இதை நீங்கள் பல தமிழ்த் திரைப்படங்களில் பார்த்திருக்கலாம். ஒரு கொடுமைக்கார பண்ணையார் இருப்பார். ஹீரோ அவரை எதிர்த்து போராடுவார். பண்ணையாரின் கூடவே ஒரு காமெடி நடிகர் இருப்பார். அவரை வாழ்த்துவது போல் பேசி சமயங்களில் கலாய்த்து விடுவார். வில்லனின் மீது கோபத்தில் இருக்கும் பார்வையாளர்களுக்கு இந்தக் கலாய்ப்பு கூடுதல் உற்சாகத்தை அளிக்கும். வில்லி பாத்திரம் என்றால் இந்த காமெடி ரோலை அவரது கணவர் பாத்திரம் செய்யும்.
1980-ல் வெளியான ‘முரட்டுக்காளை’ திரைப்படத்திலும் இப்படியொரு காமெடி காரெக்டர் இருக்கிறது. பண்ணையாரின் காரியதரிசியாக இருந்தாலும் அவரையே கலாய்த்து கவிழ்க்கும் பாத்திரம். பொதுவாக இது போன்ற பாத்திரங்கள் காமெடி செய்வதோடு முடிந்து விடும். ஆனால் ‘முரட்டுக்காளை’ படத்தில் கூடுதலாக ஒரு சிறப்பு அம்சம் இருந்தது. காமெடி நடிகர் ஏன் பண்ணையாரைக் கவிழ்க்க நினைக்கிறார் என்பதற்குப் பின்னால் ஓர் உணர்ச்சிகரமான ‘பிளாஷ்பேக்’ காட்சியும் காரணமும் இருந்தது. இது இந்தப் பாத்திரத்தின் மூலம் செய்யப்பட்ட புதுமை எனலாம்.
சுந்தரவேலு என்கிற பண்ணையார் பாத்திரத்தில் ஜெய்சங்கர் நடிக்க, அவரது கணக்குப் பிள்ளையாக ‘சாமிபிள்ளை’ என்கிற பாத்திரத்தில் நடித்தவர் சுருளிராஜன். இவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பல நாடகக்குழுக்களில் நடித்த சுருளிராஜன், 1965-ல் வெளியான ‘இரவும் பகலும்’ என்கிற திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். பல படங்களில் ஓரமாக வந்து போனாலும் மெல்ல மெல்ல ஒரு குறிப்பிடத்தக்க நகைச்சுவை நடிகராக மலர்ந்ததற்கு காரணம் சுருளிராஜனின் தனித்தன்மையான நகைச்சுவை. 1980-ம் ஆண்டு வெளியான ‘மாந்தோப்புக் கிளியே’ படத்தில் ஒரு கஞ்சன் பாத்திரத்தில் நடித்ததின் மூலம் இவரது புகழ் உச்சத்திற்குச் சென்றது. இந்த ஒரு வருடத்தில் மட்டும் ஏறத்தாழ ஐம்பது திரைப்படங்களுக்கு மேல் சுருளிராஜன் நடித்திருக்கிறார்.
சுருட்டை முடி, ஒருவித இழுவையுடன் பேசும் வித்தியாசமான மாடுலேஷன், சட்டென்று பயந்தது போல் உடலை பின்னுக்கு இழுக்கும் நகைச்சுவையான உடல்மொழி, கைகளை மடக்கிக் கொண்டு பேசும் தோரணை, இவரது தோற்றம் போன்றவை சுருளிராஜனின் பிளஸ் பாயிண்டுகளாக அமைந்தன. முரட்டுக்காளை திரைப்படத்தில் இவர் கணக்குப் பிள்ளையாக நடித்தார். இவரது தந்தையாரும் ஒரு பண்ணையாரிடம் கணக்குப் பிள்ளையாக பணியாற்றியது ஒரு சுவாரசியமான தற்செயல்.
இனி ‘முரட்டுக்காளை’ திரைப்படத்தில் சுருளிராஜனின் பங்களிப்பு என்னவென்று பார்ப்போம்.
