சினிமா

திருநங்கைகளுக்காக அக்‌ஷய் குமார் செய்த செயல் : கடவுள் என புகழ்ந்த லாரன்ஸ்..!

திருநங்கைகளுக்காக அக்‌ஷய் குமார் செய்த செயல் : கடவுள் என புகழ்ந்த லாரன்ஸ்..!

webteam

நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா திரைப்படத்தின் பாலிவுட் ரீ மேக்கில் நடிக்கிறார் நடிகர் அக்‌ஷய் குமார். இந்த படத்தின் பெயர் லக்‌ஷ்மி பாம் என பெயரிடப்பட்டுள்ளது. இதில், காஞ்சனாவில் வருவதுபோல் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அக்‌ஷய் குமார். இவர் ஏற்கனவே தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான 2.0வில் வில்லானாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருநங்கையாக இனிமேல்தான் அக்‌ஷய் குமார் நடிக்கவேப் போகிறார். ஆனால், அதற்கு முன்பாக திருநங்கைகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக அற்புதமான விஷயம் ஒன்றினை செய்துள்ளார். அதாவது, திருநங்கைகளுக்காக வீடு கட்டுவதற்காக மிகப்பெரிய நிதி ஒன்றினை அக்‌ஷய் குமார் வழங்கியுள்ளார்.

இது தொடர்பான தகவலை ராகவா லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தத் திட்டத்திற்கு நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.1.5 கோடி நிதி வழங்கியுள்ளார் என்று கூறியுள்ள லாரன்ஸ் அக்‌ஷய் தங்களுக்கு கடவுள் எனவும் நெகிழ்ச்சியாக அவர் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப்போகிறேன் என்று தொடங்கினார் ராகவா லாரன்ஸ். இந்தியாவில் முதன்முறையாக திருநங்கைகளுக்காக தனி குடியிருப்பு அமைக்கும் தனது திட்டத்திற்கு நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.1.5 கோடி தந்துள்ளார் எனப் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “ 'லாரன்ஸ் அறக்கட்டளை' தனது சேவை பணியில் 15 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 15 ஆண்டை சிறப்பிக்கும் வகையில் திருநங்கைகளுக்கு குடியிருப்பு கட்டித்தர திட்டமிட்டுள்ளோம். கட்டிடம் கட்டுவதற்கான இடம் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும். நிதி திரட்டி கட்டிடம் கட்டிக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தத் திட்டத்தைப் பற்றி அறிந்து கொண்ட நடிகர் அக்‌ஷய் குமார், தன்னிடம் கேட்காமலேயே உடனடியாக கட்டிடம் கட்டுவதற்காக ரூ.1.5 கோடி நிதி வழங்கினார். தங்களுக்கு உதவி செய்யும் அனைவரும் தங்களுக்கு கடவுள் ஆவர். அதேபோல் தற்போது அக்‌ஷய் குமாரும் தங்களுக்கு கடவுள் தான். இந்தத் திட்டத்திற்கு மிகப்பெரிய உதவி செய்த நடிகர் அக்‌ஷய் குமாருக்கு தனது நன்றி.

மேலும், எங்களுடைய அறக்கட்டளை மூலம் அக்‌ஷய் குமார் உதவி உடன் இந்தியா முழுவதும் திருநங்கைகளுக்கு குடியிருப்பு கட்டித்தர திட்டமிட்டுள்ளோம். நிதி வழங்கியதற்காக திருநங்கைகளுடன் நேரில் சென்று நன்றி தெரிவித்தோம். லக்‌ஷ்மி பாம் படத்திற்கான பூஜை விரைவில் நடைபெறும்” எனப் பதிவிட்டுள்ளார்.