iraivi - pooja devariya web
சினிமா

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்| ’மலர்விழி’ ஆக ’இறைவி’-ல் மின்னலென வெட்டிச் சென்ற பூஜா தேவரியா!

சுரேஷ் கண்ணன்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உருவாக்கிய படங்களின் வரிசையில் ‘இறைவி’ தனித்துவமான திரைப்படம். அதிகமாக கவனித்திருக்கப்பட வேண்டிய திரைப்படமும் கூட.

கார்த்திக் சுப்புராஜ்

ஆணாதிக்க உலகில், அகங்காரத்திற்கு மட்டுமே முதன்மையான மதிப்பையும் முக்கியத்துவத்தையும் ஆண்கள் தருகிறார்கள். அதனால் ஏற்படும் இழப்புகள், வீழ்ச்சிகள், துயரங்கள் போன்றவை அந்த ஆண்களுடன் இணைந்துள்ள பெண்களையும் குழந்தைகளையும் கடுமையாகப் பாதிக்கின்றன. ஆனால் அகங்கார வெறி தலைக்கேறும் போது ஆண்கள் இதுபற்றி பெரிதாக அக்கறை கொள்வதில்லை.

தங்களின் குரோதம், கோபம் போன்ற உணர்ச்சிகள் பெருகி வெடிக்கும் போது ஆண் என்கிற தங்களின் நோக்கில் மட்டுமே நின்று செயலாற்றுகிறார்கள். அந்த எதிர்மறைச் செயல்களால் குடும்பம் என்கிற நிறுவனத்துடன் இணைந்துள்ள பெண்களும் குழந்தைகளும் பாதிப்பை அடைய வேண்டியிருக்கிறது. இதனால் பிரிவுகள் நிகழ்கின்றன. குடும்பங்கள் உடைகின்றன. மனம் வருந்தி ஆண்கள் தாமதமாக தங்களின் தவறை உணரும் போது காலம் ஏறத்தாழ கடந்து போயிருக்கிறது. அந்தப் பிரிவுகள் இணைக்க முடியாதபடிக்கு சிதைந்து போய் விடுகின்றன.

மேடை நாடக அனுபவமுள்ள பூஜா தேவரியா..

இதுதான் ‘இறைவி’ திரைப்படத்தின் மையம். ஆணாதிக்க உலகில் அல்லலுறும் பெண்களைப் பற்றிய கதை இது. கார்த்திக் சுப்புராஜ், தன்னுடைய பிரத்யேக பாணியில் இந்தப் படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார். ஆனால் படத்திற்குள் இருக்கிற ஏராளமான பாத்திரங்கள், அடுக்குகள், கோணங்கள், சம்பவங்கள் காரணமாக திரைக்கதை திசைமாறி அலைபாய்ந்து விட்டதாகத் தோன்றியது. விமர்சனரீதியாக இந்தப் படம் கவனத்தைப் பெற்றிருந்தாலும் வணிகரீதியாக பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை.

இறைவி

எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, கமலினி என்று பல கேரக்டர்கள் ஊடாடும் இந்தப் படத்தில் அனைவருமே தங்களின் சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். இதற்கு இடையில் வரும் ஒரு சிறிய டிராக்கில் ‘மலர்விழி’ என்கிற கேரக்டரில் பூஜா தேவரியா தந்திருக்கும் இயல்பான மற்றும் துணிச்சலான நடிப்பு தனித்துப் பிரகாசிக்கிறது.

தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்தவர் பூஜா தேவரியா. செல்வராகவன் இயக்கிய ‘மயக்கம் என்ன?’ என்கிற திரைப்படத்தில் அறிமுகமானார். ஹீரோ தனுஷின் தோழி பாத்திரத்தில் சில காட்சிகளில் வந்தாலும் கூட பூஜாவின் இயல்பான நடிப்பு வெளிப்பட்டிருப்பதைக் கவனிக்க முடியும்.

பூஜா தேவரியா

அதன் பிறகு ஒரு சுயாதீன, ஆங்கில நாடகக்குழுவில் இணைந்து தீவிரமாக இயங்கினார் பூஜா. பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். Maya from Madurai என்கிற ஆங்கில நாடகத்தை இயக்கினார். பிறகு கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’, மணிகண்டனின் ‘குற்றமே தண்டனை’ போன்ற சில தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார். சில கன்னடத் திரைப்படங்களும் உண்டு.

