சினிமா

லோகேஷ் கனகராஜின் ’விக்ரம்’ படத்தில் இணைந்த ’கேஜிஎஃப்’ புகழ் அன்பறிவ் மாஸ்டர்கள்!

லோகேஷ் கனகராஜின் ’விக்ரம்’ படத்தில் இணைந்த ’கேஜிஎஃப்’ புகழ் அன்பறிவ் மாஸ்டர்கள்!

sharpana

லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ படத்தில் தேசிய விருதுபெற்ற அன்பறிவ் ஸ்டண்ட் மாஸ்டர்கள் இணைந்துள்ளனர்.

’மாஸ்டர்’ வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கவிருக்கிறார். தேர்தல், முடிந்தபிறகு இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிப்பதாக இருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கால் தற்போது தடைப்பட்டு நிற்கிறது. கடந்த ஒரு வாரமாக, ’விக்ரம்’ படத்தை கமல்ஹாசன் கிடப்பில் போட்டுவிட்டார் என்று தகவல்கள் வெளியான நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்கள் ‘அன்பறிவ்’ சகோதரர்களுன் கமல்ஹாசன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷூட்டிங்கிற்கு தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துள்ளார்.

{கேஜிஎஃப் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் அன்பறிவ் மாஸ்டர்கள்)

இரட்டை சகோதரர்களான அன்புமணி, அறிவுமணி ’அன்பறிவ்’ மாஸ்டர்கள் ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் அறிமுகமாகி ’மெட்ராஸ்’, ‘கபாலி’, ’மாயா’, ‘இருமுகன்’, ‘காஷ்மோரா’, ‘தடம்’, வசூல் சாதனை படைத்த ‘கேஜிஎஃப்’ என பல்வேறு படங்களில் சண்டைக்காட்சிகள் அமைத்து கவனம் ஈர்த்துள்ளனர். இவற்றில், ’கேஜிஎஃப்’ படத்திற்கு சிறந்த சண்டைக் காட்சிகளுக்காக தேசிய விருதும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் வெளியாகவிருக்கும் ‘கேஜிஎஃப் 2’ படத்திலும் இவர்களே சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்கள். ஏற்கனவே, ’கைதி’ படத்திற்காக இவர்கள் அமைத்த சண்டைக் காட்சிகள் பாராட்டுக்களை குவித்ததோடு படமும் சூப்பர் ஹிட் அடித்தது.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ்  தனது ‘விக்ரம்’ படத்தில்  சண்டைக் காட்சிகள் அமைக்க  மீண்டும் அன்பறிவ் மாஸ்டர்களுடன் இணைந்துள்ளார். கமல்ஹாசனுடன் லோகேஷ் கனகராஜ், அன்பறிவ் மாஸ்டர்கள் இருக்கும் படத்தை ட்விட்டரில் வெளியிட்டு உற்சாகமுடன் வெல்கம் கூறியுள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘விஜய் 65’ படத்திலும் அன்பறிவ் மாஸ்டர்கள்தான் சண்டைக் காட்சிகள் அமைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.