மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் புதிய தலைமுறை
சினிமா

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்|மாநில அரசு விருது; ’பெரியவருக்கு’ பெருமை சேர்த்தார் ராஜ்கிரண்!

இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘நந்தா’ திரைப்படத்தில் ‘ராஜ்கிரண் ’ ஏற்று நடித்திருந்த ‘பெரியவர்’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.

சுரேஷ் கண்ணன்

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

ராஜ்கிரண் - ஒரு காலத்தில், ஹீரோவாக நடித்தவர். தனது தோற்றத்திற்கேற்ற கதையை தேர்வு செய்ததால் இவரது சில படங்கள் வெற்றியடைந்தன. இந்த வெற்றிக்கு இளையராஜாவின் பாடல்களும் இசையும் முக்கியமான காரணமாக இருந்தது. ஹீரோ அந்தஸ்தில் இருந்து மாறி பிறகு குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்கத் துவங்கினார். ஹீரோவை விடவும் குணச்சித்திர நடிகராக இவரது உருமாற்றம் சிறப்பாக அமைந்தது. அத்தனை விதமான பாத்திரங்கள்.

குணச்சித்திர நடிகராக ராஜ்கிரண் மாறத் துவங்கிய ஆரம்பக் கட்டத்தில், அவர் நடித்த படங்களுள், நல்ல பெயரை வாங்கித் தந்தது ‘நந்தா’. பெரியவர் என்கிற பாத்திரம். ஏறத்தாழ நாயகன் திரைப்படத்தி்ன் ‘வேலு நாயக்கர்’ மாதிரியான கேரக்டர். முதலில் இந்தப் பாத்திரத்தில் நடிப்பதற்காக சிவாஜி கணேசனை பாலா அணுகியிருந்தாராம்.

ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. எனவே ராஜ்கிரண் இந்தப் பிராஜக்டிற்குள் வந்தார். என்றாலும் சம்பந்தப்பட்ட கேரக்டரை சிறப்பாக கையாண்டு ‘பெரியவருக்கு’ பெருமை சேர்த்தார் ராஜ்கிரண். ‘சிறந்த துணைநடிகருக்கான’ தமிழ்நாடு மாநில அரசு விருதையும் பெற்றார்.

பெரியவராக ராஜ்கிரணின் அட்டகாசமான நடிப்பு

ராமநாதபுரம் மாவட்டம். ‘பெரியவர்’ என்று அழைக்கப்படுபவரின் மீது ஊரே மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறது. மன்னராட்சியின் கடைசி வாரிசு. ஜனநாயகம் மலர்ந்த பிறகு மன்னர் வாரிசுகளின் சொத்துகள் அரசாங்கத்தால் பறிக்கப்பட்டன. இப்போதிருக்கும் மருத்துவமனை, கல்லூரி, கலெக்டர் அலுவலகம் என்று எல்லாமே மன்னர் குடும்பத்தின் பரம்பரைச் சொத்துக்களாக இருந்தவைதான்.

பெரியவர் எளியவர்களுக்கு உதவி செய்பவர். தப்பு செய்பவர்களை, குறிப்பாக பெண்கள் மீது வன்முறை நிகழ்த்துபவர்களை பெரியவருக்கு பிடிக்காது. அவருடைய நீதிமன்றத்தில் அதற்கான பிரத்யேக சட்டங்கள் இருக்கின்றன. காவல்துறையையும் நீதித்துறையையும் நம்பாத சட்டங்கள் அவை. சுருக்கமாகச் சொன்னால் ‘பெரியவர்’ தனிநபர் அரசாங்கம்.

வெள்ளை வேட்டி, முழுக்கைச் சட்டை, நரைமுடி எட்டிப் பார்க்கும் தாடி, படிய வாரப்பட்ட தலை, இறுக்கமான முகம் என்று பார்த்தவுடன் மதிப்பு வரக்கூடிய தோற்றத்தில் இருக்கிறார் பெரியவர். அவருடைய வீடு தேடி கலெக்டர் வருகிறார். அதிகம் பேசாமல் சுருக்கமான உடல்மொழியுடன் கலெக்டரை அமரச் சொல்லி கை காட்டுகிறார் பெரியவர். பெரியவர் வருவதற்கு முன்பாக அவருடைய பின்னணி பற்றி கலெக்டருக்கு விலாவாாரியாகச் சொல்லி விடுகிறார், பிஏ.