நடிகர்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் விதமாக நடிப்புப் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தை பூஜா நடத்தி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ திரைப்படத்தில் விஜய்சேதுபதி காரெக்டருக்கு தனித்துவமான உடல்மொழி மற்றும் அசைவுகளை வடிவமைப்பதில் பூஜாவின் பயிற்சியும் பங்களிப்பும் இருக்கிறது.

சிறிய பாத்திரத்தில் மிகச் சிறந்த நடிப்பு..

‘இறைவி’ திரைப்படத்தில் பூஜாவின் பாத்திரம் சிறியது. அவர் வருகிற காட்சிகளும் குறைவு. ஆனால் மிக வெளிப்படையான, துணிச்சலான பாத்திரம். எவ்விதமான செயற்கையான ஆவேசமும் மிகையும் இல்லாமல் மிக இயல்பாக இந்தப் பாத்திரத்தை பூஜா கையாண்டிருக்கிறார். அதனாலேயே ‘மலர்விழி’ என்கிற இந்த கேரக்டருக்காக விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

vijay sethupathi

மலர்விழியும் (பூஜா), மைக்கேலும் (விஜய் சேதுபதி) உடலுறவு கொள்ளும் காட்சியோடு இந்த டிராக் துவங்குகிறது. மலர்விழி கணவனை இழந்த பெண். உருகி உருகி காதலித்து நடந்த திருமணம்தான். வியாபார நஷ்டம் காரணமாக கோழைத்தனமாக சாவைத் தேடிக் கொண்டான் கணவன். தனிமையில் இருக்கும் மலர்விழிக்கு ஓர் ஆண் துணை தேவைப்படுகிறது. அதாவது செக்ஸ் மட்டும். தன்னுடைய இந்தத் தேர்வில் பூஜா தெளிவாகவும் பாசாங்கு அற்றும் இருக்கிறாள்.

பூஜா தேவரியா

ஆனால் மைக்கேலோ, “என்னைத் திருமணம் செய்து கொள். நான் உண்மையாக உன்னைக் காதலிக்கிறேன்” என்று ரொமான்ஸ் வசனம் பேசுகிறான். ஆனால் மலர்விழிக்குத் தெரியும், அது ஆண்களின் அப்போதைய மயக்கத்தில் வெளிப்படும் உள்ளீடற்ற வார்த்தைகள் என்று. தங்களின் இந்த உறவு வெறும் காமத்தின் அடிப்படையில் மட்டுமே என்பதை மிகத் தெளிவாக சொல்கிறாள் மலர்விழி. ஒரு பெண் பாசாங்கின்றி இப்படிப் பேசுவதும் சிந்திப்பதும் தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்ல, யதார்த்த வாழ்க்கைக்கே அரிதானது.

மலர்விழியின் சுயமரியாதையும் தெளிவான சிந்தனையும்

சட்டவிரோதச் செயல் காரணமாக கிடைத்த பணத்தில் தன் காதலி (?!) மலர்விழிக்கு வைர நெக்லெஸ் வாங்கி வருகிறான் மைக்கேல். அவனை இயல்பாக வரவேற்கும் மலர்விழி, இதைப் பார்த்ததும் ‘வேண்டாம்’ என்று மறுக்கிறாள். மைக்கேல் வற்புறுத்த மலர்விழிக்கு கோபம் வருகிறது. “எனக்கு என்ன வேணுமோ.. அதை நானே வாங்கிக்கற அளவிற்கு சம்பாதிக்கிறேன்” என்று சுயமரியாதையுடன் அந்தப் பரிசை அவள் மறுப்பது நல்ல காட்சி. கூடுதலாக இன்னொரு வசனத்தையும் சொல்வதுதான் அவளுடைய ஆளுமையைத் துல்லியமாக வெளிப்படுத்துகிறது. “இதையெல்லாம் வாங்கிக்கிட்டு உன் கூட படுத்துப்பேன்னு நெனச்சியா?”

pooja devariya

இந்த உறவிற்குப் பெயர் ‘காதல்’ என்று மூன்று வார்த்தையை மைக்கேல் சங்கேதமாக சொல்ல, “இல்லை. அந்த மூன்று எழுத்தின் பொருள் வேறு” என்று மலர்விழி நையாண்டி செய்கிறாள். பிறகு ஆங்கிலத்தில் தெளிவாகவே அந்த அர்த்தத்தைச் சொல்கிறாள். “Let’s Just F***”.

