ஒரு பேருந்துப் பயணத்தின்போது நடக்கும் மர்மங்களும், அதன் மூலம் வெளிப்படும் உண்மைகளுமே `டைரி’ படத்தின் ஒன்லைன்.
மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை செல்லும் 13-வது கொண்டை ஊசி வளைவில் தொடர்ந்து விபத்துகள் நிகழ்கிறது. இன்னொரு பக்கம் 16 வருடங்களுக்கு முன் உதகையில் நிகழ்ந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தை விசாரிக்க உதகை வருகிறார் ட்ரெய்னிங் எஸ்.ஐ. வரதன் (அருள்நிதி). இந்த இரண்டு பிரச்சனைகளுக்கு நடுவே, ஒர் இரவில் உதகையில் இருந்து கோயம்புத்தூருக்கு சில பயணிகளுடன் கிளம்புகிறது ஒரு பேருந்து. இந்த பயணத்தில் அருள்நிதியும் இணைந்து கொள்ள, அதைத் தொடர்ந்து நிகழும் மர்மங்களும், அமானுஷ்யங்களும், அது எதனால் நிகழ்கிறது, அருள்நிதிக்கும் இந்தப் பேருந்துக்கும் என்ன சம்பந்தம் என்பதெல்லாம் தான் மீதிக்கதை.
ஒரு க்ரைம் த்ரில்லர் போல ஆரம்பித்து, சூப்பர் நேச்சுரல் த்ரில்லராக மாறுகிறது படம். இயக்குநர் இன்னாசி பாண்டியன் அதற்கு தகுந்த விதத்தில் கதையை வடிவமைத்திருந்தது படத்திற்கு பலம். நடிகர் அருள்நிதியின் ஃபேவரைட் ஸ்பாட்டான த்ரில்லர் தான் களம் என்பதால், அதற்கு தகுந்ததுப்போல மினிமலான நடிப்பை வழங்கியிருக்கிறார். படத்தின் மற்ற கதாபாத்திரங்களில் நம்மை கவனிக்க வைப்பது ஷாரா, சில இடங்களில் அவரது ஒன்லைனர்கள் சிரிக்க வைக்கிறது. பவித்ரா மாரிமுத்து, ஜெயப்பிரகாஷ், தனம் என இன்னும் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்களை கவனிக்க வைக்கும் அளவுக்கான இடம் படத்தில் இல்லை.
படத்தில் நிறைகளைத் தாண்டி குறைகள் சற்றே அதிகம் என சொல்லலாம். ஒரு மிஸ்ட்ரியான கதையை எந்த வரிசையில் சொல்கிறோம் என்பது மிக முக்கியமான ஒன்று. அந்த இடத்திலேயே படம் சறுக்கத் துவங்குகிறது. ஒரு பேருந்து பயணத்தால் பல மர்மங்கள் அவிழப் போகிறது என்பதுதான் மையக் கதை எனும் போது, அதைச் சுற்றி எழுதியிருக்க வேண்டிய திரைக்கதையை எழுதவில்லை இயக்குநர். மாறாக ஒரு கொள்ளை சம்பவத்தை விசாரிக்கும் ட்ரெயினிங் எஸ்.ஐ, அவருக்கும் ஹீரோயினுக்கும் டூயட், ஒரு கார் திருடன், அவனுடைய அம்மா செண்டிமெண்ட் என எங்கெல்லாமோ சுழன்று செல்கிறது.
கூடவே படத்தில் இடம்பெறும் காட்சிகளும் வசனங்களும் மிக செயற்கையாக அமைக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக பின்னால் வரப் போகும் ஒரு ட்விஸ்ட்டை, ஃபோர் ஷேடோ செய்வதற்கான ஒரு காட்சி இருக்கும். அந்தக் காட்சியில் பேருந்தில் இருக்கும் ஒரு பெண், சக பயணியான இன்னொரு பெண்ணிடம், “நீ எங்கமா இறங்கணும்?” எனக் கேட்க, “நான் திருப்பூர் போகணும். எனக்கு 4 வயசுல ஒரு மகன் இருக்கான், அவன்னா எனக்கு உசுரு” என தேவையே இல்லாத டீட்டெய்லிங் கொடுப்பார். இது கதையில் முக்கியமான ஒரு தகவல் என்றாலும், இதை இவ்வளவு துருத்தலாக வசனத்தில் கடத்தியிருப்பது பெரிய மைனஸ். இது போல் படத்தில் பல காட்சிகள் உண்டு.
இப்படியான ஒரு கதையை எவ்வளவு விறுவிறுப்பாக சொல்ல வேண்டும். அதை விலக்கி வைத்துவிட்டு, விசாரணைக்காக வரும் ஹீரோ மீது, காதல் கொள்ளும் ஹீரோயின், அவர்களுக்கு ஒரு பாடல். வீட்டைவிட்டு உயிர்பயத்தில் வரும் காதல் ஜோடிக்கு ஒரு பாடல் என சம்பந்தமே இல்லாமல் கதையை நகர்த்தி இருப்பதும் சோர்வளிக்கிறது.
படத்தின் ப்ரீ க்ளைமாக்ஸிலும், க்ளைமாக்ஸிலும் வெளியாகும் திருப்பங்களை மட்டும் பெரிதாக நம்பிக் கொண்டிருக்காமல், மொத்தப் படத்திலும் அழுத்தமான ஒரு கதை சொல்லலையும், திரைக்கதையையும் கொடுத்திருந்தால், நல்ல த்ரில்லர் படமாக வந்திருக்கும் இந்த டைரி. ஆமா, இந்தப் படத்திற்கு ஏன் ‘டைரி’ என்ற தலைப்பு?