சினிமா

'96 வெற்றியை என்னால் கொண்டாட முடியவில்லை' கதை திருட்டு குறித்து இயக்குநர்

'96 வெற்றியை என்னால் கொண்டாட முடியவில்லை' கதை திருட்டு குறித்து இயக்குநர்

webteam

த்ரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘96’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் த்ரிஷாவும், விஜய் சேதுபதி ஏற்றிருந்த ‘ஜானு’, ‘ராம்’ என்ற காதாபாத்திரங்களை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். கேரளாவில் வெளியான ப்ரேமம் படத்தினை தமிழக ரசிகர்கள் கொண்டாடியது போல், ‘96’ படத்தினை கேரள இளைஞர்கள் கொண்டாடினார்கள். படத்தில் த்ரிஷா அணிந்திருந்த மஞ்சள் நிற சுடிதார் விற்பனைக்கு வரும் அளவிற்கு அந்த கதாபாத்திரத்தின் தாக்கம் இருந்தது. த்ரிஷாவின் நடிப்பும் எல்லோராலும் பாராட்டப்பட்டது. 

96 திரைப்படம் பலருடைய பள்ளிப் பருவ காதலை நினைவுப்படுத்தும் வகையில் இருந்ததால், அதனை ரசிகர்கள் இப்போதும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் 96 படத்தின் கதை என்னுடையது என்று சுரேஷ் என்பவர் போர்கொடி தூக்கியுள்ளார். இதில் 96 திரைப்படத்தின் கதை தான் எழுதி பாரதிராஜா இயக்க இருந்த ‘பால்பாண்டி என்கிற பாரதி’ படத்தின் கதை என சுரேஷ் என்பவர் குற்றச்சாட்டை முன்வைத்தார். 

எனவே இந்த சர்ச்சை குறித்து 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார் அதில் "96 படம் வெளியான முதல் வாரத்தில் இருந்தே சமூக வலைதளங்களில் கதை தொடர்பான சர்ச்சைகள் வருகின்றன. படம் வெற்றி என தெரிந்த பிறகுதான் பல பிரச்னைகள் உருவாகத் தொடங்கின. 96 படத்தின் வெற்றியை என்னால் கொண்டாட முடியவில்லை. "

சுரேஷின் குற்றச்சாட்டில் எந்தவிதமான உண்மையுமில்லை. கதை தொடர்பான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருக்கின்றன" என தெரிவித்தார் பிரேம் குமார். மேலும் தொடர்ந்த அவர் பாரதிராஜா கதை திருட்டு தொடர்பாக அளித்த பேட்டி குறித்து "இயக்குநர் இமயம் என்று கொண்டாடக் கூடிய  பாரதிராஜா அவர்கள் மீது பெரிய மரியாதை வைத்திருக்கிறோம். ஆனால் அவர் கொச்சையான வார்த்தைளால் சமூக வலைதளங்களில் என்னை திட்டியிருக்கிறார்." 

அவர்கள் கையில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் எங்களை திட்டியது தவறு. இதற்கான பதிலை எனக்கு கூறியாக வேண்டும்" என வருத்தமுடன் தெரிவித்தார் பிரேம்குமார்.