சினிமா

பவ்நிந்தர் சிங்கை 2வது திருமணம் செய்த அமலா பால்? - ஜாமீன் மனு தாக்கலின்போது வெளிவந்த உண்மை

பவ்நிந்தர் சிங்கை 2வது திருமணம் செய்த அமலா பால்? - ஜாமீன் மனு தாக்கலின்போது வெளிவந்த உண்மை

webteam

பிரபல நடிகை அமலாபால் கொடுத்த பண மோசடிப் புகாரில் அவரின் ஆண் நண்பரை விழுப்புரம் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தநிலையில், பவ்நிந்தர் சிங் தத் - அமலாபாலுடன் திருமணம் செய்துக்கொண்டதற்காக ஆதரங்களை நீதிமன்றத்தில் சர்ப்பித்ததைத் தொடர்ந்து வானூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

திரைப்பட தொழிலில் ஏற்பட்ட நட்பு காரணமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பவ்நிந்தர் சிங் தத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் இணைந்து திரைப்பட நிறுவனம் தொடங்கியதாகவும், பின்னர் 2018-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் பெரிய முதலியார் சாவடியில் தங்கியிருந்தபோது கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதாகவும், அதனைத்தொடர்ந்து இருவரும் நெருக்கமாக பழகியபோது எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக மிரட்டல் விடுத்து, அச்சுறுத்தி, கொலை மிரட்டல் விடுத்து தனது பணம் மற்றும் சொத்துக்களை மோசடி செய்துவிட்டதாக ஆண் நண்பர் பவ்நிந்தர் சிங் தத் மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட 12 பேர் மீது நடிகை அமலாபால் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார்.

இந்தப்புகாரின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடந்தி வந்த நிலையில், பெரிய முதலியார் சாவடியில் தங்கி இருந்த நடிகை அமலாபாலின் ஆண் நண்பர் பவ்நிந்தர் சிங் தத்தை, கடந்த 22-08-22 அன்று அதிரடியாக போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பவ்நிந்தர் சிங் தத்தை ரகசிய இடத்தில் வைத்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விழுப்புரம் அருகிலுள்ள வேடம்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 11 பேரை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பவ்நிந்தர் சிங் தத் தரப்பில் வானூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இருவரும் சேர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு, அதாவது 07-11-2018 அன்று பஞ்சாபில் திருமணம் செய்துக்கொண்டதற்கான ஆதரத்தை பவ்நிந்தர் சிங் தத் சமர்ப்பித்துள்ளார். இதையடுத்து மனுவை விசாரித்த வானூர் நீதிமன்ற நீதிபதி வரலட்சுமி பவ்நிந்தர் சிங் தத்-க்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கினார். அதனை தொடர்ந்து வேடம்பட்டு சிறையில் இருந்து பவ்நிந்தர் சிங் தத் வெளியேவந்துள்ளார்.