Siddharth file image
சினிமா

“இதெல்லாம் தேவையா?” - பேசிக்கொண்டிருந்த சித்தார்த்தை கட்டாயப்படுத்தி வெளியேற்றிய கன்னட அமைப்பினர்!

காவிரி நதிநீர் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற ‘சித்தா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து நடிகர் சித்தார்த்தை வலுக்கட்டாயமாக கன்னட அமைப்பினர் வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகா - தமிழ்நாடு இடையே பிரச்சனை நீடித்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நீரை கர்நாடக தர மறுப்பதால் தொடர் சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது தமிழ்நாடு அரசு. தற்போதைக்கு கர்நாடகா, தமிழகத்திற்கு 3,000 கனஅடி நீர் திறந்து விடவேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணயத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது.

இருந்தபோதும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை கன்னட மக்களும், சில அமைப்புகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. குறிப்பாக எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பும் நடந்து வருகிறது.

நதிநீர் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், பெங்களூருவில் நடிகர் சித்தார்த்தின் சித்தா படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று பிற்பகல் நடந்தது. எஸ்.ஆர்.வி தியேட்டருக்குள் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், அங்கு வந்த கன்னட அமைப்பினர் நிகழ்ச்சியை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.

மேலும், “காவிரி நதிநீர் பிரச்சனையில் பந்த் நடந்து வரும் நிலையில், இந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சி தேவையா” என்று ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பினர். அவர்களை சமாளிக்க முயன்ற நடிகர் சித்தார்த்தும் ஒரு கட்டத்தில் அதிருப்தி அடைந்து பிரஸ் மீட்டில் இருந்து “நன்றி” என்று கூறிவிட்டு வெளியேறினார். வெளியேறினார் என்று கூறுவதைவிட கட்டாயப்படுத்தி வெளியேற்றினார்கள் என்று கூறுவதே சரியாக இருக்கும்.

அத்துடன், கன்னட அமைப்பினர் மிகவும் ஆக்ரோஷமாக பேசி, எதிர்ப்பை வெளிப்படுத்தியபோதும், நடிகர் சித்தார்த் மிகவும் கண்ணியமாகவும் நிதானமாகவும் அவர்களை எதிர்கொண்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இது தொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, “காவிரி நீர் விவகாரத்தில் நடிகர் ரஜினி, கர்நாடகாவுக்கு ஆதரவு தர வேண்டும். கர்நாடகத்தின் நிலையை எடுத்துக்கூற வேண்டும்.

இல்லையென்றால் அவரது படத்தை கர்நாடகாவில் வெளியிட விடமாட்டோம்” என்று வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரித்திருந்தார் என்பதும் இங்கு நினைவுகூறத்தக்கது.