி குறித்த பாகுபாடுடன் படம் இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த பலரும், தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தை புறக்கணிக்குமாறு தெரிவித்து வருகின்றனர்.

எனினும் தடைகளை தாண்டி உலகளவில் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் 6 நாட்களில் சுமார் ரூ. 4,500 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸில் வசூல் செய்துள்ளது. 450 மில்லியன் அமெரிக்க டாலரில் உருவான இந்தப் படம், 6 நாட்களிலேயே, 550 மில்லியன் அமெரிக்க டாலரை வசூல் செய்துள்ளது ஹாலிவுட்டை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனா, தென்கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ்  ஆகிய நாடுகளில் வசூல் மழை பொழிந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய அளவில் 200 கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் நெருங்கியுள்ளதுடன், உலகளவில் இந்தப் படத்திற்கான வசூலில் 5-வது இடம் பிடித்துள்ளது.