தமிழில் விஜய் – ஜோதிகா நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டு வெளிவந்த குஷி திரைப்படம், தெலுங்கிலும் அதே பெயரில் 2001-ல் பவன் கல்யாண் – பூமிகா நடிப்பில் வெளிவந்து தமிழ் போலவே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தற்போது 2022 புத்தாண்டுக்கு இப்படத்தை ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது தெலுங்கு திரையுலகம்! இதேபோல தெலுங்கின் இன்னொரு சூப்பர்ஹிட் படமான கில்லியும் ரீரிலீஸாக திட்டமிடப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
தெலுங்கில் நடிகர் பவன் கல்யாணின் செம ஹிட் படமான குஷி, தமிழ் குஷி போலவே எவர்க்ரீன் படம்தான். தெலுங்கில் இப்படத்தை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரித்து வெளியிட்டிருந்தார். தற்போது இப்படத்தை 4 கே ப்ரொஜக்ஷன் தொழில்நுட்பத்தில் டிசம்பர் 31 மாலை தொடங்கி, ஜனவரி 6 வரை தியேட்டரில் ரிலீஸ் செய்வதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக நடிகரும், இப்படத்தின் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “எல்லா காலத்துக்குமான பிளாக்பஸ்டர் காதல் படம் இது! இந்த எவர்கிரீன் ரொமான்ஸை டிச. 31 முதல் உங்களுக்கு திரையரங்கில் தர காத்திருக்கிறோம். எல்லோரும் அந்த அனுபவத்தை பெருங்கள்! என்றும் நிலைத்திருக்கும் குஷி காதலை, மீண்டும் ஒருமுறை கண்டு மகிழுங்கள்!” என்று தெரிவித்துள்ளார்.
இதையொட்டி படத்தின் ட்ரைலர் தற்போது புத்தம்புதிதாக புதிய வெர்ஷனில் வெளியாகியுள்ளது.
குஷி திரைப்படம் டிசம்பர் 31 முதல் ஜனவரி 6 வரை திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தெலுங்கு திரையுலகின் மற்றொரு ப்ளாக்பஸ்டர் திரைப்படமான ஒக்கடு (2003-ல் வெளியானது), ஜனவரி 7 ரீரிலீஸ் செய்யப்படும் என சொல்லப்படுகிறது. ஒக்கடு திரைப்படம், நடிகர் விஜய் நடிப்பில் தமிழில் வெளியாகி ஹிட் அடித்த கில்லி படம் என்பது குறிப்பிடத்தக்கது! ஆனால் ஒக்கடுதான் ஒரிஜினல் வெர்ஷன். மகேஷ்பாபு – பூமிகா நடித்த அந்தப் படம்தான் முதலில் வெளியானது. அங்கு தியேட்டர்களை கிழித்து தொங்கவிட்டட் பின்னர்தான், 2004-ல் நடிகர் விஜய் – திரிஷா நடிப்பில் கில்லியாக தமிழ்நாட்டுக்கு வந்தது. இங்கும் அதிரி புதிரி ஹிட் அடித்தது கில்லி!
ஒக்கடு படம் ஒக்கடு, ஜனவரி 13, 2003-ல் மகரசங்கராதியையொட்டி வெளியாகியிருந்தது. அப்படி பார்த்தால், படம் வெளியாகி இந்த ஜனவரி 13-ல் சரியாக 20 வருடங்கள் ஆகப்போகிறது. இந்த தருணத்தில் படத்தை வெளியிட்டால் ரசிகர்களுக்கு நாஸ்டாலஜிக்காக இருக்குமென இந்த முடிவை படக்குழு எடுத்திருக்கிறது என சொல்லப்படுகிறது.
தற்போதைக்கு பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால், இந்த சூழலில் தியேட்டர்கள் நலிந்து போகமாக இருக்க, பழைய படங்களை தெலுங்கு திரையுலகம் ரீ-ரிலீஸ் செய்யவிருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழிலும் இப்படி ஏதேனும் விரைவில் நடக்கலாமென சொல்லப்படுகிறது. இரண்டுமே நடிகர் விஜய் தமிழில் நடித்த படங்கள் என்பதால், இந்த அப்டேட்கள் விஜய் ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. சமீபத்தில்தான் நடிகர் ரஜினியின் பாபா திரைப்படம் ரீ-ரிலீஸானது குறிப்பிடத்தக்கது. ஆகவே ரீ-ரிலீஸ் கலாசாரம் தமிழிலும் வரக்கூடும்!