அனிருத் மற்றும் அறிவு இணைந்து உருவாக்கியுள்ள ‘குத்திக்கங்கோ ஊசிங்கோ’பாடல் வெளியாகியுள்ளது.
அனிருத் மற்றும் ‘தெருக்குரல்’ அறிவு இருவருமே இண்டிபெண்டண்ட் ஆல்பத்தை தனித்தனியாகவே வெளியிட்டு வருகிறார்கள். தற்போது இருவரும் இணைந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதின் அவசியத்தை வலியுறுத்தி ‘ஊசிங்கோ’ பாடலை பாடியிருக்கிறார்கள். இப்பாடலை அறிவு எழுதியிருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கிறார். டிவோ மியூசிக் இந்தியா இப்பாடலை தயாரித்துள்ளது.
செம்ம கலர்ஃபுல்லாக எடுக்கப்பட்டிருக்கும் பாடலில் அனிருத்தும் அறிவும் திரையில் தெரியும் விடிவி கணேஷிடம் ‘ஹாய் சயின்ஸ்’ என்கிறார்கள். “டேய் கோவாக்சின் கோவிஷீல்டு என்னடா பண்ணிட்டிருக்கீங்க. இதுக்காகவா உங்களை பாலூட்டி வளர்த்தேன்? அங்க கெளதம் நகரை கொரோனா பாய்ஸ் போட்டானுங்கடா. போய் எல்லாருக்கும் தடுப்பூசி போடுங்கடா” என்று விடிவி கணேஷ் சொல்ல பின்னணியில்‘குத்திக்கோங்க ஊசி... குந்திக்கலாம் ஈஸிமா... சங்கி மங்கி பேச்சு நம்பாதிங்க’ பாடல் ஒலிக்கிறது. கொரோனாவை விரட்டும் தடுப்பூசியாக ஆடிப்பாடி அனிருத்தும் அறிவும் நடித்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது.