சினிமா

''நாம் மீண்டு வருவோம்'' - ரசிகர்களுக்கு நம்பிக்கை வார்த்தையளித்த பாடகி ஆஷா போஸ்லே

''நாம் மீண்டு வருவோம்'' - ரசிகர்களுக்கு நம்பிக்கை வார்த்தையளித்த பாடகி ஆஷா போஸ்லே

webteam

மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக பாடகி ஆஷா போஸ்லே நம்பிக்கை வார்த்தைகளை விதைத்துள்ளார்.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸால் சுமார் 190 நாடுகளில் இயல்பு நிலைமை முடங்கியுள்ளது. இதுவரை
சுமார் 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலி,
ஸ்பெயின், அமெரிக்கா,‌ ஈரான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளாலேயே இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவதால் உயிரிழப்பு
தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இத்தாலியில் மட்டும் 7 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். ஸ்பெயினில் இதுவரை 3 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு இரையாகிவிட்டனர். இவ்விரண்டு எண்ணிக்கையும் சீனாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட அதிகமாகும்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவில் இருந்து விரைவில் மீண்டு விட வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. இந்நிலையில் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக பாடகி ஆஷா போஸ்லே நம்பிக்கை வார்த்தைகளை விதைத்துள்ளார்.

கொரோனா குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ''என் வாழ்க்கையில் பிளேக், பெரியம்மை, காசநோய், போலியோ போன்ற பல தொற்று நோய்களை பார்த்திருக்கிறேன். இரண்டாம் உலகப்போர் உள்பட பல போர்களையும் கண்டிருக்கிறேன். இந்த தொற்றுநோய் மோசமானது, அதை நாம் மீண்டு வருவோம்.

அரசு உத்தரவின்படி அனைவரும் வீட்டிலேயே இருங்கள்'' எனக் குறிப்பிட்டுள்ளார். அவருடைய நம்பிக்கை வார்த்தைகளுக்கு பலரும் நன்றி தெரிவித்துள்ளனர். உங்கள் வார்த்தைகள் ஆறுதல் அளிக்கிறது என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்