மதயானை கூட்டம் முகநூல்
சினிமா

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 18 |முரட்டுத்தனமான அண்ணனுக்கு பாசமிகு தங்கையாக செவனம்மா!

18-வது வாரமான இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் மதயானைக்கூட்டம் படத்தில் விஜி சந்திரசேகர் ஏற்று நடித்திருந்த செவனம்மா கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.

சுரேஷ் கண்ணன்

பருத்தி வீரன், சுப்பிரமணியபுரம் போன்ற திரைப்படங்களுக்கு நிகராக கவனத்தைப் பெற்றிருக்க வேண்டிய படைப்பு ‘மதயானைக்கூட்டம்’. ஆனால் ஏன் அது நிகழவில்லை என்பது துயரம் மட்டுமில்லை, துரதிர்ஷ்டமும் கூட. சாதிக்கு ஆதரவாக இந்தப்படம் உரையாடுகிறது என்று பலரும் தலைகீழாக புரிந்து கொண்டார்கள். சற்று நிதானித்திருந்தால் கூட இதன் மையத்தை நெருங்கியிருக்க முடியும். சாதியமும் சாதிய வெறியும் மனிதர்களை எத்தனை மூர்க்கத்தனமாக இயக்குகிறது என்பதைத்தான் இந்தப் படம் உக்கிரமாக அம்பலப்படுத்தி இருக்கிறது.

இதில் ‘செவனம்மா’ என்பது மிக வலிமையான பாத்திரம். படத்தின் ஆதார செய்தியே இவரின் மூலம்தான் பார்வையாளனுக்கு கடத்தப்படுகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் செவனம்மா வாய் விட்டு கோவென்று கதறும் ஓலம்தான் அந்தச் செய்தி.

பாசமலர், கிழக்கு சீமையிலே போன்று இதில் வரும் அண்ணன் - தங்கை பாத்திரங்களும் பேசப்பட்டிருக்க வேண்டும். அவற்றிலாவது உணர்ச்சிப் பெருக்கில், கண்ணீர் வழிய, உதடுகள் துடிக்க பக்கம் பக்கமாக வசனம் பேசுவார்கள். ஆனால் இதில் அப்படியேதும் நிகழ்வதில்லை. தங்கை செவனம்மாவின் ஒரு பார்வையிலேயே அனைத்தையும் புரிந்து கொள்வார் அண்ணன் வீரத்தேவர். அவர்களுக்குள் அப்படியொரு பாசம். முரட்டுத்தனமான பிணைப்பு என்று கூட சொல்லலாம்.

முரட்டுத்தனமான அண்ணனுக்கு பாசமிகு தங்கையாக செவனம்மா..செவனம்மா பாத்திரத்தில் மிக அற்புதமாக நடித்திருந்தார் விஜி சந்திரசேகர்.

சில நடிகைகள் என்னதான் உயிரைக் கொடுத்து நடித்திருந்தாலும் அதற்குத் தகுதியான புகழும் அங்கீகாரமும் கிடைக்காமல் பின்தங்கி விடுவார்கள். அப்படியொரு வரிசையில் விஜியைச் சொல்லலாம். இந்தப் படத்தில் வெளிப்பட்ட இவரது அபாரமான நடிப்பிற்காக தேசிய விருது கூட தரப்பட்டிருக்கலாம். பாலசந்தர் இயக்கிய ‘தில்லுமுல்லு’ படத்தில் ரஜினிக்குத் தங்கையாக அறிமுகமான விஜி, இந்தப் படத்தின் மூலம் நடிப்பில் அடைந்திருக்கும் உயரம் என்பது மிகப்பெரியது. பிரபல நடிகையான சரிதாவின் தங்கையான விஜி, அக்காவின் பெயருக்கு தகுந்த நியாயம் செய்திருக்கிறார்.

மதயானைக்கூட்டம் படத்தின் ஆரம்பமே அட்டகாசமாக இருக்கிறது. ஒரு மரண வீட்டில் நிகழும் தெருக்கூத்தின் வழியாக பாத்திரங்களும் பின்னணிகளும் மண்ணின் மணத்தோடு சுவாரசியமாக விவரிக்கப்பட்டுள்ளது. ஜெயக்கொடி தேவரின் மரணம். ஊரில் நிகழ்ந்த பெரிய சாவு. அதற்குரிய ஆடம்பரங்களும் மேள தாளங்களும் விரோதங்களும் அதில் வெளிப்படுகின்றன. இறந்தவருக்கு இரண்டு மனைவிகள். மூத்தவர் செவனம்மா. தன் கணவரின் மீது மிகுந்த பாசமும் அன்பும் இருந்தாலும், இன்னொரு சமூகத்தில் இருந்து இரண்டாவது மனைவியைத் தேடிக் கொண்டாரே என்று தன் கணவரிடம் பாராமுகமாகவும் வீராப்பாகவும் இருக்கிறார் செவனம்மா.