கலெக்டர் தலையைக் குனிந்தபடி பணிவாக, கோரிக்கை வைக்கும் குரலில் பெரியவரிடம் சொல்கிறார். ‘கலெக்டர் ஆபிசில் இருக்கிற பழைய ராஜா சிலையை எடுத்துட்டு மறைந்த அரசியல்கட்சித் தலைவர் சிலையை வெக்கச் சொல்லி அரசாங்க ஆணை வந்திருக்கு. அதான் உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போலாம்ன்னு வந்தோம்” என்று தயங்கியபடி கலெக்டர் சொல்ல, பெரியவரின் முகத்தில் பெரிய சலனமில்லை.

பெரியவர் - தனிநபர் அரசாங்கம்

“இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு?” என்று இறுக்கமான குரலில் பெரியவர் கேட்க “இல்லைங்கய்யா.. உங்க கிட்ட இருந்த பிராப்பர்ட்டியை அரசாங்கம் எடுத்துக்கிட்டது இல்லையா?” என்று பி.ஏ. சொல்ல, பெரியவரின் மருமகன் சட்டென்று இடைமறித்துச் சொல்கிறான். “அது எடுத்துக்கிட்டதில்ல. நாங்களா பார்த்து கொடுத்தது”.

பெரியவரின் மகள் பூஜை செய்யும் மணிச்சத்தம் கிணுகிணுவென அலறியபடி இருக்க “நிறுத்தச் சொல்லு அவளை” என்று கர்ஜிக்கிறார் பெரியவர். வந்தவர்கள் மீது காட்ட வேண்டிய கோபத்தை மறைமுகமாக வெளிப்படுத்துகிறார் என்பதை உணர முடிகிறது. “இவ மணியடிச்சுதான் சாமி வந்து நிக்கப் போவுதா?” என்று பெரியவர் மெல்லிய கோபத்துடன் கேட்கிறார். இந்த வசனம் ஏன் வருகிறது என்பது பின்னால் வரும் ஒரு காட்சியின் மூலம் அழுத்தமாகப் புரியும்.

எங்க மக்களுக்கு உதவறதுக்கு.. நாங்க அரசாங்கம் கிட்ட வந்து கெஞ்சணுமா?

“சிலையை எடுக்கப்போறதுல ஒரு பிரச்சினையும் இல்ல. ஆனா நீங்க புதுசா வெக்கற சிலையினால நாலு பேரு அடிச்சிக்கிட்டு சாகாம இருந்தா போதும். ஏன்னா.. பிரச்சினை அங்க இருந்துதானே ஆரம்பிக்குது?” என்று பெரியவர் கேட்கும் கேள்வியில் கிண்டலும் கோபமும் கலந்திருக்கிறது. “இதுல உங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருந்தா.. நான் வேணா எழுதி.. “ என்று கலெக்டர் கேட்கும் போதே கையை நீட்டி அதை மறுக்கிறார் பெரியவர்.

“வேற என்ன?” என்று பெரியவர் கேட்க, கலெக்டர் மீண்டும் தயங்கி “நீங்களும் சம்பந்தப்பட்ட ஆளுங்களும் முகாமிற்குப் போறீங்க.. அவங்களுக்கு உதவி செய்யறது நல்ல விஷயம்தான். ஆனா பாருங்க. ‘டிரான்ஸிட் முகாம்’ன்றது.. இன்டர்நேனஷல் சம்பந்தப்பட்டது” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரை இடைமறிக்கும் பெரியவர் “என்னது.. டிரான்ஸிட் முகாமா? எந்தக் காலத்துல இருக்கீங்க.. அதுக்குப் பேரு repatriate camp. தாயகம் திரும்பியோருக்கான மறுவாழ்வு முகாம்” என்று தெள்ளத் தெளிவாக பெரியவர் ஆங்கிலத்தில் சொல்ல கலெக்டருக்கு வியர்த்துப் போகிறது.

