ஒரு குறிப்பிட்ட பிம்பத்தில் சிக்கியிருக்கும் நடிகரை முற்றிலும் நேரெதிரான பாத்திரத்தில் நடிக்க வைப்பதென்பது எந்தவொரு இயக்குநருக்கும் துணிச்சலான சவால். அந்தத் துணிச்சல் இயக்குநருக்கு மட்டுமல்லாது சம்பந்தப்பட்ட நடிகருக்கும் இருக்க வேண்டும். மணிரத்னம், மாதவன் ஆகிய இருவருக்குமே இது இருந்தது. எனவே ‘இன்பா’ என்கிற இன்பசேகரனின் பாத்திரம் ‘ஆய்த எழுத்து’ திரைப்படத்தில் உருவானது.
அதுவரை ‘சாக்லேட் பாய்’ பாத்திரங்களில் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்த மாதவன், ஒரு முரட்டுத்தனமான ரவுடியாகயும் அதிகார விருப்பம் கொண்ட மூர்க்கனாகவும் அதகளம் செய்த பாத்திரம் ‘இன்பா’. இதிலும் ரொமான்ஸ் இருந்தது. ஆனால் அது காட்டுத்தனமான ரொமான்ஸ்.
இளம் தலைமுறையில் உள்ள மூன்று விதமான போக்குகளைக் கொண்ட இளைஞர்களை வைத்து ஒரு திரைப்படம் எடுக்க திட்டமிட்டார் மணிரத்னம். லட்சியவாதம் கொண்ட ஒரு இளைஞன். வெளிநாட்டு மோகத்தில் உள்ள ஒரு சுயநல இளைஞன். தன் இருப்பிற்காக எதை வேண்டுமானலும் செய்யத் துணியும் விளிம்பு நிலை இளைஞன். இதில் மூன்றாவது பாத்திரத்திற்காக நடிகர் விக்ரம் முதலில் அணுகப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக மாதவன் உள்ளே வந்தார்.
அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய இரண்டு திரைப்படங்களைத் தொடர்ந்து மணிரத்னத்துடனான கூட்டணியில் மூன்றாவதாக மாதவன் இணையும் படம் இது. அடித்தட்டு சமூகத்தைச் சேர்ந்த முரட்டு இளைஞன் பாத்திரம் என்பதால் அதற்கேற்றவாறு உடற்பயிற்சி செய்து தன்னை மாற்றிக் கொண்டார்.
ஒரு சேஸிங் காட்சியுடன் படம் துவங்குகிறது. மூன்று பாத்திரங்களில் முதலில் நமக்கு அறிமுகமாவது இன்பாதான். அடுத்த சில நிமிடங்களில், தனக்கு முன்னால் செல்லும் பைக் இளைஞனை கொல்ல அவன் திட்டமிட்டிருக்கிறான். ஆனால் அது குறித்த திகைப்போ, பதட்டமோ அவனிடம் இல்லை. மாறாக குடும்பப் பிரச்சினை பற்றி தன் கூட்டாளியிடம் விவாதிக்கிறான். “ஒண்ணு மட்டும் வெச்சுக்க டெல்லி. இந்த பொம்பளைங்களை மட்டும் பக்கத்துல வெச்சுக்கவே கூடாது” என்று இன்பா அனத்த, அந்த டெல்லியோ “டேய்.. உனக்கு டென்ஷனே இல்லையா?” என்று பதட்டத்தோடு கேட்கிறான்.
ஆனால் இன்பாவிற்கு அந்தப் பிரச்சனை இல்லை. மாறாக தன் மனைவியிடம் ஏற்பட்ட சண்டை குறித்த புலம்பல்தான் இருக்கிறது. “பக்கத்துல வந்துட்டான்” என்று டெல்லி திகைப்புடன் சொல்ல எந்தவித பதட்டமும் இல்லாமல் பைக் இளைஞனை நோக்கி இன்பா மூன்று முறை துப்பாக்கியால் சுட்டு விட்டு பிறகு வாகனத்தில் இருந்து எட்டிப் பார்த்து ‘மாங்கா அடி’ என்று பெருமிதத்துடன் சொல்கிறான்.
