சினிமா

28 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிகை அமலா ரீ என்ட்ரி

28 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிகை அமலா ரீ என்ட்ரி

webteam

நடிகை அமலா 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.

‘மைதிலி என்னை காலதலி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் 1986-ஆண்டு அறிமுகமானவர் நடிகை அமலா. இந்த படத்தின் மூலம் ஒரே இரவில் புகழின் உச்சத்திற்கு இவர் சென்றவர். இவரது நடிப்பில் வெளியான ‘மெல்ல திறந்தது கதவு’ படம் ரசிகர்கள் மத்தியில் இன்றும்  மறக்க முடியாத ஒரு படமாக வலம் வருகிறது. ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து பல படங்களில் கதையின் நாயகியாக நடித்துள்ளார் அமலா. ‘வேலைக்காரன்’ படத்தில் ரஜினியுடன் இவர் இணைந்து நடித்த ‘வா..வா.. வா.. கண்ணா வா’ பாடல் இன்றும் மறக்க முடியாத பாடலாக அமைந்துள்ளது. அதன் பிறகு தென் இந்திய மொழிகள் அனைத்திலும் அமலா பிசி நடிகயாக வலம் வந்தார். மேலும் அதையும் மீறி பாலிவுட் வரை சென்றார்.

தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவை மணந்து கொண்ட பிறகு, இவர் திரை வாழ்க்கையை விட்டே விலகினார். அதன் பிறகு இவரது மகன்கள் தெலுங்கு பட உலகில் ஹீரோக்களாக நடிக்கத் தொடங்கினர். பிள்ளைகள் வளர்ந்த பிறகு திரும்பவும் நடிக்கலாம் என முடிவெடுத்த அமலா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் ரீ எண்ட்ரி ஆனார். தமிழ் சினிமாவை பொறுத்தவரை 1991-ஆம் ஆண்டு இயக்குநர் ஃபாசில் இயக்கத்தில் வெளியான ‘கற்பூர முல்லை’ திரைப்படமே இவரின் கடைசி படமாக அமைந்தது. சில வருடங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குபவராக களம் கண்ட இவருக்கு அந்த நிகழ்ச்சி வ்வளவாக பெயர் வாங்கி தரவில்லை.

இந்நிலையில் அமலா, மீண்டும் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தப் படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தயாரிக்க இருப்பதாகவும் தெரிகிறது. இது சம்பந்தமாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பிரபு பேட்டி அளித்துள்ளார்.  “இந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திக் என்னிடம் கதையை சொன்னார். அப்போது அவர் குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு நடிகை அமலா பொருத்தமாக இருப்பார் என்றார். அதன் படி அவரை சந்தித்து சில மாதங்கள் முன் கதையை விளக்கினேன். அதை கேட்டதும் அவர் உற்சாகமானார். இந்தக் கதை நிச்சயம் தமிழில் வெற்றி பெறும் என்றார்” என்று கூறியுள்ளார்.