“அங்க போறதுக்கு கவர்ட்மென்ட் பர்மிஷன் வேணும்” என்று கலெக்டர் தயங்கியபடி சொல்ல “அதாவது… எங்க மக்களுக்கு உதவறதுக்கு.. நாங்க அரசாங்கம் கிட்ட வந்து கெஞ்சணுமா?” என்று பெரியவர் கேட்க “அது சும்மா ஃபார்மாலிட்டிதான்.. ஒரு லெட்டர் கொடுத்துட்டா போதும்” என்று சூழலின் வெப்பத்தை தணிக்கும் விதமாகச் சொல்கிறார் பிஏ. ‘கொடுத்துடு… கொடுத்துடு” என்று மருமகனிடம் வெறுப்பாகச் சொல்கிறார் பெரியவர்.

“சாரி.. உங்களைத் தொந்தரவு பண்ணிட்டோம்” என்று சம்பிதாயமான வார்த்தைகளில் கலெக்டர் மன்னிப்பு கேட்க கையை நீட்டி வெளியே போகும் வழியைக் காண்பிக்கிறார் பெரியவர். சட்டத்தை மதிப்பவர் என்பதால் அடக்கப்பட்ட கோபம் மட்டுமே அவரிடமிருந்து வருகிறது.

பெரியவர் வெளியே கிளம்பும் போது வாசலில் ஒரு முரட்டுத்தனமான இளைஞன் நிற்கிறான். (சூர்யா) “காலேஜ்ல சீட் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க. மைனர் ஜெயில்ல படிச்சா, சீட்டு தர மாட்டீங்களா?” என்று அந்த இளைஞன் விறைப்பான குரலில் கேட்க, பெரியவரின் முகத்தில் இருந்த இறுக்கம் தளர்ந்து புன்னகை தோன்றுகிறது. “யாரு சொன்னது… அதுக்குத்தானே காலேஜ் கட்டியிருக்கு… நீ போ .. நான் சொல்றேன்” என்றபடி பெரியவர் கிளம்ப, ‘இவ்ளோ நல்லவரா இவரு?’’ என்று ஆச்சரியமாகப் பார்க்கிறான் முரட்டு இளைஞன்.

நீதான் உள்ள இருந்து மாத்தணும்.. - பெரியவரின் உபதேசம்

கல்லூரியில் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்கிற ஒரு பொறுக்கியை சூர்யா அடித்து வெளுக்க காரில் இருந்தபடி பார்க்கிறார் பெரியவர். பிறகு அவனை வீட்டிற்கு அழைத்து விசாரிக்கிறார். “சின்ன வயசுலயே ஜெயில் பார்த்துட்டோம்ன்ற மிதப்பு.. நம்ம பேரைச் சாென்னா நாலு போ் பயப்படணும்.. அதானே?” என்று பெரியவர் கேட்க சூர்யா அமைதியாக நிற்கிறான்.

சற்று இடைவெளி விட்டு பெரியவர் சொல்கிறார். “அப்படித்தான் இருக்கணும்.. காலேஜ் பசங்க முன்ன பின்னதான் இருப்பாங்கன்னு பார்த்தேன்.. ஆனா தப்பா இருக்கு. நீதான் உள்ள இருந்து மாத்தணும்.. கரைவேட்டி ஆளுங்க சம்பந்தப்பட்டவங்களை வெளுக்கணும்.. உன்னாலதான் முடியும்” என்று உபதேசம் போல் சொல்கிற பெரியவர் ‘சாப்பிட்டியா.. உக்காந்து சாப்பிடு’ என்று சொன்னவுடன் சூர்யா நெகிழ்ந்து போகிறான். இதுவரை யாரும் அவனை அப்படிக் கேட்டதில்லை.