“என் புருஷனை நானும் உருகி உருகி காதலிச்சுதான் கல்யாணம் செய்தேன். ஆனா அவன் இறந்த பிறகு, உன்னுடன் படுத்திருக்கிறேன். ஆகவே என்னளவில் காதல் என்பதற்கெல்லாம் ஆழ்ந்த பொருள் இல்லை” என்பது மலர்விழியின் நோக்கில் வெளியாகும் யதார்த்த தத்துவம். ஆனால் காதல் மயக்கத்தில் இருக்கும் மைக்கேலுக்கு அது காதில் ஏறவில்லை.

‘அப்பாவி கன்னிப் பையனாடா நீ?”

தன்னுடைய சித்தப்பாவை அழைத்து வந்து சம்பிரதாயமாக பெண் கேட்கும் படலத்தை அபத்தமாக துவங்கி வைக்கிறான். இந்தக் காட்சி சுவாரசியமாக படமாக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், இதில் பூஜா தேவரியாவின் நடிப்பு அத்தனை இயல்பாக அமைந்திருக்கிறது.

மைக்கேலின் சித்தப்பாவிடமும் தன்னுடைய தரப்பை தெளிவாகவும் வெளிப்படையாகவும் விளக்குகிறாள் மலர்விழி. “நான் காதல் திருமணம் செஞ்சு நல்லாத்தான் வாழ்ந்தேன். வியாபார நஷ்டத்துல அவன் கோழைத்தனமா சாவைத் தேடிக்கிட்டான். எப்படியோ நின்னு சமாளிச்சிட்டேன். ஆனா அதுக்கும் மேல சிலது தேவைப்படும்ல.. அப்பத்தான் மைக்கேல் என் வாழ்க்கைல வந்தான். இந்தக் காதல், கல்யாணம்லாம் வேணாம்ன்னுதான் அவன்கிட்ட எப்பவுமே நான் சொல்வேன். அவனுக்கு வேற பொண்ணு பாருங்க.. இனிமே அவன் கிட்ட டச்ல நான் இருக்க மாட்டேன்” என்று மலர்விழி இயல்பான தொனியில் சொல்ல, பழமைவாத மனோபாவமுடைய சித்தப்பா அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

vijay sethupathi

உன்னோட தேவைக்கு அந்த மாதிரியே தேவையுள்ள யார் கிட்டயாவது போக வேண்டியதுதானே.. ஏன் ஒரு அப்பாவி கன்னிப்பையன் வாழ்க்கைல விளையாடினே?” என்று சித்தப்பா கேட்க, அதைக் கேட்டு மலர்விழிக்கு தன்னிச்சையாக சிரிப்பு பொங்கி விடுகிறது. அருந்திக் கொண்டிருந்த காஃபி புரையேறி விடுகிறது. “என்னைப் பார்க்கறதுக்கு முன்னாடி நீ அப்பாவி கன்னிப்பையனாடா?” என்று அதே சிரிப்புடன் மைக்கேலைப் பார்த்து கேட்க அவன் தர்மசங்கடத்தில் தவிக்கிறான்.

உண்மையை நேருக்கு நேராகச் சொல்லும் மலர்விழிக்கு மைக்கேலுடைய சித்தப்பாவின் சராசரித்தனம் புரிகிறது. அவருக்கு இது கலாசார அதிர்ச்சியைத் தரும் என்கிற புரிதலுடன் அவருடைய கோபத்தை இயல்பாக எதிர்கொள்கிறாள். “இது உங்களுக்குப் புரியாது அங்கிள். எனக்குத் தெரியும்” என்று புன்னகையுடன் விடைதருகிறாள். இப்படி உண்மையை உடைத்துப் பேசியதால் மைக்கேலும் தர்மசங்கடத்துடன் அங்கிருந்து விலகுகிறான்.

காதலனுக்கு யதார்த்தத்தைப் புரிய வைக்கும் மலர்விழி

சித்தப்பாவின் வற்புறுத்தலின் பேரில் பொன்னி (அஞ்சலி) என்கிற பெண்ணை திருமணம் செய்கிறான் மைக்கேல். தன்னுடைய ராஜகுமாரன் குதிரையில் வந்து திருமணம் செய்து காலம் பூராவும் தன்னைக் காதலித்து கொஞ்சிக் கொண்டிருப்பான் என்கிற கனவில் மிதக்கும் அப்பாவிப் பெண் பொன்னி. முதலிரவின் போது அவள் மீது பாய்ந்து முடித்த பிறகு “எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பமேயில்ல. கட்டாயத்தின் பேரில்தான் பண்ணிக்கிட்டேன். அதனால லவ் கொஞ்சல்ஸ்லாம் இருக்கும்ன்னு எதிர்பார்க்காத” என்று முதல் நாளிலேயே அந்த அப்பாவிப் பெண்ணின் கனவை உடைக்கிறான் மைக்கேல்.