கூத்துக் கலைஞர்களில் ஒருவர் செவனம்மா பற்றி கேட்கிறார். “அந்த அம்மாவிற்கு அப்படியென்ன பெருமை?” பதில் வருகிறது. “எங்க ஆத்தா வீரத்துல வேலு நாச்சியாரு. துரோகம் பண்ணா தோலை உரிச்சுப்புடும். காசு விசயத்துல கறாரா இருக்கும். கந்து வட்டி விட்டு சம்பாதிக்குதுல்ல. ஆனால இரக்கத்துல எங்க ஆத்தா மதுரை மீனாச்சிப்பா” என்று இன்னொரு கலைஞர் பதில் சொல்லச் சொல்ல தொடர்பான காட்சிகள் விரிகின்றன.

தனது கணவர் மீது செவனம்மாவிற்கு ஏன் இத்தனை கோபம் என்பது இன்னொரு காட்சியில் தெரிகிறது. “மர வியாபாரம் பண்றேன்னு போயிட்டு இந்த மஞ்ச -----கூட்டிட்டு வந்தான். அவளைக் கொண்டுப்புட்டு நீ சேர்ந்து வாழுன்னு எங்க அண்ணன் சொல்லுச்சு. ஆத்தி.. நான்தான் வேணாம்ட்டேன்” என்று செவனம்மா ஆங்காரமாகச் சொல்லும் போது மேலுக்கு உக்கிரமும் அதனுள் ஒளிந்திருக்கும் பாசமும் தெரிகிறது.

கணவரின் மீதுள்ள அன்பும் கோபமும் - செவனம்மாவின் விசித்திரமான கலவை

ஏலத்தில் தோற்ற ஜெயக்கொடி தேவரை, எதிர் தரப்பு ஆசாமி ஒருவன், மலினமாக சைகை காட்டி அவமானப்படுத்துகிறான். இந்தச் செய்தியை அறிந்ததும் செவனம்மா, கோபத்துடன் தன் அண்ணனைப் பார்க்கிறார். அவ்வளவுதான். அவருக்குப் புரிந்து விடுகிறது. அவமதிப்பு செய்தவன் ஆண்குறி வெட்டுப்பட்டு மறுநாள் இறந்து கிடக்கிறான்.

காதுகுத்து விழாவில் மொய் எழுதும் போது ‘செவனம்மா.. பத்தாயிரத்து ஒண்ணு” என்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு வர “எலெ.. என்ன.. என் பெயரை மட்டும் சொல்லுறே.. என் புருஷன் பெயரையும் சேர்த்து சொல்லு” என்று கர்ஜிக்கிறார் செவனம்மா. ‘அந்தாள் பேரைச் சொன்னாதான் உனக்கு புடிக்காதே ஆத்தா” என்று அவர் பம்ம, “ஏய்.. என்ன. அந்தாளு. இந்தாளுன்றே.. கொண்டே புடுவேன். என் புருஷனை நான் பேசுவேன். நீயெல்லாம் பேசுனா மிதிச்சேபுடுவேன். இன்னொருக்கா அனவுன்ஸ் பண்ணு” என்கிறார்.

அதே விழாவிற்கு ஜெயக்கொடி தேவர் வர, தூரத்தில் இருந்து அவரை கனிவாகப் பார்க்கிறார் செவனம்மா. ஆனால் பக்கத்தில் கணவரின் இரண்டாவது மனைவியை பார்த்ததும் முகத்தில் இருந்த கனிவு மாறி இறுக்கமாகிறது. அருகே வரும் கணவர், எதையோ சொல்ல முற்பட்டு ‘செவனம்மா’ என்று அழைக்க “ஆத்தி.. பேரைச் சொல்லி கூப்பிட வேணாம்ன்னு சொல்லுங்கண்ணே.. எனக்கு சாக வருது’ என்று அருகிலிருக்கும் சொந்தக்காரரிடம் கடுகடுவென சொல்கிறார் செவனம்மா.

