சினிமா

‘சாம்ராட் பிரித்விராஜ்’ படத்திற்கு 3 மாநிலங்களில் வரி விலக்கு - அக்‌ஷய் குமார் வேண்டுகோள்

‘சாம்ராட் பிரித்விராஜ்’ படத்திற்கு 3 மாநிலங்களில் வரி விலக்கு - அக்‌ஷய் குமார் வேண்டுகோள்

சங்கீதா

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைத் தொடர்ந்து, பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள சாம்ராட் பிரித்விராஜ் படத்திற்கு, பாஜக ஆளும் 3 மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகரான அக்‌ஷய் குமார் நடிப்பில் மிக நீண்ட காலமாக உருவாகி வந்தப் படம் ‘சாம்ராட் பிரித்விராஜ்’. மன்னர் பிரித்விராஜ் சவுகான் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் பிரித்விராஜ் சவுகான் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். இதன்மூலம் நடிகர் அக்‌ஷய் குமார் முதன்முதலாக வரலாற்று கதையில் நடித்திருக்கிறார்.

இளவரசி சன்யோகிதாவாகவும், பிரித்விராஜின் மனைவியாகவும், முன்னாள் உலக அழகியான மனுஷி சில்லர், இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகிறார். மேலும் சஞ்சய் தத், சோனு சூட், அஷுதோஸ் ராணா, சாக்ஷி தன்வார் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சந்திர பிரகாஷ் திவேதி இயக்கியுள்ளார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் மிகப் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வரலாற்று படம் என்பதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், நாளை உலகம் முழுவதும், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியை, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் படக்குழுவினருடன் சேர்ந்து பார்த்துள்ளார். அப்போது படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டிய யோகி ஆதித்யநாத், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ‘சாம்ராட் பிரித்விராஜ்’ படத்திற்கு வரிவிலக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல், பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் அந்தந்த மாநிலங்களில் வரி விலக்கு அளித்துள்ளனர். காஷ்மீரில் வாழ்ந்த இந்து பண்டிட்களை வைத்து உருவான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், தற்போது ‘சாம்ராட் பிரித்விராஜ்’ படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், படத்தின் கதாநாயகனான அக்‌ஷய் குமார், தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோளை வைத்துள்ளார். அதில், “சாம்ராட் பிரித்விராஜ் படத்தை பார்க்கும் அனைவருக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள். இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கில் வெளியாகிறது. ஜூன் 3-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை திரையரங்குகளில் மட்டும் பார்த்து கொண்டாடுங்கள்!” என்று தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவுடன், உரையுடன் கூடிய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதில், “துணிச்சலான மன்னராக அறியப்பட்ட சாம்ராட் பிரித்விராஜ் சவுகானின் கதையை, நாம் அனைவரும் மிகவும் பெருமைப்படும் வகையில் காட்சிப்படுத்துவதற்காக, ஒட்டுமொத்த படக்குழுவும் 4 ஆண்டுகள் உழைத்துள்ளது. இது ஒரு உண்மை சம்பவம்.

நம் நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு அதிகம் தெரியாத சாம்ராட்டின் வாழ்க்கையின் பல அம்சங்கள் இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாளை படம் பார்க்கும் அனைவருக்கும் எங்கள் உண்மையான வேண்டுகோள் என்னவெனில், பிரமிக்க வைக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்ட இந்தப் படத்தின் பல அம்சங்களை பெரிய திரையில் மட்டுமே பார்க்கவும். பைரசி போன்ற வேறு வழியாக பார்ப்பதை தவிர்க்கவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.