சுவாரசியத்தைக் கூட்டுவதற்காகவும் தீவிரமான காட்சிகளின் இடையில் பார்வையாளர்கள் இளைப்பாறுவதற்கும் ‘காமெடி டிராக்குகள்’ தமிழ் சினிமாவில் உருவாக்கப்பட்டன. இவை பெரும்பாலும் மையக்கதைக்கு தொடர்பில்லாமல் எண்ணைய்யும் தண்ணீரும் போல தனித்தனியே இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் சில திரைப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகள் மையக்கதையுடன் செம்மண் நீர் போல கச்சிதமாக கலந்து பயணிக்கும். இரண்டாவது வகையில் அமைந்த நகைச்சுவைதான் எப்போதுமே சிறப்பாக அமையும்.
அப்படியாக அமைந்ததொரு படம்தான் ‘எம்டன் மகன்’ என்கிற ‘எம் மகன்’. மையக்கதையோடு மிக நெருக்கமாக பயணிக்கிற ‘அய்யாக்கண்ணு’ என்கிற பாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார் வடிவேலு.
ஒரு வளரிளம் சிறுவனுக்கு தாய்மாமன், சித்தப்பா போன்ற உறவுகள் என்பது எப்போதுமே ஸ்பெஷல். பெற்றோர் கண்டிக்கும் போதோ, செய்த தவறுக்காக அடிக்கும் போதோ, சேதாரம் அதிகம் நேராமல் குறுக்கே பாய்ந்து காப்பாற்றுவதும் அரவணைப்பதும் இந்த உறவாகத்தான் இருக்கும். சற்றே வயது கூடியிருந்தாலும், அந்த இளைஞனுக்கு ஏறத்தாழ நண்பனின் உறவில் நெருக்கமாக இருப்பதும் இந்த உறவுதான். தந்தைக்கு அடுத்தபடியாக, அவனுக்கு பல்வேறு விஷயங்களில் வழிகாட்டுவதும் உதவி செய்வதும் மாமா, சித்தப்பா கேரக்டர்கள்தான். இப்படியொரு பாத்திரத்தில்தான் வடிவேலு தனது மிகச்சிறந்த நடிப்பைத் தந்திருக்கிறார்.
அந்தக் குடும்பத்தின் தலைவரான திருமலை (நாசர்) முன்கோபமும் மூர்க்க சுபாவமும் உடையவர். மனைவி, மகன் என்று குடும்பத்தில் உள்ள எல்லோருமே அவருடைய வரவைக் கண்டால் அஞ்சி நடுங்குவார்கள். மளிகைக் கடையை நடத்தி வரும் திருமலை, கல்லூரியில் படிக்கும் தன்னுடைய மகன் கிருஷ்ணாவை (பரத்), கடையில் வேலை செய்யும் பணியாளரை விடவும் மோசமாக நடத்துவார். ஒரு சிறிய தப்பு நடந்தால் கூட பலர் முன்னிலையில் மகனை அடிப்பார். வசை மாரி பொழிவார்.
கணவனின் மிகையான கோபத்தைச் சமாளிக்க முடியாமல் திணறுவது, திருமலையின் மனைவியான செல்வியின் அன்றாட பிழைப்பாக இருக்கிறது.
இந்தச் சூழலில் திருமலையின் கண்டிப்பில் இருந்து தனது அக்கா செல்வியையும், அக்காள் மகனான கிருஷ்ணாவையும் அவ்வப்போது காப்பாற்ற முயல்வது கருப்பட்டி என்கிற அய்யாக்கண்ணுவின் (வடிவேலு) வழக்கமாக இருக்கிறது.
இப்படியாக தப்பிக்க வைக்கும் முயற்சியில் அய்யாக்கண்ணுவிற்கும் பலத்த சேதாரம் ஏற்படும். என்றாலும் தனது அக்காள் குடும்பத்திற்காக அனைத்தையும் சகித்துக் கொள்கிறான்.
