"டபுள் டக்கர்' யூடியூப்
சினிமா

அசத்தும் அனிமேஷன்! 3.4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகும் “டபுள் டக்கர்” பட டீசர்!

அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் கலகலப்பாக உருவாகியுள்ளது "டபுள் டக்கர்' பட டீசர்!

Jayashree A

இந்தியாவில் முதல் முறையாக அனிமேஷன் கதாபாத்திரங்கள் இடம்பெற்ற படமாக உருவாகியுள்ளது டபுள் டக்கர் திரைப்படம். அறிமுக இயக்குநர் மீரா மஹதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் தீரஜ், ஸ்ருமிதி வெங்கட் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், கோவை சரளா, யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், முனிஷ் காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'டபுள் டக்கர்' படத்திற்கு இசையமைத்துள்ளார் வித்யாசாகர். இந்தப் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில், இயக்குநர் மிஷ்கின், நடிகர் தீரஜ், இணை தயாரிப்பாளர் சந்துரு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

படத்தின் இயக்குநர் மீரா மஹதி கூறும் பொழுது, “ நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றவில்லை, குறும்படங்கள் இயக்கிய அனுபவத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளேன். வளர்ந்துவரும் நாயகர்கள் சிலரிடம் கதை சொல்ல முயன்றேன். அவர்கள் யாரும் குறைந்த பட்சமரியாதையைக் கூட கொடுக்கவில்லை. 5 நிமிடம் மட்டும் கொடுங்கள் என்றேன். யாரும் முன்வரவில்லை” என்று தனது வேதனையை பகிர்ந்தார். அதன் எப்படி இந்த வாய்ப்பு கிடைத்தது என்பதை விவரித்தார்.

”நீண்ட காத்திருப்புக்கு பின் மைம் கோபி சார் தான் தீரஜிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர் 5 நிமிடத்தில் என்னை இம்ப்ரஸ் செய்ய முடியுமா? என்று கேட்டார். கதை சொல்லத் துவங்கினேன். முடிக்கும் போது ஒரு மணி நேரம் ஆகியிருந்தது. ஆரம்பிக்கும் போது சிறிய படமாகத்தான் இருந்தது. படத்தில், வரும் அனிமேஷன் பகுதிகளை ஏற்கெனவே மனதில் டிசைன் செய்து வைத்திருந்தேன். பிறகு தீரஜ் சார், இது சூப்பராக ஒர்க்-அவுட் ஆகும், கண்டிப்பாக பெரிய அளவில் செய்வோம் என்று கூறி படத்தின் பட்ஜெட்டை எட்டு மடங்காக உயர்த்திவிட்டார்" என்று கண்ணீர் மல்க மீரா மஹதி கூறினார்.

இந்தியாவில் முதல் முறையாக அனிமேஷன் கதாபாத்திரங்கள் இடம்பெற்ற படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட சில அனிமேஷன் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் இதன் டீசர் வெளியாகி யூடியூபில் 3.4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.