மொட்டை அடித்து சற்று முடி வளர்ந்த தலை, திடகாத்திரமான தேகம், அலட்சியமாக அணியப்பட்ட அடர்வண்ண ஆடைகள், கழுத்தில் ஒரு கயிறு. இதுதான் இன்பாவின் புறத் தோற்றம். ‘ராவணன்’ திரைப்படத்தின் விக்ரம், ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்தின் அரவிந்த்சாமி ஆகியோரும் ஏறத்தாழ இதே லுக்கில் இருப்பதை நினைவு கூறலாம்.
இன்பாவின் ஆறு மாதங்களுக்கு முந்தைய வாழ்க்கை காட்டப்படுகிறது. சிறையில் இருக்கும் இன்பா, கைதிகளுக்கு இடையே நடக்கும் விளையாட்டுப் போட்டியில் தோற்று பரிதாபமாக அமர்ந்திருக்கிறான். இப்பொழுது அவனைப் பார்க்க வேறு மாதிரியாக இருக்கிறது. இன்பாவின் அண்ணன் குணசேகரன் அவனை ஜாமீனில் வெளியே எடுக்கிறான். வழக்கமான அடி தடி வேலைக்காகத்தான்.
“வா.. வெளிக்காத்தை சுவாசி” என்று வக்கீல் சொல்ல “உள்ளேயும் அதே காத்துதான். என்ன, கைதிகளோட குசு நாத்தமும் கலந்து இருக்கும்” என்று கொச்சையாக இன்பா சொல்வதில் இருந்து அவனது துடுக்குத்தனமான குணாதிசயமும் வெளிப்படுகிறது. “குணா உன்னை கையோடு கூட்டிட்டு வரச் சொன்னாரு” என்று வக்கீல் சொல்ல அவரை மிரட்டி அனுப்பும் இன்பா சொல்கிறான்.
“பயந்துட்டியா..? பயத்தால மட்டும்தான் உலகத்தை ஆள முடியும்”.
இன்பா நேராக செல்வது தன்னுடைய காதல் மனைவி சசியை தேடித்தான். “மறுபடியும் அவன் கூட போகாத” என்று சசியின் தாய் தடுக்கிறாள். ஆனால் அதை காதில் வாங்காத மாதிரி துணிகளை எடுத்துக்கொண்டு கிளம்புகிறாள் சசி. இவன் அடிப்பதும் அவள் கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டிற்குப் போவதும் மீண்டும் சேர்வதும் அவர்களின் பழக்கம் என்பது நமக்குத் தெரிய வருகிறது.
சசியின் தகப்பனாரும் இன்பாவை தடுக்க முயல்கிறார். பக்கத்து வீட்டு கிழவரும் இன்பாவைத் தடுக்க முயல “நீ ஓசில ஆனந்த விகடன் வாங்க வந்தவன்தானே.. இது என் குடும்பப் பிரச்சினை. நீ சமரசம் பண்ண வராதே” என்று அந்தக் கிழவரின் கைகளைப் பிடித்து முறுக்குகிறான். சசி வெளியே வந்து பார்க்கிறாள். அவளது முகத்தை பரிதாபமாகப் பார்க்கிறான் இன்பா. அதில் காதலும் மன்னிப்பும் இறைஞ்சுதலும் தெரிகிறது. இது வேறு வகையான இன்பா.
அடிதடி தொழிலுக்கு இன்பா செல்வது அவனது மனைவிக்கு பிடிக்கவில்லை. எனவே ஒரு பாவனைக்காக தொழிற்சாலை வேலைக்கு செல்கிறான். அங்கு “இந்த மெஷின்லாம் எவ்வளவு ஒர்த் இருக்கும். இது திடீர்னு நைட்ல பத்திக்கிச்சுன்னா என்ன பண்ணுவீங்க?” என்று கேட்டு உரிமையாளரை திடுக்கிட வைக்கிறான். அவனால் ஒரு சம்பிரதாயமான பணிக்கு செல்ல முடியாது. அதற்குள் அடங்கும் ஆள் அவன் இல்லை. அவனுடைய எல்லைகளும் விருப்பங்களும் தேடலும் பெரியது.
