சினிமா

"நண்பர் விஜயகாந்திற்கு விழா எடுப்போம் என விஷால் சொன்னது..."- நெகிழ்ந்த வாகை சந்திரசேகர்

"நண்பர் விஜயகாந்திற்கு விழா எடுப்போம் என விஷால் சொன்னது..."- நெகிழ்ந்த வாகை சந்திரசேகர்

webteam

“2022 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது, அடுத்த மூன்று மாதத்திற்குள் அறிவிக்கப்படும். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விஜயகாந்திற்கு பாராட்டு விழா முன்னெடுப்பதை, நண்பராக வரவேற்கிறேன்” என தமிழ்நாடு இயல் இசை மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் தெரிவித்தார்.

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சியை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் வாகை சந்திரசேகர் இன்று பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு குறித்து அமைக்கப்பட்ட இந்த புகைப்பட கண்காட்சி, மிக சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அவரின் 70 ஆண்டுகால வாழ்க்கையை ஒரு திரைப்படம் பார்ப்பது போல இந்தபுகைப்படகண்காட்சியில் விளக்கி உள்ளனர். இதுபோன்று நாமும் நம்முடைய வாழ்க்கையில் தமிழ் மொழிக்கு, தமிழ் கலாசாரத்திற்கு தலைவராக வரவேண்டும் என்ற உணர்வை இந்த கண்காட்சி ஏற்படுத்தும். கலைஞரைப் போலவே தனக்கென்று தனி பாதையை அமைத்து அரசியலில் பல சாதனைகளை படைத்ததுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இப்போது இந்தியாவின் தலைவராகவும் வளர்ந்து வருகிறார் அவர்.

தமிழ்நாட்டில் 2022 கலைமாமணி தேர்வுக்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். விருதுக்காக பல்வேறு விண்ணப்பங்கள் வந்துள்ளது. குழுவின் மூலமாக பரிசீலித்து, தேர்ந்தெடுக்கப்படும் கலைமாமணி தேர்வுக்குழுவையை அரசு அறிவிக்க வேண்டும். அறிவித்ததும் இரண்டு, மூன்று மாதத்திற்குள் அதற்கான பணிகள் தொடங்கும்.

கலைமாமணி விருதுக்கான வல்லுனர் குழு இயல் இசை நாடக மன்றம் சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒப்புதல் விரைவில் தமிழக அரசிடம் பெறப்படும். 2022 ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது, இன்னும் மூன்று மாதத்திற்குள் அறிவிக்கப்படும்.

50 ஆண்டு காலமாக என்னுடைய நெருங்கிய நண்பராக இருந்தவர் விஜயகாந்த். அவர் திரைப்படத்துறைக்கு வந்து மிகவும் போராடி இந்த இடத்தை பெற்றுள்ளார். என்னுடைய நெருங்கிய நண்பர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களில் விஜயகாந்த்தும் ஒருவர். அவருக்கு விழா எடுப்போம் என நடிகர் விஷால் கூறியிருப்பது, மகிழ்ச்சியான செய்தி. அதுவும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இந்த பாராட்டு விழா முன்னெடுப்பதை, விஜயகாந்த்தின் நண்பராக வரவேற்கிறேன்” என்றார்.