நண்பர்களுடான குடிக் கொண்டாட்டத்தில் “பொண்டாட்டியை நல்லபடியா பார்த்துக்காம, இன்னொரு பொண்ணு பின்னாடி அலையறியே?” என்று போதையில் ஒருவன் சொல்லி விட மனஉளைச்சல் காரணமாக மலர்விழியைத் தேடிச் செல்கிறான் மைக்கேல்.

vijay sethupathi

இந்த உறவை மலர்விழி ஒருவிதமான தியாகத்துடன் முடித்து வைப்பதில் அவளுடைய கதாபாத்திரம் இன்னமும் மேலே உயர்கிறது. மழையில் நனைந்து வரும் மைக்கேலிற்கு தலையைத் துடைத்து விடும் மலர்விழி, வேறு எதையும் தொடர அனுமதிப்பதில்லை. கறாராக மறுத்து விடுகிறாள்.

“என்னால முடியலைடி.. ஐ லவ்யூடி” என்று அணைத்துக் கொள்ள வரும் மைக்கேலின் கன்னத்தில் சட்டென்று அறைந்து “இதென்ன காவியக் காதலா.. நானும் என் புருஷனை உருகி உருகித்தான் லவ் பண்ணேன். அப்புறம் உன் கூட படுக்கலை?!.. நீயும் உன் பொண்டாட்டியைத் தொடாமலா இருந்திருப்ப?.. போ.. நல்ல புருஷனா இரு” என்று அவனுக்கு மட்டுமல்லாது, அவனை நம்பி வந்த பெண்ணுக்கும் நல்லது செய்ய முற்படுகிறாள் மலர்விழி.

மலர்விழியின் தியாகமும் காதலின் முடிவும்..

அந்தச் சமயத்தில் வீட்டின் காலிங்பெல் அடிக்கிறது. முகத்தில் வழியும் மழைநீரை துடைத்தபடி மைக்கேலை விடவும் வயதில் இளைஞனாக இருக்கும் ஒருவன் உள்ளே வருகிறான். மைக்கேல் பொறாமையுடன் “யாரு அவன்?” என்று கேட்க “புரிஞ்சிக்க.. போ” என்று சொல்லும் காட்சியில் பூஜாவின் முகபாவம் அத்தனை சிறப்பாக இருக்கிறது.

‘தான் இன்னொரு துணையைத் தேடிக் கொண்டேன்’ என்பதை மைக்கேலுக்கு உணர்த்துவதன் மூலம் அவனுடைய கோபத்தைத் தூண்டி இந்த உறவை முறித்துக் கொள்ளலாம் என்பது மலர்விழியின் நல்லெண்ண அடிப்படையில் அமைந்த ஐடியா. அது சரியாக வேலை செய்கிறது. மைக்கேல் கோபத்துடன் எழுந்து கிளம்புகிறான். வந்திருக்கும் இளைஞனை ஓரக்கண்ணால் எரிச்சலுடன் பார்த்து விட்டு அவசரம் அவசரமாக வெளியே செல்கிறான்.

vijay sethupathi

இங்கு ஒரு டிவிஸ்ட். வந்திருக்கும் இளைஞன் “அக்கா.. உங்க லேப்டாப்பை சரி பண்ணிட்டேன். எதுனா பிரச்சினை வந்தா சொல்லுங்க” என்று சொல்வதின் மூலம் மைக்கேல் தவறாக நினைக்கும் உறவு அல்ல என்பது நமக்குப் புரிந்து விடுகிறது. கோபத்துடன் பைக்கை உதைத்து விருட் என்று கிளம்பும் மைக்கேலை ஜன்னலின் வழியாக ரகசியமாகப் பார்க்கும் மலர்விழி துக்கம் தாங்காமல் அழுவதோடு இந்த டிராக் நிறைவு பெறுகிறது.

iraivi movie

கார்த்திக் சுப்புராஜ், ‘மலர்விழி’ என்கிற இந்தக் கதாபாத்திரத்தை, இயக்குநர் பாலசந்தரின் படங்களில் வருவது போல துணிச்சலாகவும் வித்தியாசமாகவும் வடிவமைத்துள்ளார். தனக்கு தரப்பட்ட சர்ச்சைக்குரிய பாத்திரத்தை மிகச் சிறப்பாக கையாண்டு ‘மலர்விழி’யை மறக்க முடியாதபடி செய்து விட்டார் பூஜா.