இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இருவரின் அசாத்தலான நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘அமரன்’.
2014-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள 44-வது ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பட்டாலியனில் பணிபுரியும் போது, ஷோபியானில் நடந்த காசிபத்ரி ஆபரேஷனில் முக்கியப் பங்கு வகித்து உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் இயக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவ வீரர்களின் தீரம்மிக்க வீரச்செயல்களை அடிப்படையாகக் கொண்டு காஷ்மீரின் சவால் மிக்க நிலப்பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் அமரன் திரைப்படம், முடிந்தளவு உண்மை காட்சிகளை படமாக்க முயற்சித்து அதில் வெற்றியும் கண்டுள்ளது.
ஆனால் காஷ்மீரில் நிலவும் அரசியல் என்ன என்பது குறித்தும், அங்கிருக்கும் மக்களின் வாழ்க்கை சூழல் எப்படி இருக்கிறது என்பது குறித்தும் அமரன் பேசவில்லை என பல்வேறு விமர்சனங்களும், அங்கிருக்கும் ஒரு சமூக மக்களை தவறாக சித்தரிப்பதாகவும் கூறி படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் நடந்துவருகின்றன.
இப்படி நாளுக்கு நாள் பேசப்படும் ஒரு விசயமாக அமரன் திரைப்படம் மாறினாலும், வசூலில் குறைவில்லாமல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. இதனை தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் எக்ஸ் தள பதிவின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அக்டோபர் 31ம் தேதி வெளியான அமரன் திரைப்படம் 11வது நாளை கடந்து திரையரங்கில் அனைவரும் விரும்பி பார்க்கும் திரைப்படமாக இருந்துவருகிறது. பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை முறை, ரானுவத்திற்காக அவருடைய அர்ப்பணிப்பு மற்றும் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் உடனான காதல் வாழ்க்கை அதில் அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் என பல முகங்களை வெளிப்படுத்தியிருக்கும் அமரன் படமானது அனைவரையும் திரையரங்கிற்கு இழுத்து வருகிறது.
உண்மை கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரின் நடிப்பு அதிகப்படியான பாராட்டை பெற்றுவரும் நிலையில், படத்தின் வசூலும் உலகளவில் 200 கோடியை கடந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
sacnilk.com படி, அமரன் திரைப்படமானது முதல் வாரத்தில் இந்தியாவில் மட்டும் ரூ.114.85 கோடி வசூலை ஈட்டியுள்ளது. அதுஅடுத்தடுத்த நாட்களில் 95.95% உயரும் எனவும் கூறப்பட்டுள்ளது.