பண்ணையார் சுந்தரவேலுவின் கணக்குப்பிள்ளை, வலதுகரம், ஆலோசகர் என்று பல முகங்கள் ‘சாமிபிள்ளைக்கு’ உண்டு. ஆரம்ப காட்சியில் பண்ணையாரைச் சந்திக்க பஞ்சாயத்தார் வருகிறார்கள். ‘தீர்ப்பு’ எப்படிச் சொல்ல வேண்டுமென்று கேட்டுப் போவதற்காக அவர்கள் பவ்யமாக காத்திருக்கிறார்கள். ‘நியாயமா சொல்லுங்க’ என்று பண்ணையார் மையமாக சொல்கிறார். அதன் உட்பொருளை, சாமிபிள்ளை விளக்கும் தோரணையே அத்தனை சுவாரசியம். "ஐயா. என்ன சொல்றாருன்னா. நமக்கு ‘நியாயமா’ இருக்கறதை தீர்ப்பா சொல்லுங்க.. புரிஞ்சுதா?" என்று அவர்களை வழியனுப்பி வைக்கிறார்.
ஊரில் உள்ள ஏழை விவசாயிகளின் நிலங்களை ஆசை காட்டியோ, மிரட்டியோ தனது பெயரில் எழுதி வாங்கிக் கொள்வது பண்ணையாரின் வழக்கம். மாடுபிடிக்கும் போட்டியில் காளையன் (ரஜினிகாந்த்) வீரமாகச் செயல்பட்டு வெற்றி பெறுகிறார். அவரது வீட்டுக்கு சாமிபிள்ளை நுழையும் சமயத்தில், காளையன் யாருக்கோ ஆவேசமாக உபதேசம் செய்து கொண்டிருக்கிறான். பிறகு அதே தொனியில் இவரைப் பார்த்து ‘யாரு?” என்று விசாரிக்க “அதே கோபத்தோட கேட்டா எப்படிப்பா?.. சாந்தமா கேளு. பயந்துட்டேன். உக்காந்து பேசுவமா. முட்டி வலிக்குது” என்று அச்சமும் நைச்சியமும் கலந்து சாமிபிள்ளை பேசுவது அழகு.
“உன் கிட்ட இருக்கற நிலத்தை பண்ணையார் கேட்கறாரு. மத்தவங்களா இருந்தா அவராவே எடுத்துப்பாரு. நீயா இருக்கறதால ஒரு வார்த்தை கேக்கச் சொன்னாரு” என்று சாமிபிள்ளை கேட்க “இது எங்க பூர்விகமான நிலம். யாருக்கும் விக்கற யோசனை இல்ல. நீங்க போகலாம்” என்று கோபமாகச் சொல்கிறான் காளையன். சாமிபிள்ளையின் மைண்ட் வாய்ஸ் ஒலிக்கிறது. “இவன் கொடுக்க மாட்டான்னு எனக்குத் தெரியும். பண்ணையாரோட பல்லைப் பதம் பார்க்க இவன்தான் சரியான ஆளு”.
“சரி விடுய்யா.. தரலைன்னா போறான்” என்று பண்ணையார் சாதாரணமாகச் சொல்லி விடுகிறார். ஆனால் சாமிபிள்ளையால் அப்படி விட்டு விட முடியுமா? எனவே பகைமையின் நெருப்பை ஊதி வளர்க்கிறார். “நிலம் கொடுக்காம போகட்டுங்க. அதுக்காக இளக்காரமா பேசலாமா? பண்ணையார் வாலை ஒட்ட நறுக்குவேன்னு சொல்றான். உங்களுக்கு வால் இருக்குன்னா என்ன அர்த்தம்.. இன்னமும் கூட மட்டமா சொன்னான். நீங்க பொம்பளை பொறுக்கியாம்..” என்று டிசைன் டிசைனாக போட்டுக் கொடுக்கிறார். “அப்படியா. சொன்னான்?” என்று பண்ணையாரின் முகம் இறுகுகிறது. மீசை துடிக்கிறது.
“அந்த காளையனை உங்க வலையில் நான் விழ வைக்கிறேன். அண்ணன் தம்பிங்களை பிரிச்சுக் காட்டறேன்” என்று அந்தப் பொறுப்பை சாமிபிள்ளை ஏற்றுக் கொள்ள பண்ணையார் சமாதானம் ஆகிறார்.