இன்பாவின் அண்ணன் குணசேகரன் ஆள் அனுப்பி தேட “இன்பா வர மாட்டார்” என்று சசி அவர்களிடம் மறுக்க குணசேகரனே உள்ளே வருகிறார். வழக்கம் போல் துடுக்குத்தனமாக பேசுகிறான் இன்பா. “அண்ணன் கிட்ட பேசுற பேச்சா இது?” என்று அவர் சொல்ல “எட்டு வயசுல என்னை வேலூர் பஸ் ஸ்டாண்ட்ல உக்கார வச்சுட்டு இதோ வரேன்னு போனவர்தான். பத்து வருஷம் கழிச்சு நான்தான் தேடிக் கண்டுபிடிச்சேன்” என்று இன்பா சொல்லும்போது அவனுடைய முரட்டுத்தனத்தின் பின்னணி காரணம் நமக்கு போகிற போக்கில் தெரிகிறது. தானாக வளர்ந்த காட்டுச்செடி மாதிரியாக இருக்கிறான்.
இன்பாவின் மனைவி தடுப்பதால் அவனுடைய ஆண்மையைப் பற்றி குணசேகரன் கிண்டலாக பேசி விட்டுச் செல்ல, கோபம் கொள்ளும் இன்பா, மீண்டும் தன் மனைவியை கன்னாபின்னாவென்று தாக்கி வீட்டை விட்டு வெளியே தள்ளுகிறான். இது போன்ற காட்சிகளில் மாதவனின் நடிப்பு ஓர் அசலான மூர்க்கனின் குணாதிசயத்தை கச்சிதமாக வெளிப்படுத்துகிறது. அவனுக்கு தன் மனைவின் மீது ஏராளமான அன்பு இருக்கிறது. அதே சமயத்தில் தன் விஷயத்தில் அவள் குறுக்கே வருவதை விரும்புவதில்லை.
மீண்டும் ஊடலும் கூடலும் நடக்கிறது. தன் மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிந்து கொள்கிறான் இன்பா. அவனது முகம் நெகிழ்ச்சிக்கு மாறுகிறது. இதுவும் வேறு வகையான இன்பாதான். என்றாலும் “பிள்ளைக்கு அப்பா யாரு?” என்று கேட்டு வழக்கமான துடுக்குத்தனத்தை வெளிப்படுத்துகிறான். “என் புள்ள என்னை மாதிரி ஆகக்கூடாது. அது டென்ஷன்” என்று இன்பா சொல்லும் போது அடிதடி வேலையில் அவனுக்கே உள்ளூற ஏற்பில்லை என்று தெரிகிறது. என்றாலும் எதனால் அதை விட்டு விலக முடியவில்லை?!
குணசேகரன் செய்த ஏற்பாட்டின் படி கல்லூரி மாணவர்களை சரமாரியாக தாக்குகிறான் இன்பா. கல்லூரி மாணவர்கள் தன் வழியில் வருவதாக கருதுகிறார் ஓர் அரசியல்வாதி. இன்பாவின் மிகையான நடவடிக்கை அவருக்கு பிரச்சனையாகி விடுமோ என்று கருதி அவனை அழைத்து விசாரிக்கிறார் .“விஷயம் பெரிசாகி சட்டசபையில் கேள்வி கேட்டா யார் பதில் சொல்றது?” என்று அவர் கேட்க “உங்களை மாதிரி ஆனா நான் பதில் சொல்லுவேன்” என்று அதிரடியாகப் பேசும் இன்பாவை அவருக்கு பிடித்து விடுகிறது. குணசேகரை விடவும் இவன் புத்திசாலி என்று அறிந்து கொள்கிறார். அவனுக்கு கேஸ் ஏஜென்சி எடுத்துத் தருவதற்கான ஏற்பாட்டைச் செய்கிறார்.
இன்பாவின் பொருளாதார வளர்ச்சி ஏறுகிறது. உல்லாசத்தில் மிதக்கிறான். அவனிடம் துப்பாக்கி இருப்பதைப் பார்த்து சசி பதட்டமடைகிறாள். “இதையும் ஆரம்பிச்சிட்டியா?” என்று கடுமையாக ஆட்சேபிக்கிறாள். எனவே மீண்டும் சண்டை நடக்கிறது.
அந்தக் கோபத்தில் கருவைக் கலைத்து விட்டு வருகிறாள் சசி. இதை அறியும் இன்பா கோபத்தில் வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் ஆத்திரத்துடன் தூக்கிப் போட்டு உடைக்கிறான். பரிதாபமாக கண்கலங்குகிறான். இந்தக் காட்சியில் மாதவனின் நடிப்பு அற்புதமாக இருக்கிறது.
