a.r.rahman pt web
சினிமா

“30 வருடங்களாக என்னுள் இருந்த ஆதங்கம்; இசையில் முடியல, அதனால..” - மாமன்னன் விழாவில் ரஹ்மான் பேச்சு!

”இந்த படத்தின் கதை எனக்குள் 30 வருடமாக இருந்த ஆதங்கம். இசையில் அதை என்னால் பண்ண முடியவில்லை. எனவே, அதை படமாக பண்ண முடிந்தவருடன் சேர்ந்து இசை அமைத்தேன்” - ஏ.ஆர்.ரஹ்மான்

Angeshwar G

மாமன்னன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் ஆகும் நிலையில் படம் அனைத்து மட்டத்திலும் நேர்மறை விமர்சனங்களைப் பெற்று வசூலிலும் சாதனையைப் படைத்தது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் பின்னணி இசை, பாடல்கள் என அனைத்தும் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நடிகர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மாரி செல்வராஜிற்கு விலையுயர்ந்த காரையும் பரிசாக அளித்தார். அண்மையில் திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு, எதிர்மறைக் கதாப்பாத்திரமான ரத்தினவேலை சிலர் கொண்டாடினர்.படத்தின் நோக்கத்தை சிதைக்கிறது என அதற்கான கண்டனங்களும் பல்வேறு தரப்புகளில் இருந்து எழுப்பப்பட்டன.

இந்நிலையில் மாமன்னன் படத்தின் 50 வது நாள் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர்கள் வடிவேலு, உதயநிதி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், “மாரி செல்வராஜ் மாதிரி இயக்குநர்கள் இருப்பாதால் தான் எங்களால் நடிக்க முடிகிறது. முன்பெல்லாம் 250 நாள் என்று படத்தின் கொண்டாட்டங்கள் போகும். ஆனால் இப்போது 50 நாள் என்பது பெரிது. மாமன்னன் 50 வது நாள் வெற்றி வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் பேசுகையில், “எல்லா புகழும் இறைவனுக்கே.. இந்த படத்தின் கதை எனக்குள் 30 வருடமாக இருந்த ஆதங்கம். இசையில் அதை என்னால் பண்ண முடியவில்லை. எனவே, அதை படமாக பண்ண முடிந்தவருடன் சேர்ந்து இசை அமைத்தேன். மாரி செல்வராஜ் கதை சொல்லும் போது இவ்வளவு நன்றாக வரும் என எனக்கு தெரியாது. அதற்கு முக்கிய காரணம் வடிவேலு சார். வடிவேலு சார் உதயநிதிக்கு பின்னால் பைக்கில் செல்லும் அந்த காட்சியை பார்த்தேன். மிகவும் சோகமாக கிட்டதட்ட அழுகின்ற நிலையில் அவர் செல்வார். அந்த காட்சி எனை மிகவும் பாதித்தது. அதனால் முழுமையாக இந்த கதையை எடுத்து செய்தேன்” என்று நெகிழ்ச்சியாக கூறினார்.

நடிகர் வடிவேலு பேசுகையில், “ரொம்ப சந்தோசமான நாள் இன்று. திருவிழா மாதிரி உள்ளது. முன்பெல்லாம் 100 நாட்கள் படம் ஓடினால் பெரியது. இப்பொழுது, 500 திரையரங்குகளில் படம் ஒரு நாள் ஓடினால் என்றாலும் 500 நாள் என்றாகிவிடும். எத்தனையோ கதாபாத்திரங்கள் நடித்துள்ளேன். நான் அத்தனை நகைச்சுவை படங்கள் நடித்துள்ளேன். இந்த படம் தான் எனக்கு பேர் வாங்கி கொடுத்து உள்ளது. இந்த கதையை ஓகே பண்ண வைத்தது உதயநிதி தான். இந்த வெற்றியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

அனைவரும் கடினமாக உழைத்தனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த அனைத்து பாடல்களும் ஜொலித்து வருகிறது. எனக்கு படத்தில் 6 காட்சிகள் பிடித்தது. அவை அனைத்தும் என்னை தூங்க விடவில்லை. உதயநிதி என்னை வண்டியில் வைத்து கூட்டி வரும் போது, உதயநிதி தனது முகத்தை இறுக்கமாக வைத்து செல்லும் போது உள்ள காட்சி, மனைவி காலில் என் கை வைத்து பேசி இருக்கும் காட்சி, அனைவரும் என்னை அழைத்து பாராட்டி பேசினார்கள்.

30, 40 வருடத்திற்கு முன் உள்ள பெரிய இயக்குநர்கள் எடுக்கக்கூடிய படம் தான் மாமன்னன். இதை மாரி செல்வராஜ் எடுத்துள்ளார். இது போன்று படங்களை தொடர்ந்து எடுத்து உடம்பை கெடுத்து கொள்ளாமல், நகைச்சுவை படமும் மாரி செல்வராஜ் எடுக்க வேண்டும். மக்கள் அனைவருக்கும் நன்றி” என தெரிவித்தார்.

நிகழ்வில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “அனைத்தையும் பார்த்து பார்த்து செய்த இயக்குநர் மாரி செல்வராஜ்க்கு நன்றி. இன்று என் கையில் மாரி செல்வராஜ் மாமன்னன் கதை புத்தகத்தை கொடுக்கிறார். மிகப் பெரிய வெற்றியை கொடுத்த அனைவருக்கும் நன்றிகள். இது தான் என்னுடைய கடைசி படம். முதல் படம் போல என்னுடைய கடைசி படத்தையும் வெற்றிப் படமாக மாற்றிய மாரி செல்வராஜ்-க்கு நன்றி. வடிவேலு அண்ணன் இல்லை என்றால் இந்த படம் இல்லை. பஹத் பாசில்-க்கும் இந்த வெற்றிக்கும் மிக பெரிய உறவு உள்ளது” என்றார்.