திரைப்பட வர்த்தக சபை மற்றும் தமிழ் திரைப்பட விநியோகிஸ்தர்கள் கூட்டமைப்பு ஆகிய இரு அமைப்புகள் மூலமே அன்புச்செழியன் தயாரிப்பாளர்களை மிரட்டி வந்ததும் திரைத்துறையைக் கட்டுப்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
அன்புச்செழியன் இந்த அளவுக்கு திரைப்பட தயாரிப்பாளர்களை மிரட்டுவதற்கு ஆளும் கட்சியினரின் ஆதரவே காரணம் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் திரைப்பட வர்த்தக சபை மற்றும் தமிழ் திரைப்பட விநியோகிஸ்தர்கள் கூட்டமைப்பு ஆகிய இரண்டு அமைப்புகள் மூலம் அன்புச்செழியன் திரைப்படத்துறையை கட்டுப்படுத்தி வந்ததாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அமைப்புகளில் அபிராமி ராமநாதன், கலைப்புலி தாணு, சரத்குமார், ராதாரவி, ரித்திஸ், எஸ்.வி.சேகர், செல்வின்ராஜ், திருப்பூர் சுப்ரமணியன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் அங்கம் வகிப்பதும் தெரியவந்துள்ளது. இந்த 2 அமைப்புகள் மூலமே படங்களை முடக்குவது, தயாரிப்பாளர்களை மிரட்டுவது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை அன்புச்செழியன் கையாண்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான சசிக்குமார் உறவினர் அசோக்குமார், சசிக்குமாரின் தயாரிப்பு நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராக பணிபுரிந்தவர். இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த கடிதத்தின் மூலம் அன்புச்செழியனிடம் கடன் பெற்றதும், அன்புச் செழியன் அவரை மிரட்டியதும் தெரியவந்தது. இந்த கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர், அன்புச்செழியன் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும், அன்புச்செழியன் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.