நடிகர் விக்ரம் நாயகனாக நடித்து இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான திரைப்படம் தங்கலான். ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்கில் வெளியான தங்கலான், தொடக்கத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் போகப்போக நேர்மறையான விமர்சனங்களை பெற்றது.
கோலார் தங்க சுரங்கத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தில், விக்ரம், பசுபதி, ஆங்கில நடிகர் டேனியல், பார்வதி, மாளவிகா மோகன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் சாமர்த்தியமான கதைசொல்லலும், சீயான் விக்ரமின் பவர்ஃபுல் நடிப்பும் இணைந்து தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய த்ரில்லர் டிராவல் திரைப்படத்தை கொடுத்திருந்தனர். படத்தில் நடித்திருந்த அனைவரும் மிரட்டிய நிலையில், பின்னணி இசை, சினிமடோகிராபி என அனைத்து கலை இயக்குநர்களும் தங்களுடைய வேலையை கனக்கச்சிதமாக செய்திருந்தனர்.
சரியாக புரியவில்லை என்ற விமர்சனங்கள் படத்தின் மீது வைக்கப்பட்டாலும், நாட்கள் செல்ல செல்ல படத்தை குறித்து நேர்மறையான விமர்சனங்கள் வர ஆரம்பித்தன.
இந்நிலையில் தங்கலான் படம் வசூலிலும் பின் வாங்காமல் உலகளவில் ரூ.100 கோடியை வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியத் திரையுலகின் மற்றொரு வசீகரிக்கும் சினிமா படைப்பாக தங்கலான் உருவெடுத்துள்ளது. படத்தில் எடிட்டிங்கில் குறைகள் இருந்தாலும், படத்தை சொன்ன விதமும், அதன் சாராம்சமும் படத்தை பற்றி எல்லோரையும் பேச வைத்துள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க கோலார் தங்க வயலின் (KGF) தொடக்கம் எங்கிருந்து தொடங்கியது என்பதில் தொடங்கி, மன்னர்கள் மற்றும் பிரிட்டிஷ்காரர்களின் தங்க ஆசை, அதைத்தொடர்ந்து எப்படி மக்கள் அதற்காக வேலைவாங்கப்பட்டனர் என்பது வரை ஒரு டாக்குமெண்ட்ரி சொல்லுமளவு பா ரஞ்சித் படத்திற்காக உழைத்திருந்தார்.
இந்நிலையில் படத்தின் மீதான வரவேற்பை பார்த்த படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை வைத்து எல்லோருக்கும் நன்றியை தெரிவித்தது. இதற்கிடையில் சமீபத்தில் வெளியான வாழை திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தங்கலான் அவ்வளவுதான் சைலண்ட்டாக அப்படியே சென்றுவிடும் என சொல்லப்பட்டது
ஆனால் தற்போது படத்தின் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் படக்குழு, தங்கலான் திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்திருப்பதாக தெரிவித்துள்ளது.