சினிமா

“நடிகர் திலீப் ‘அம்மா’விலிருந்து ராஜினாமா” - மோகன்லால் அறிவிப்பு

“நடிகர் திலீப் ‘அம்மா’விலிருந்து ராஜினாமா” - மோகன்லால் அறிவிப்பு

webteam


நடிகர் திலீப்பின் ராஜினாமா ஏற்கப்பட்டுவிட்டதாக மலையாள நடிகர் சங்கமான 'அம்மா' வின் தலைவர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் பிரபல நடிகை ஒருவர் 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில்‘அம்மா’வின் தலைவராக இருந்த இன்னசென்ட் பதவியில் இருந்து விலகியதை அடுத்து மோகன்லால் தலைவர் ஆனார். அவர் பதவியேற்றதும் திலீப்பை சங்கத்தில் மீண்டும் சேர்த்தனர்.

இந்த முடிவுக்கு திரைப்பட பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நடிகைகளான ரேவதி, பார்வதி, பத்மப்ரியா, ரீமா கல்லிங்கல் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்கத்தில் இருந்தும் விலகினர். இதையடுத்து திலீப்பை மீண்டும் சேர்ப்பது பற்றிய தங்கள் முடிவை‘அம்மா’ மாற்றியது.

ஆனால் திலீப்பை சங்கத்தில் மீண்டும் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், அதற்கு விளக்கம் அளிக்கும்படியும் ரேவதி, பார்வதி, பத்மபிரியா, ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பினர். இதுகுறித்து ரேவதி கூறும்போது, ‘நடிகர் சங்கத்தில் திலீப் இருக்கிறாரா? இல்லையா? என்பதை சங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று விளக்கம் கேட்டோம். இன்னும் பதில் இல்லை’ என்று தெரிவித்தார். 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தலைவர் மோகன்லால், திலீப்பிடம் ராஜினாமா செய்யக்கோரினேன். அவர் ராஜினாமா கடிதத்தை உடனடியாக அளித்தார். அதன்படி அவரது ராஜினாமா ஏற்கப்பட்டது. நான் பதவியேற்ற சமயத்தின் திலீப்பை சுற்றி பிரச்னை நிலவியது. இந்தப் பிரச்னையை தீர்க்க நான் கொஞ்ச காலம் அனுமதி கேட்டேன். அதற்குப் பின் கேரள வெள்ளம் வந்து காலத்தை கடத்திவிட்டது. அதே நேரத்தில் பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நடிகைகள் சிலர் விலகிவிட்டனர். இதை எப்படி கையாள்வது என்றே தெரியவில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில்‘அம்மா’ உறுப்பினர், நடிகர் சித்திக் கூறும்போது, “சங்கத்தில் இருந்து விலகிய நடிகைகள் தங்களது வருத்தத்தை தெரிவித்தால் மீண்டும் சங்கத்தில் சேர்ந்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். இது குறித்து பேசிய மோகன்லால், சங்கத்தில் இருந்து விலகிய நடிகைகள் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து மீண்டும் சங்கத்தில் சேர்ந்துகொள்ளலாம்” என்று தெரிவித்தார்.