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு தமிழ் அகதிகள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்த நேரம் அது. சட்டவிரோதமான இந்தப் பயணத்தில் பல உயிர்கள் பலியாகும். அப்படியொரு கூட்டத்தைக் கொண்டு வந்த ஏஜெண்ட், கரைக்கு தொலைவில் ஒரு தீவில் அப்படியே இறக்கி விட்டு விட்டுப் போக, அந்த மக்கள் பசியால் தவிக்கிறார்கள். அரசாங்கம் வழக்கம் போல நத்தை வேகத்தில் செயல்பட, இந்தத் தகவல் பெரியவருக்கு வருகிறது. படகின் மீது நின்று கம்பீரமாக நின்று கொண்டு தானே அந்தக் கூட்டத்தை மீட்டுக் காப்பாற்றி முகாமிற்குள் கொண்டு சேர்க்கிறார்.

பொறுக்கிப்பயலுக எதுக்கு பூமிக்குப் பாரமா..?

பாலியல் வன்முறைக்கு ஆளாகி உடலும் மனமும் மிகவும் சேதமுற்றிருக்கும் ஓர் இளம்பெண் பற்றிய தகவல் பெரியவருக்கு வந்து சேர்கிறது. கோபத்துடன் மருத்துவமனைக்கு செல்கிறார். குற்றம் செய்த நபர் யாரென்று காவல்துறையிடம் கூட தெரிவிக்காத அந்தப் பெண், பெரியவரின் காதில் யாரென்று சொல்கிறார். ஆனால் இன்ஸ்பெக்டரோ “சார்.. பெயரை மட்டும் சொல்லச் சொல்லுங்க.. எவிடன்ஸ் கிளியரா இருக்கு. ஏழு வருஷம் தண்டனை வாங்கிக் கொடுத்துடலாம்” என்று சொல்ல…

“ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிச்சவனுக்கு நீங்க வாங்கித் தர்ற தண்டனை ஏழு வருஷமா.. அரசியல்தலைவர்கள் பொறந்த நாளு.. செத்த நாளுன்னு.. பாதி வருஷம் கழிஞ்சுடும். உள்ளே மூணு வேளையும் தின்னு கொழுத்துப் போயி வெளிய வர்றவன், அடுத்து எவ கிடைப்பான்னுதான் கையில பிடிச்சிக்கிட்டு அலைவான்.. பொறுக்கிப்பயலுக எதுக்கு பூமிக்குப் பாரமா.. போட்டுத் தள்ளு’ என்று ஆத்திரத்துடன் உத்தரவிடுகிறார் பெரியவர்.

பெரியவர் சொன்னதை வேத வாக்காக எடுத்துக் கொள்ளும் சூர்யா, தப்பு செய்தவனுக்கு கொடூரமாக தண்டனை அளிக்கிறான். இந்த விஷயத்தைக் கேட்டு மது போதையில் பெரியவர் சிரிக்கிறார். சாதாரண சிரிப்பல்ல. வெறித்தனமான சிரிப்பு என்பார்கள் அல்லவா? அப்படி சன்னதம் வந்தது போல் பல நிமிடங்களுக்கு சிரிக்கிறார் பெரியவர். ‘ஏண்டா.. அங்கயா போய் வெட்டுவே?’ என்பது போல் சூர்யாவை செல்லமாக அடித்து விளையாடுகிறார். அவரது வெறித்தனமான சிரிப்பை குடும்பத்திலுள்ள பெண்களும் குழந்தைகளும் அதிர்ச்சியாகப் பார்க்கிறார்கள். இந்தக் காட்சியில் ராஜ்கிரணின் நடிப்பு அட்டகாசமாக இருக்கிறது.

