சினிமா

ராம்கோபால் வர்மாவின் ’லட்சுமி என்டிஆர்’ படத்துக்கு இடைக்கால தடை!

ராம்கோபால் வர்மாவின் ’லட்சுமி என்டிஆர்’ படத்துக்கு இடைக்கால தடை!

webteam

ராம்கோபால் வர்மாவின் ’லட்சுமி என்.டி.ஆர்’ படத்தை ஆந்திராவில் வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மறைந்த ஆந்திர முதலமைச்சரும் நடிகருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கைக் கதை கதாநாயகுடு, மகா கதாநாயகுடு என்ற பெயரில் இரண்டு படங்களாக வெளியானது. இந்தப் படங்களில் ராமாராவ் மகன் பாலகிருஷ்ணா, ராமாராவ் வேடத்தில் நடித்திருந்தார். கிரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா, வித்யா பாலன் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் சரியாக ஓடவில்லை. இந்தப் படம் தொடங்கப்பட்டதிலிருந்து, வெளி யானது வரை கடுமையாக விமர்சித்து வந்தார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. 

இந்நிலையில் 'லட்சுமி என்.டி.ஆர்' என்ற பெயரில் ராம்கோபால் வர்மாவும் என்.டி.ராமாராவ் வாழ்க்கைக் கதையை இயக்கி இருக்கிறார். இதன் கதை என்.டி.ராமாராவின் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதியின் பார்வையில் இருந்து சொல்லப்படுகிறது. பி.விஜய் குமார் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். யாக்னா ஷெட்டி, லட்சுமி பார்வதி கேரக்டரில் நடித்துள்ளார். இதில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வை கடுமையாக விமர்சித்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படம் இன்று வெளியாவதாக இருந்தது.

இதற்கிடையே, தெலுங்கு தேசம் கட்சி, இந்தப் படத்தை தேர்தலுக்கு முன் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் புகார் செய்தது. அதில், ஒய் எஸ் ஆர் கட்சியை சேர்ந்த ராகேஷ் ரெட்டி என்பவர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படம் பிரசாரத்துக்காக எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளைக் கருத்தில் கொண்டு இந்தப் படம் ரிலீஸ் ஆவதைத் தடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தது. 

அதோடு ஆந்திர நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த நீதிமன்றம், படத்துக்கு ஆந்திராவில் வெளியிட இடைக்கால தடை விதித்து, வழக்கை ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இதனால் ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் படம் இன்று வெளியாகிறது.