சினிமா

தமிழ் மொழியிலும் வருகிறது அல்லு அர்ஜூனின் 'ஆஹா' ஓ.டி.டி தளம்

தமிழ் மொழியிலும் வருகிறது அல்லு அர்ஜூனின் 'ஆஹா' ஓ.டி.டி தளம்

நிவேதா ஜெகராஜா

தெலுங்கில் பிரபலமாக உள்ள ஆஹா (Aha) ஓ.டி.டி தளம் தமிழுக்கு வருகிறது. நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சொந்தமான ஆஹா ஓ.டி.டி தளம் தெலுங்கில் உருவாகும் திரைப்படங்களை தங்களுடைய தளத்தில் திரையிட்டு வருகின்றனர்.

அதேபோல் பல வெப்சீரிஸ்யும் தயாரித்து வெளியிடுகின்றனர். இந்த ஓ.டி.டி. தளத்தில், சில வருடங்களுக்கு முன் சாம் ஜாம் என்றொரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார் சமந்தா. அந்நிகழ்ச்சியில் தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகர்களான சிரஞ்சீவி, நாகசைத்தன்யா, தமன்னா, ரகுல் ப்ரீத் சிங், விஜய் தேவரகொண்டா, ராணா என பலரும் கலந்துக்கொண்டிருந்தனர். இதே தளத்தில் நடிகர் ராணாவும் ‘நம்பர் ஒன் யாரி - வித் ராணா சீசன் 3’ என்றொரு பிரபலமான ஷோவை ஆன்கராக இருந்து நடத்தியிருந்தார்.

வெப்சீரிஸை பொறுத்தவரை அமலா பால் நடிப்பில் உருவான ‘குடியெடமைதே’; தமன்னா நடிப்பில் உருவான ‘11-த் ஹவர்’ உட்பட பல பெரிய நடிகர்களின் வெப் சீரி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியானது. தெலுங்கில் மொழிப்பெயர்ப்பு செய்யப்படும் படங்களின் உரிமையையும், இந்த தளம் அதிகமாக பெற்றுவருகிறது. அந்தவகையில் நயந்தாராவின் சமீபத்திய மலையாள படம் ‘நிழல்’; டோவினோ தாமஸின் மலையாள படம் ‘லூகா’; விஜய் சேதுபதியின் தமிழ்ப்படம் ‘ஜூங்கா’; ஆர்.ஜே.பாலாஜியின் தமிழ்ப்படம் ‘எல்.கே.ஜி’ உட்பட பல படங்கள் இந்தத் தளத்தில் உள்ளது.

இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு ஓரிரு வருடங்களிலேயே இந்தளவுக்கு பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தற்போது அந்த நிறுவனம் தமிழில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இங்கு வெப்சீரிஸ் மற்றும் நேரடி திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கின்றனர். அதேபோல் திரைப்படங்களின் வெளியீட்டுக்கு பிறகான உரிமையையும் அந்நிறுவனம் பெறும் என்று கூறப்படுகிறது.