எப்போதும் கண்டிப்பான கறார்த்தனத்துடனும் சிடுமூஞ்சித்தனத்துடனும் இருப்பதால் திருமலைக்கு ‘எம்டன்’ என்கிற பட்டப்பெயரை வைத்தது அய்யாக்கண்ணுதான்.
படத்தின் ஆரம்பத்திலேயே வடிவேலுவின் அட்டகாசம் ஆரம்பமாகி விடுகிறது. கோயிலில் பால்குடம் எடுக்கச் செல்லும் தன் மனைவியையும் மகளையும் “வீட்ல சாமி கும்பிடாம ரோட்ல என்னதிது?” என்று எரிச்சலுடன் கடிந்து கொள்கிறார் திருமலை. அவரை அங்கிருந்து ஒருவழியாக சமாதானப்படுத்தி அழைத்துச் செல்கிறான் அய்யாக்கண்ணு.
மளிகைக் கடைக்குச் சென்றதும் அடுத்த பிரச்னை. ஆடிட்டரிடம் சேர வேண்டிய ஒரு ஃபைலை, மகன் கொண்டு செல்லாமல் கல்லூரியில் பரிசு வாங்கச் சென்றிருக்கும் தகவல் திருமலைக்கு ஆத்திரத்தைக் கிளப்புகிறது. நேராக கல்லூரிக்கே செல்வதற்காக கிளம்பும் அவரை “மச்சான்.. மச்சான்.. கடைல அவனை அவமானப்படுத்தறது போதாம.. காலேஜ்ல வேறயா.. வேணாம்.. மச்சான்..நான் வேணா ஃபைலை கொண்டு போய் சேத்துடறேன் ” என்று தடுத்துப் பார்க்கிறான்.
ம்ஹூம். அவனது சமாதானம் செல்லுபடியாவதில்லை. மாறாக, அவனுக்கே தண்டனை கிடைக்கிறது. “கடையை விட்டு இப்பவே இறங்கிப் போடா” என்று திருமலை கொதிக்க, அவருக்கு தன்னுடைய பாணியில் ஒழுங்கு காட்டி விட்டு செல்கிறான் அய்யாக்கண்ணு.
திருமலை இப்படி கோபத்தில் துரத்தியடிப்பதும், பிறகு வேலைக்கு இழுப்பதும் வழக்கமான செயல் என்பது அடுத்த காட்சியிலேயே தெரிகிறது. பையைத் தூக்கிக் கொண்டு கெத்தாக நடக்கும் அய்யாக்கண்ணுவை ‘டேய் கருப்பட்டி.. கருப்பட்டி..’ என்று ஸ்கூட்டரில் துரத்துகிறார் திருமலை. ஆனால் திரும்பிப் பார்க்காமல் அப்படியே நடக்கிறான்.
பிறகு ‘அய்யாக்கண்ணு’ என்று மரியாதையுடன் கூப்பிட்டவுடன் நிற்கிறான். “எங்களுக்கும் ரோசம், சொந்த பந்தமெல்லாம் இருக்கு” என்று வீறாப்பாக பேசும் அய்யாக்கண்ணுவை “சரி. சரி. கொள்முதலுக்கு போய்ட்டு வா” என்று திருமலை சொல்ல “பணத்தைக் கொடுக்காம எங்க போறது” என்று தானும் சமாதானமாகிறான் அய்யாக்கண்ணு.
இந்த இடத்தில் வடிவேலுவின் ஒரு நுட்பமான நகைச்சுவை வெளிப்படுகிறது. திருமலையின் ஸ்கூட்டரில் ஏறி அமரும் வடிவேலு, வாகனம் கிளம்புகிற போது ஏற்படுகிற ஜெர்க்கை ‘எய். எய்…எய்..’ என்று உடலை அசைத்து அதையும் காமெடியாக்கி விடுவதை சற்று உன்னிப்பாக கவனித்தால் தெரியும்.