பண்ணையாரின் தங்கைக்கு காளையனின் வீரத்தைப் பார்த்ததும் காதல் உண்டாகிறது. காளையனுக்கும் அதே. இதைப் பார்த்து விடும் சாமிபிள்ளை இதை வைத்து தன் ஆட்டத்தை ஆரம்பிக்கிறார். “காளையனை கைக்குள்ளேயே வெச்சுக்க ஒரு ஐடியா. உங்க தங்கச்சியை அவனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிட்டா, அவனோட சொத்துல்லாம் தன்னால உங்களுக்கு வந்துடும். இந்தப் பகுதியிலேயே உங்களுக்கு நிகரா சொத்து வெச்சிருக்கறவன் அவன்தான்” என்று பண்ணையாரிடம் பேசி ஆசையைத் தூண்டுகிறார் சாமிபிள்ளை.
‘அப்படியா சொல்றே?’ என்று பேராசை கலந்த சிரிப்புடன் சொல்லும் பண்ணையார், “உன்னை நம்பறேன். இந்த வேலையை முடிச்சுடுவே” என்று சொல்லி விட்டு செல்ல, சாமிபிள்ளையின் மைண்ட் வாய்ஸ் ஒலிக்கிறது. ‘நீங்க நம்ப நம்பத்தானே என் காரியம் நடக்கும். உங்களை எதிர்க்க எனக்கு உடல்பலமோ, பணபலமோ கிடையாது. நான் சின்னப்பையனா இந்தப் பண்ணைல வேலைக்கு சேர்ந்து, இன்னிக்கு உங்க காரியஸ்தனா ஆகியிருக்கேன். அதுக்கு காரணம் தெரியுமா?” என்று சாமிபிள்ளை யோசிக்க, பிளாஷ்பேக் காட்சி விரிகிறது.
சாமிபிள்ளையின் அப்பாவிற்கும் பண்ணையாரின் அப்பாவிற்கும் ஒரு மோதல். இவர்கள் வைத்திருக்கும் வீட்டை பண்ணையார் மிரட்டி கேட்கிறார். அதில் மாளிகை கட்டப் போகிறாராம். ஆனால் சாமிபிள்ளையின் தந்தையார் உறுதியாக மறுத்து விடுகிறார்.
இதனால் கோபம் கொள்ளும் சீனியர் பண்ணையார், சாமிபிள்ளையின் குடும்பம் இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் போது, கதவைப் பூட்டி வீட்டிற்கு நெருப்பு வைத்து விடுகிறார். பற்றி எரியும் நெருப்பில் குடும்பமே கருகி சாகிறது. சாமிபிள்ளையை மட்டும் அவரது தந்தை சன்னலுக்கு வெளியே எறிகிறார். “அந்தப் பண்ணையார் குடும்பத்தை நீதான் பழிவாங்கணும்” என்று சொல்லி இறந்து விடுகிறார்.
ஜூனியர் பண்ணையாரான சுந்தரவேலுவை, சாமிபிள்ளை மறைமுகமாக பழிவாங்குவதற்கு காரணமாக இருப்பது இந்த பின்னணி சம்பவம்தான். இதை நினைக்கும் போது சாமிபிள்ளையின் கண்ணில் இருந்து நீர் பெருகுகிறது.
இந்த உணர்ச்சிகரமான காட்சியை சுருளிராஜன் சிறப்பாக திரையில் நடித்துக் காட்டியிருந்தார். நகைச்சுவை நடிகர்கள், சோகமாக நடிக்கும் போது அதன் வீரியம் இன்னமும் கூடும் என்பதற்கு இந்தக் காட்சி ஓர் உதாரணம்.