‘நீயும் நானும் அவதாரம்’ - உக்கிரமான காட்சியும் இசையும்

இதே போல் இன்னொரு காட்சி. மது போதையில் இருக்கும் பெரியவர், சூர்யாவை அழைத்து “நீ கட்டிக்கப் போற பொண்ணு.. எப்படியிருக்கா.. நல்லா பார்த்துக்க.. இந்தா சிக்கனை தின்னு.. என்னை மாதிரி பலசாலியா இருக்கணும்..” என்று மகிழ்ச்சியாக பேசுகிறார். தன்னுடைய பிம்பமாக இருக்கிற சூர்யாவை, தன் மகனாக ஏற்றுக் கொண்ட சமிக்ஞைகள் அவரிடமிருந்து வருகின்றன. ‘எனக்கு மூணு பொண்ணுங்க.. ஒரு பையன் இல்லையேன்னு ஏக்கம் இருந்துச்சு.. இப்ப அது இல்லடா” என்று சூா்யாவை செல்லமாக அடித்து விளையாடுகிறார்.

‘நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்’ என்கிற பெரியவர், பிறகு இன்னொரு பாட்டில் மதுவையும் அப்படியே மடக் மடக்கென்று வாயில் கவிழ்த்து விட்டு..

‘யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத

அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானாம் ஸ்ருஜாம்யஹம்’

என்கிற பகவத் கீதையின் சுலோகத்தைச் சொல்லி அதற்குப் பொருளும் சொல்கிறார்.

“இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா.. இந்த மண்ணுல.. எப்பல்லாம் தர்மம் குறைஞ்சு அதர்மம் தலைவிரிச்சு ஆடுதோ.. அப்பவெல்லாம் நான் அவதாரம் எடுப்பேன். அந்த அவதாரம்தாண்டா.. நீயும் நானும்.. நம்மள்லாம் யாருன்னு நெனச்சே.. சாமி.. அக்கிரமத்தைப் பார்த்து கொதிச்சு எழுற அத்தனை பேரும் சாமிதாண்டா.. இதுக்காக. தனியா (மேலே கை காட்டுகிறார்) வருமா.. தப்பு பண்றவன் எவனா இருந்தாலும் போட்டுத் தள்ளு.. உனக்கு அழிவே கிடையாது. உன்னை யாரும் அழிக்கவும் முடியாது. வந்த வேலை முடிஞ்சதுன்னா.. தானா போய்ச் சேருவே.. உனக்கு நான் துணையா இருப்பேன்’ என்று சாமி வந்தது போல் பெரியவர் பேச, பின்னணியில் உக்கிரமான இசை கேட்கிறது.

அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் அருளிய உபதேசக் காட்சி போல் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சியில் ராஜ்கிரணின் நடிப்பு அசாதாரணமாக இருக்கிறது. அவரது உடல்மொழியும் வசன உச்சரிப்பும் அருமை.

வேலுநாயக்கருக்கு இணையான பாத்திரம் - பெரியவர்

மகனின் முரட்டுத்தனம் காரணமாக அவனிடமிருந்து ஒதுங்கியிருக்கும் சூர்யாவின் அம்மா ஒரு கட்டத்தில் அவனை ஏற்றுக் கொள்ள முடிவெடுக்கிறாள். அவனுடைய உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்து பதறுகிறார். பெரியவரிடம் வந்து கோரிக்கை வைக்கிறாள். ‘என் மகன் எனக்கு உயிரோடு வேணும்’.

என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கும் பெரியவர், ‘அப்படியே நடக்கட்டும்’ என்பது போல் மௌனமாக வீட்டிற்குள் செல்கிறார். மாரடைப்பு வந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். மருமகன் செய்யும் சதி காரணமாக பரிதாபமாக இறக்கிறார்.

‘நாயகன்’ திரைப்படத்தின் ‘வேலு நாயக்கருக்கு’ இணையாக பேசப்படவேண்டிய பாத்திரம் நந்தாவின் ‘பெரியவர்’. ராஜ்கிரணின் காட்டுத்தனமான நடிப்பு இந்தப் பாத்திரத்தை மிகவும் வலுவானதாக மாற்றியிருக்கிறது. அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட அவதாரமாக மாறிய 'பெரியவர்’ என்றும் மறக்க முடியாத ஆத்மா.