“மக கல்யாணத்தைப் பத்தி பேச வந்திருக்காரும்மா” என்று அவர் சொல்ல “என் மகளுக்கு கல்யாணம் ஆகி 12 வயசுல பையன் இருக்கான். எவளோ பெத்த புள்ளைக்கு நான் எப்படி அம்மா ஆக முடியும்?” என்று வெடிக்கிறார். “அக்கா.. நான் பெத்த மக உங்களுக்கும் புள்ள இல்லையா?” என்று இரண்டாவது மனைவி கேட்க, ‘ச்சீ.. நாயே.. யார்றி. உனக்கு அக்கா?” என்று சீறுகிறார் செவனம்மா. “ஏம்மா. இப்படிப் பேசற.. அவ வாழ்க்கை வீண் போகாதா?” என்று சொந்தக்காரர் சொல்ல “வாழ்க்கை.. என் வாழ்க்கை வீணாப் போச்சே.. என்னது முடிஞ்சு போன வாழ்க்கையா. என்னண்ணே.. அப்படி அசால்ட்டா சொல்லிப்பிட்டே.. நான் என்ன முண்டச்சியா.. நான் இருப்பேன்னு தெரிஞ்சும் சோடி போட்டுக்கிட்டு வந்திருக்காரு” என்று தன் கணவரைச் சுட்டிக் காட்டி வெடிக்கிறார் செவனம்மா.

சுங்கிடிச் சேலை, நெற்றியில் பெரிய பொட்டு, காதுகளில் பெரிய அளவு கம்மல்கள், இரண்டு பக்கமும் மூக்குத்தி, தண்டுவட சங்கிலி என்று ஒரு கிராமத்துப் பெண்மணியின் தோரணையில் கச்சிதமாக தோற்றமளிக்கும் விஜி, ஒவ்வொரு காட்சியிலும் உணர்வுகளின் முகபாவங்களை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒரு சாவு - தொடரும் கொலையும் விரோதமும்

ஜெயக்கொடித் தேவரின் மரணம் நிகழ்கிறது. அவரது இளைய மனைவியின் வீட்டிலிருந்து பிணத்தை வம்படியாக தூக்கி வருகிறார்கள். தன் கணவரின் சடலத்தைப் பார்த்ததும் இடிந்து போன தோற்றத்துடன் துயரமே உருவாக மெல்ல மெல்ல நடந்து வருகிறார் செவனம்மா. ஒரு குழந்தையைப் போல கணவரின் முகத்தை கையில் ஏந்திப் பார்க்க ஆசைப்பட்டு பிறகு தயங்கி கைகளை இழுத்துக் கொள்கிறார். இப்படியாக இரண்டாம் தாரத்தை தேடிக் கொண்ட கணவனின் மீதுள்ள பிரியத்தையும் கோபத்தையும் ஒருவிதமான கலவையில் பல காட்சிகளில் தந்து அசத்தியிருக்கிறார் விஜி சந்திரசேகர்.

5 பவுன் சங்கிலி செய்முறைக்கு ஆசைப்படும் பூலோகராசா (செவன்ம்மாவின் மகன்), அது கிடைக்காத ஆத்திரத்தில் வீரத்தேவரை அவமதிப்பாகப் பேச, பாய்ந்து சென்று அவனை அறைகிறார் செவனம்மா. “நான் இருக்கற வரைக்கும் என் அண்ணனை தலைகுனிய விட மாட்டேன்” என்று உறுமுகிறார். பணத்தின் மீது ஆசை கொண்ட பூலோகராசா, தங்கச் சங்கலி கிடைக்காத வெறுப்பில் இரண்டாம் சம்சாரத்தின் மகனான பார்த்திபனை கறிச்சோறு சாப்பிட வம்படியாக அழைத்து வருகிறான். அவன் கிண்டலாகப் பேசுவதால் ஏற்படும் தகராறில் வீரத்தேவரின் மூத்தமகன் தற்செயலாக இறக்கிறான். கொலைப்பழி பார்த்திபனின் மீது விழுகிறது. அவன் தப்பியோடுகிறான்.

அண்ணன் மகன் இறந்தது செவனம்மாவை ஆத்திரப்படுத்துகிறது. “சொந்த பந்தங்களுக்கு எல்லாம் சொல்லி விடுங்கப்பா. அவனை எங்கிருந்தாலும் தூக்கிட்டு வாங்க. அவனை முடிச்சப்புறம்தான் பொணத்தை எடுக்கணும்” என்று வீராவேசமாக சொல்கிறார். என்ன இருந்தாலும் செவனம்மா, வீரத்தேவரின் இன்னொரு பிம்பம்தானே?!