திருமணப் பேச்சு தொடர்பாக, காளையன் வீட்டிற்கு பண்ணையார் செல்கிறார். அங்கு காளையன் தனது தம்பிகளுடன் சாணி தட்டிக் கொண்டிருப்பதை முகச்சுளிப்புடன் பார்த்து விசாரிக்கிறார். ‘வீட்டுக்குள்ள வாங்க’ என்று காளையன் அழைக்க “எதுக்கு சாணி தட்டவா?” என்று இடைமறித்து சாமிபிள்ளை கேட்கும் டைமிங்கான காமெடியில் நமக்கு தன்னாலேயே சிரிப்பு வந்து விடும். “யோசிச்சு சொல்றேன்” என்று பண்ணையாரை காளையன் வழியனுப்பி வைக்க, பின்னாலேயே வரும் சாமிபிள்ளை, “பண்ணையார் தங்கச்சியை கட்டிக்க நீ கொடுத்து வைச்சிருக்கணும். பார்த்துக்க. பார்த்துக்க. பார்த்துக்க” என்று சொல்வார். ‘பார்த்துக்க’ என்பதை மூன்று மாடுலேஷன்களில் சொல்ல முடியும் என்பதில் சுருளிராஜனின் தனித்தன்மை தெரியும்.
பண்ணையாரின் தங்கையை காளையன் திருமணம் செய்ய மறுத்து விடுவான். இது பற்றி சொல்லி பண்ணையாரின் வெறுப்பைத் தூண்டும் போது ‘எனக்கே.. அவமானமா இருக்கு’ என்னும் வசனத்தில் ‘எனக்கே’வில் சாமிபிள்ளை தரும் இழுவை சுவாரசியம். காளையனைப் பழிவாங்குவதற்காக இவர் சொல்லும் திட்டங்களை பண்ணையார் பாராட்ட “என் திட்டத்தோட பலன் கடைசிலதான் தெரியும்” என்று சாமிபிள்ளை சொல்வதில் உட்பொருள் இருக்கும். இன்னொரு காட்சியில் பண்ணையாரின் அடியாள் ஒருவனைத் திட்டி விட்டு, அதே ப்ளோவில் ‘வாயை மூட்ரா’ என்று பண்ணையாரையும் சொல்லி, “ஐயோ.. மன்னிச்சிடுங்க.. அதே கோபத்துல சொல்லிட்டேன்” என்று சமாளிப்பது நல்ல காமெடி.
சாமிபிள்ளை ஒவ்வொரு வலையாக விரிக்க, அதில் பண்ணையார் இறுதியில் வசமாகச் சிக்கிக் கொள்வார். என்றாலும், ‘இதுக்கெல்லாம் யார் சாட்சி. எனக்கு எதிரா சாட்சி சொல்ல, இந்த ஊருல யாருக்கு துணிச்சல் இருக்கு?” என்று பண்ணையார் திமிராக கேட்கும் போது “நான் இருக்கங்க. இவ்வளவு நாள் உங்க கூட இருந்துட்டு இதைக் கூட செய்யலைன்னா எப்படி?” என்று நையாண்டித்தனமாக கேட்பார், சாமிபிள்ளை. பண்ணையார் இதற்காக கோபப்படும் போது ‘நான் யாரு தெரியுமா’ என்று தன் பிளாஷ்பேக்கை சொல்லுவார். அவரது வீடு பற்றி எரியும் போது சீனியர் பண்ணையாருடன் சிறுவனாக நின்று வேடிக்கை பார்த்தவர்தான், இப்போதைய பண்ணையார் சுந்தரவேலு.
தான் வசமாக மாட்டிக் கொண்டதை அறியும் பண்ணையார் தற்கொலை செய்து கொள்வதோடு படம் நிறையும். சாமிபிள்ளையின் பழிவாங்கும் படலம் வெற்றிகரமாக முடியும். செல்வாக்குள்ள ஆசாமியை நேரடியாக பழிவாங்க முடியாத ஓர் எளியவன், எவ்வாறு தன்னுடைய அறிவுத் திறமையால் நீண்ட காலம் காத்திருந்து மெல்ல மெல்ல வலை விரித்து பழிதீர்ப்பான் என்பதற்கான சுவாரசியமான உதாரணம், ‘சாமிபிள்ளை’.
சிரிப்பும் சீரியஸூம் கலந்த பாத்திரத்தை, தனது தனித்தன்மையான நகைச்சுவை நடிப்பால் மறக்க முடியாததாக ஆக்கி விட்டார் சுருளிராஜன்.