விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்கள் படத்தின் பட்ஜெட்டில் 90 விழுக்காட்டை சம்பளமாகப் பெறுவதாகவும், இதனால் தமிழ் சினிமாவின் தரம் பின்னடைவைச் சந்தித்து வருவதாகவும் நடிகர் அருண்பாண்டியன் கருத்து கூறியுள்ளார்.
கருணாஸ் நடித்துள்ள ஆதார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். விழாவில் பேசிய இரா.சரவணன், தமிழ் சினிமாவுக்கு தற்போது பொற்காலம் என்று கூறினார். நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் பேசுகையில், அந்தக் கருத்தை மறுத்தார். பாரதிராஜா போன்ற சிலர் படம் எடுத்தபோதுதான் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று குறிப்பிட்ட அவர், விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் தற்போது தோல்வியுறுவதாகக் கூறினார். மேலும் படத்தின் பட்ஜெட்டில் 90 விழுக்காட்டை அவர்கள் சம்பளமாகப் பெறுவதால், படத்தின் தரம் குறைவதாகவும் குற்றம்சாட்டினார்.
இயக்குநர் அமீர் பேசுகையில், அருண் பாண்டியன் கூறிய கருத்தை ஏற்க மறுப்பதாகக் கூறினார். தமிழில் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் திறம்பட செயல்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், தமிழ் சினிமாவை குறைவாக மதிப்பிடக் கூடாதென கொந்தளித்தார். அமீரின் பேச்சுக்கு பதிலளித்த அருண் பாண்டியன், தமிழ்த்திரைப்படங்களின் தரம் குறைந்துகொண்டே வருவதைத்தான் சுட்டிக்காட்டியதாக விளக்கமளித்தார்.
இரு கலைஞர்களின் கருத்து மோதலைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் பாரதிராஜா, அருண் பாண்டியனின் கருத்தை ஆமோதித்தார். நடிகர்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு, தயாரிப்புக்கான செலவை அதிகரித்தால் திரைப்படம் தரமானதாக உருவாகும் என்று அவர் கூறினார். தற்போதைய சூழலில் தமிழ் திரைப்படங்களைவிட தெலுங்கு படங்கள் மிகவும் சிறப்பாக, பிரமாண்டமாக இருப்பதாகவும் பாரதிராஜா பாராட்டினார்.
தமிழ் சினிமாவின் தரம் குறித்து புகழ்பெற்ற இரு கலைஞர்களின் கருத்து மோதல், ஆதார் திரைப்பட விழாவை பரபரப்பாக்கியது. அருண் பாண்டியனின் கருத்துக்கே அங்கு பெரும் ஆதரவு கிடைத்தது. ஆனால், இந்தக் கருத்தை உச்ச நடிகர்கள் செயலில் காட்டுவார்களா என்பதுதான் கேள்விக்குறி.