கடையில் வைத்திருந்த பணத்தில் ஐநூறு ரூபாய் குறைவதையொட்டி தனது மகன் கிருஷ்ணாவை சந்தேகப்பட்டு அடித்துப் பிளக்கிறார் திருமலை. மனைவி, மகள் தடுப்பதையும் மீறி அவனுக்கு பயங்கர அடி விழுகிறது. கொள்முதலுக்குப் போய் விட்டு திரும்பி வரும் அய்யாக்கண்ணுவிற்கு இந்தத் தகவல் தெரிந்தவுடன் கொதித்து விடுகிறான். “எங்க அவரு.. கேக்கறதுக்கு தாய் மாமன் நான் இருக்கேன்” என்று திருமலையிடம் சென்று “அந்தப் பணத்தை நான்தான் எடுத்தேன். எனக்கு சம்பளம்ன்னு ஏதாச்சும் கொடுத்தீங்களா.. தேவையில்லாம கிருஷ்ணனை சந்தேகப்பட்டீங்க” என்று ஆத்திரத்துடன் பேசுகிறான். ‘என்னாகுமோ’ என்கிற பயத்தில் தடுக்க வரும் தனது அக்காளை “நீ பேசாத.. சொல்லிப்புட்டேன்” என்று கண்கள் சிவக்க அப்புறப்படுத்துகிறான்.
“அங்கங்க போய் பாருங்க.. பிள்ளைங்க எப்படியெல்லாம் இருக்குதுன்னு. நான் உங்களுக்கு புள்ளையா பொறந்திருந்தா, தலைல கல்லை எடுத்துப் போட்டிருப்பேன்” என்று ஒரு ப்ளோவில் வடிவேலு சொல்லி விட, அதைக் கேட்டு திருமலை உஷ்ணத்துடன் முறைக்க “போங்க எல்லோரும்..” என்று அதே கோபமான தொனியில் சொல்லி சட்டென்று அங்கிருந்து விலகி ஆட்டத்தை சாமர்த்தியமாக கலைக்கும் வடிவேலுவின் நடிப்பு அருமையானது. ஒரு காட்சியில் உணர்ச்சிகரத்தையும் நகைச்சுவையையும் எப்படி சரிசமமாக கொண்டு வருவது என்பதற்கு இது நல்ல உதாரணம்.
தவறு செய்யாத மகனை அடித்து விட்டோமே என்கிற குற்றவுணர்ச்சியில் இருக்கும் திருமலை திடீரென்று பாசத்தைக் கொட்ட முன்வருவார். மகனுக்கு தன் கையாலேயே கோழிக்குழம்பு சாப்பாடு பரிமாறுவார். ‘இன்னிக்கும் வில்லங்கம்தான்’ என்று அய்யாக்கண்ணு வாய்க்குள் முனகுவான். அவன் சொன்னதைப் போலவே நடக்கும்.
‘நல்லாச் சாப்புட்றா” என்று அதட்டும் திருமலை, ஈரலை எடுத்து மகனுக்கு ஊட்ட, அந்த வஸ்து பிடிக்காத கிருஷ்ணா, ‘எனக்குப் பிடிக்காது. வாந்தி வரும்’ என்று தயக்கத்துடன் பின்வாங்க, தன் பாசத்தைக் கூட வன்முறையாக திருமலை வெளிப்படுத்துவது சிறந்த காட்சி. அதைத் தடுக்க முயலும் அய்யாக்கண்ணு, கண்கலங்கும் மருமகனுக்கு பிறகு ஆறுதல் சொல்வான். “விட்றா.. நாம வாங்காத அடியா. நேத்திய விட இன்னிக்கு அடி குறைஞ்சதுன்னா அது லாபம்ன்னு நெனச்சுக்க”
“செத்துப் போயிடலாமான்னு இருக்கு” என்று கலங்கும் கிருஷ்ணனுக்கு பதறிப் போய் “வாய்ல அடி… அப்படிலாம் சொல்லப்படாது” என்று ஆறுதல் சொல்லி விட்டு அய்யாக்கண்ணு அடுத்ததாக செய்யும் செய்கை சிறப்பானது. “தூங்குடா.. சரியாயிடும்” என்று சொல்லும் அய்யாக்கண்ணு, தன் மருமகனுக்கு கால் பிடித்து விடுவான். “வேணாம்.. மாமா..” என்று கிருஷ்ணன் தடுக்க “பரவாயில்லப்பா.. மாமன்தானே” என்று அய்யாக்கண்ணு கால் அமுக்குவதை தொடர்வான். சட்டென்று கடந்து போகும் இந்தச் சிறிய காட்சி அப்படியொரு நெகிழ்ச்சியை நமக்குள் ஏற்படுத்தும்.