பார்த்திபன் கிடைக்காத ஆத்திரத்தை வீரத்தேவரின் மகன்கள் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் சம்பவத்தின் போது உண்மையாக நடந்ததை பூலோகராசா சொல்கிறான். செவனம்மாவிற்குள் மனமாற்றம் ஏற்படும் முக்கியமான காட்சி இது. ஒருவேளை பார்த்திபன் நிரபராதியோ என்கிற எண்ணம் ஏற்படுகிறது. தப்பிச் சென்ற பார்த்திபனை வீரத்தேவரும் அவரது பிள்ளைகளும் கொலைவெறியோடு தேடிக் கொண்டிருக்கும் போது அவனைத் தப்பிக்க வைப்பவர் செவனம்மாதான்.

நிரபராதிக்கு அடைக்கலம் தரும் செவனம்மா

“உங்களைப் பார்க்கணும்னுதான் வந்தேன் பெரியம்மா. அவங்க என்ன சொன்னாங்கன்னு தெரியல. ஆனா என் மேல தப்பு இல்ல. நடந்தது ஒரு விபத்து. இருந்தாலும் நான் செஞ்சது தப்புதான். இதைச் சொல்லிட்டு போலீஸ்ல சரண் அடையலாம்னு போறேன்” என்று பார்த்திபன் உருக்கமாகச் சொல்ல, அவனுடைய தரப்பு நியாயத்தைப் புரிந்து கொள்கிறார் செவனம்மா. அவரிடமுள்ள பழிவாங்கும் தன்மை மாறி கருணையுணர்வு பெருகுகிறது. “உங்க கிட்ட ஒண்ணே ஒண்ணுதான் கேக்கறேன் பெரியம்மா.. எங்க அம்மாவைப் பார்த்துக்கங்க” என்பதுதான் அவனது வேண்டுகோளாக இருக்கிறது.

ஆனால் வீரத்தேவரோ பார்த்திபனைத் தீர்த்துக் கட்டுவதற்காக பல முயற்சிகளை மேற்கொள்கிறார். பார்த்திபன் சிறைக்குச் சென்றாலும் ஜாமீனில் வெளியே எடுத்தாவது போட்டுத்தள்ள வேண்டும் என்கிற அளவிற்கு அவரது வெறி பயணிக்கிறது. எனவே வழக்கறிஞரின் ஆலோசனையின்படி தலைமறைவாகிறான் பார்த்திபன். பார்த்திபனின் அம்மாவைத் தூக்கினால் அவன் தன்னால் ஊருக்குள் வருவான் என்று திட்டமிடுகிறார். ஆனால் செவன்ம்மா இதை ஆட்சேபித்து “பொம்பளைங்க மேல கை வெக்கறது சரியில்ல. போலீஸ்ல புகார் சொல்லலாம்” என்கிறார். “என்னிக்கு நம்ம வம்சம் போலீஸ் கிட்ட போயிருக்கு? கழுத்து அறுத்துப் போட்டுட்டு கமுக்கமா கறிச்சோறு சாப்பிடறதுதான் நம்ம சமூகத்திற்கு அழகு” என்று வீரத்தேவரின் மகன்கள் கொந்தளிக்கிறார்கள்.

முதன்முறையாக தங்கையின் ஆட்சேபத்தையும் மீறி செயல்படுகிறார் வீரத்தேவர். பார்த்திபனின் அம்மாவைத் தூக்குவதற்கு மறைமுக சம்மதம் தெரிவிக்கிறார். ஆனால் அவர்களை முந்திச் சென்று பார்த்திபனின் தாயைக் காப்பாற்றி அடைக்கலம் தருகிறார் செவனம்மா. இது வீரத்தேவருக்கு ஆச்சரியத்தையும் திகைப்பையும் தருகிறது.

பாசத்தை நிரூபிக்க செவனம்மா செய்யும் விபரீதம்

பார்த்திபனை கொல்லும் வேட்டை ஆவேசமாகத் தொடர்கிறது. இதில் வீரத்தேவர் தொடர்ந்து தோல்வியுறுவதால் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்ய முயல்கிறார். இதற்குப் பிறகு அண்ணனும் தங்கையும் சந்தித்துப் பேசும் காட்சி உணர்ச்சிகரமானது. ‘ஏண்ணே?” என்று செவனம்மா துயரத்துடன் கேட்க “என்னால முடியலைம்மா. செத்துப் போயிடலாம்னு இருக்கு” என்று கண்கசிகிறார் வீரத்தேவர். பார்த்திபன் காப்பாற்றப்படுவதின் பின்னணியில் செவனம்மா இருக்கலாமோ என்று சந்தேகிக்கிறார். “என்னையாண்ணே சந்தேகப்படறே?” என்று துடித்துப் போகும் செவனம்மா, தன் பாசத்தை நிரூபிப்பதற்காக ஒரு வீபரீதமான காரியத்தைச் செய்யத் தீர்மானிக்கிறார். குடிநீரில் விஷம் கலந்து பார்த்திபனின் தாயைக் கொல்கிறார்.