கல்லூரி மாணவர்கள் குணசேகரனை பதிலுக்கு தாக்குகிறார்கள். அடிபட்டு பரிதாபமாக விழுந்து கிடக்கும் அண்ணனை நையாண்டியுடன் பார்க்கிறான் இன்பா. உள்ளூற சற்று பாசமும் இருக்கிறது. இதற்குப் பழிவாங்க கிளம்பும் இன்பா, மைக்கேல் என்பவனைப் பற்றி அறிந்து கொள்கிறான். மைக்கேலும் இன்பாவிற்கு நிகராக கோபம் கொள்கிறவன். ஆனால் மைக்கேலிடம் இருப்பது அறம் சார்ந்த கோபம்.
சமூக மாற்றத்திற்கு இடையூறாக நிற்கும் தீயசக்திகளின் மீதான கோபம். மைக்கேலுக்கும் இன்பாவிற்கும் இடையே உக்கிரமான சண்டை நடக்கிறது. இதில் தோற்றுப் போகும் இன்பா “விட்ருப்பா. சமாதானமா போயிடலாம்” என்று கெஞ்சுகிறான். இதற்குப் பிறகுதான் ஆரம்பத்தில் விவரிக்கப்பட்ட அந்த சேஸிங் காட்சி நடக்கிறது. மைக்கேலை மிக நெருக்கத்தில் துப்பாக்கியால் சுடுகிறான் இன்பா.
பிறக்கவிருக்கும் வாரிசை, தன்னுடைய மனைவியே அழித்து விடும் சம்பவம் இன்பாவை வெகுவாகப் பாதிக்கிறது. “இந்த ஊரை விட்டுப் போயிடலாம். இந்த வாழ்க்கை வேணாம்” என்கிற சசியின் உருக்கமான வேண்டுகோள் அவனுடைய மனதில் சலனத்தை ஏற்படுத்துகிறது. துப்பாக்கியை ஒப்படைத்து விட்டு விடைபெறும் நோக்கத்தில் தனது அண்ணன் குணசேகரனை பார்க்கச் செல்கிறான். ஆனால் சகோதரன் தன்னைக் கொல்லும் திட்டத்தில் இருப்பதை அறிந்து கொண்டு தானே முந்திக் கொள்கிறான்.
பிறகு அதை வைத்து அரசியல்வாதியை மிரட்டுகிறான். “நான் உங்கள மாதிரி ஆகணும்” என்று நெருக்கடி தருகிறான். பிறகு அவனை யாரும் தடுத்து நிறுத்த முடிவதில்லை. தன்னுடைய தவறைச் சுட்டிக் காட்டும் நண்பனைச் சுட்டுக் கொல்கிறான். அதிகாரத்தின் மீதான வெறி அவனை கண்மூடித்தனமாக இயக்குகிறது. திருந்திய வாழ்க்கையில் அவனால் செல்ல இயவில்லை. ‘இன்பா வருவான்’ என்று ரயில் நிலையத்தில் காத்திருக்கும் சசி, புலம்பிக் கொண்டே எங்கோ பயணிக்கிறாள்.
கெட்ட வன்முறையின் ஆதிக்கத்தை நல்ல வன்முறை தடுக்கிறது. மைக்கேலுக்கும் இன்பாவிற்கும் இடையே மீண்டும் உக்கிரமான சண்டை நடக்கிறது. இந்தச் சமயத்திலும் இன்பா வீழ்கிறான். சிறைக்குச் செல்கிறான். பழைய வழக்குகள் துரத்துகின்றன. “தூக்குத் தண்டனைல இருந்து உன்னைக் காப்பாத்திக்க” என்று சிறையில் சொல்லப்படுகிறது. அதிகாரத்தை நோக்கி மூர்க்கமாக நகர்ந்து கொண்டிருக்கும் இன்பாவின் பயணத்திற்கான முற்றுப்புள்ளி அது.
ஒருபக்கம் கோபத்தின் வெப்பம். இன்னொரு பக்கம் அன்பின் குளிர்ச்சி. மறுமுனையில் அதிகார வெறி. இப்படி நல்லதும் கெட்டதுமான கலவையான குணாதிசயத்தை ‘இன்பசேகரன்’ பாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தி, அதை மறக்க முடியாத படியாக மாற்றியிருக்கிறார் மாதவன்.