திருமலை மதுரைக்குச் செல்லும் இடைவெளி நேரத்தில், மாமா மகளை பார்ப்பதற்காக கிருஷ்ணா தன் அம்மாவுடன் கிளம்பி விடுவதும், எதையோ மறந்து விட்டு திரும்பும் திருமலையைச் சமாளிப்பதற்காக கோயில் வாசலில் அங்கப்பிரதட்சணம் செய்வது போல் போடும் டிராமாவில் வடிவேலு மற்றும் சரண்யாவின் நகைச்சுவை நடிப்பு சிறப்பாக வெளிப்படும்.
அதைப் போலவே, தான் ஊரிலிருந்து வருவதற்குள் தன் அப்பாவின் பிணத்தை அடக்கம் செய்வதை அறியும் அய்யாக்கண்ணு, “எங்கடா எங்க அப்பன்?” என்று எல்லோரிடமும் கேட்டு அலப்பறை செய்வதும் அதே ப்ளோவில் திருமலையைத் திட்டி விட்டு பம்முவதும் சிரிக்க வைக்கும் காட்சி. சுடுகாட்டிற்குச் சென்று வேறொரு சடலத்தின் மீது விழுந்து புரண்டு அழுவது, இந்தக் காட்சியை நகைச்சுவைத் தன்மையை முழுமையாக்கி விடும்.
கிருஷ்ணா தன் மாமன் மகளுடன் நெருக்கமாகப் பழகுவது இரு குடும்பத்தாருக்கும் தெரிந்து ஏற்கெனவே இருந்த விரோதம் இன்னமும் பற்றிக் கொண்டு பெரும் கலவரம் நடந்து விடும். ஆதரவின்றி நிற்கும் இளஞ்சோடிக்கு தார்மீகமான ஆதரவைத் தருவதோடு பாதுகாப்பாகவும் இருப்பவன் அய்யாக்கண்ணு என்கிற தாய்மாமன்தான். வேறு ஊருக்குப் பயணிக்கும் அவர்களோடு தானும் பாதுகாப்பாக செல்ல முயற்சிப்பான். “கைவண்டி இழுத்தாவது உங்க ரெண்டு பேருக்கும் கஞ்சி ஊத்துவேன்” என்று ஆவேசத்துடன் சொல்வான். ஆனால் “அப்பாவுக்கு துணை யாருமில்லை” என்று கிருஷ்ணா தடுத்து விடுவான்.
இருவரையும் பேருந்தில் ஏற்றி விடும் அய்யாக்கண்ணு.. “அண்ணன் பொண்ணு.. அக்கா பிள்ளை. யாருமே இல்லாத அநாதை மாதிரி போகுதே… தாய்மாமன்.. தறுதலை மாதிரி நின்னு வேடிக்கை பார்க்கறேனே கடவுளே.. எல்லாம் நல்லபடியாக நடக்கணும்” என்று கண்கலங்கி உருக்கமாக வேண்டிக் கொள்ளும் வடிவேலுவிடம் வெளிப்படும் குணச்சித்திர நடிப்பு, வேறு எந்தவொரு படத்திலும் பார்த்திராத அற்புதமான காட்சி.
பொதுவாக நகைச்சுவை நடிகர்கள், குணச்சித்திர நடிப்பைத் தந்தால் அது கூடுதலாக பிரகாசிக்கும் என்பதை நாகேஷ் முதற்கொண்டு பல நடிகர்கள் நிரூபித்திருக்கிறார்கள். இந்த வரிசையில் வடிவேலுவின் நடிப்பும் அதை நிரூபிக்கிறது. ‘அய்யாக்கண்ணு’ என்னும் தாய்மாமனை மறக்கவே முடியாத பாத்திரமாக மாற்றி விட்டார் வடிவேலு.