தான் செய்த காரியத்திற்குப் பதில் உபகாரமாக அண்ணனிடம் ஒரேயொரு உதவியைக் கேட்கிறார் செவனம்மா. “என் புருஷனை கட்டிக்கிட்டு எனக்கு துரோகம் பண்ணிட்டான்னு அவ மேல எனக்கு கோபம் இருந்ததுதான். ஆனா நானும் இப்ப துரோகம் பண்ணிட்டேன். நான் செத்தா எப்படி சவ ஊர்வலம் மரியாதையா நடக்குமோ, அப்படி அவளோட பொணம் மரியாதையா போகணும்” என்கிற வாக்குறுதியைக் கேட்க அதற்கு சம்மதிக்கிறார் வீரத்தேவர். அவர்களாக இந்தக் கொலையைச் செய்திருந்தால், அந்தப் பிணம் அநாதைப் பிணமாகத்தான் போயிருக்கும். இந்த நோக்கில் செவனம்மா செய்தது ஒரு நல்ல விஷயம்.

தன்னுடைய தாய் கொல்லப்பட்டதை அறிந்து துடித்துப் போய் தலைமறைவு வாழ்க்கையிலிருந்து ஓடி வருகிறான் பார்த்திபன். “உன்னை நம்பித்தானே ஒப்படைத்து விட்டுப் போனேன்” என்று பார்வையாலேயே அவன் கேட்க, குற்றவுணர்வு தாங்காமல் தலையைத் தாழ்த்திக் கொள்கிறார் செவனம்மா. சடங்குகள் முடிந்ததும் பார்த்திபனை போட்டுத் தள்ள வீரத்தேவரின் மகன்கள் பாய்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரையும் அடித்து வீழ்த்துகிறான் பார்த்திபன். அவனைக் கொல்வதற்காக ஒரு குறுக்கு வழியை கையாள்கிறார் வீரத்தேவர். பின்னால் இருந்து ஆயுதத்தை எறிகிறார். “வேணாம்ப்பா.. நீயெல்லாம் இதைப் பண்ணக்கூடாது” என்று மற்றவர்கள் தடுத்தாலும் அவரது வெறி அடங்குவதில்லை.

கழுத்தில் பாய்ந்த ஆயுதத்துடன் உயிருக்குப் போராடியபடி கிடக்கிறான் பார்த்திபன். துயரமே உருவாக அவனுக்கு அருகே வரும் செவனம்மா, ஆறுதலாக கை வைக்க முயல, அதைத் தள்ளி விடுகிறான் பார்த்திபன். வீரத்தேவரையும் அவரது மகன்களையும் காவல்துறை கைது செய்து கொண்டு போகிறது. பார்த்திபனின் குருதியின் மீது குற்றவுணர்வுடன் கோவென்று செவனம்மா கதறியழும் காட்சியுடன் படம் நிறைகிறது.

சாதி வெறி, அதனால் ஏற்படும் தொடர் விரோதம், பழிவாங்கும் வெறி போன்றவற்றை சித்தரிப்பதின் மூலம் வன்முறையென்பது மனிதர்களுக்கு எத்தனை தீங்கு விளைவிக்கிறது என்பதைத்தான் இந்தப் படம் உணர்த்துகிறது. இதற்கு மாறாக இது சாதியத்தை ஆதரிக்கிற படம் என்று புரிந்து கொள்வது அபத்தம். செவனம்மாவும் இதே முரட்டுத்தனமான கூட்டத்தைச் சேர்ந்த பெண் என்றாலும் அவருக்குள் ஏற்படுகிற மனிதாபிமான மாற்றமும் குற்றவுணர்ச்சியும்தான் இந்தப் படத்தின் மையம். அந்த உணர்வை பார்வையாளர்களுக்கும் கடத்துவதில் படம் வெற்றி பெற்றிருக்கிறது.

‘செவனம்மா’வாக பல காட்சிகளில் அசத்தியிருப்பதின் மூலம் தனது பாத்திரத்தை மறக்க முடியாததாக ஆக்கியிருக்கிறார் விஜி சந்திரசேகர்.