மகாபாரத கதையில் உருவாகும் ‘ரண்டாமூழம்’ என்ற படத்தில் பீஷ்மராக நடிக்க அமிதாப் பச்சனிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
ஞானபீட விருது வென்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவனின் பிரபல நாவல் ரண்டாமூழம். இந்த நாவலில் மகாபாரத கதை பீமனின் கண்ணோட்டத்தில் கூறப்பட்டிருக்கும். இந்த நாவல் விரைவில் பல மொழிகளில் படமாக வெளிவர உள்ளது. இந்த படத்தில் பீமனாக நடிக்க மலையாள நடிகர் மோகன்லால் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் பீஷ்மரின் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் தெரிவித்துள்ளார். பீஷ்மரின் கதாபாத்திரத்திற்கு அமிதாப்பச்சன்தான் சரியாக இருப்பார் என்றும் ஆனால் அவர் இன்னும் தங்களுக்கு பதிலளிக்கவில்லை என்றும் ஸ்ரீகுமார் கூறினார்.
இரண்டு பாகமாக எடுக்கவிருக்கும் இந்த படத்தின் பட்ஜெட் ரூ 700 முதல் ரூ 800 கோடி வரை இருக்கும். இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் இந்த படம் உருவாகும். மேலும் அனைத்து இந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யப்படும். படத்தின் படப்பிடிப்பு 2018-ம் ஆண்டு தொடங்கும் என ஸ்ரீகுமார் தெரிவித்தார்.