சினிமா

'வலிமை' படத்தில் அஜித்தின் உருவக் கேலிக்கு பதிலடி? - வைரலாகும் சுரேஷ் சந்திராவின் பதிவு!

'வலிமை' படத்தில் அஜித்தின் உருவக் கேலிக்கு பதிலடி? - வைரலாகும் சுரேஷ் சந்திராவின் பதிவு!

சங்கீதா

‘வலிமை’ திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் உருவம் மற்றும் நடனம் குறித்து விமர்சிக்கப்பட்ட நிலையில், நடிகர் அஜித்தின் அறிக்கையை, அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தற்போது மறுபகிர்வு செய்து பதிலடி கொடுத்துள்ளதாக கூறுப்படுகிறது.

‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் அஜித், ஹெச் வினோத் குமார் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவான திரைப்படம் ‘வலிமை’. கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக மிகவும் எதிர்பார்க்கப்பட்டு, பிப்ரவரி 24-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது.

ரசிகர்களிடையே ‘வலிமை’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல்ரீதியாக சாதனை படைத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், ‘வலிமை’ திரைப்படத்தில், நடிகர் அஜித்தின் உருவம் மற்றும் நடனத்தை, பிரபல யூ-டியூப் விமர்சகரான 'ப்ளூ சட்டை' மாறன் விமர்சிருந்தார். இது அஜித் ரசிகர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியநிலையில், நடிகர்கள் ஆரி மற்றும் ஆர்.கே.சுரேஷ் 'ப்ளூ சட்டை' மாறனுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இவர்கள் இருவருக்கும் 'ப்ளூ சட்டை' மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்திருந்தார். இந்த சம்பவம் நாளுக்குநாள் இருதரப்பினரிடையும் விவாதத்தை கிளப்பி வந்தநிலையில், தற்போது தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் நடிகர் அஜித், தன்னைப் பற்றிய உருவ கேலிக்கு பதிலடி கொடுத்துள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.

சுரேஷ் சந்திராவின் பதிவுதான் இதற்கு காரணம். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடிகர் அஜித் திரையுலகிற்கு வந்து 30 வருடங்களை நிறைவு செய்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதனை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அதில், 'ரசிகர்கள், வெறுப்பவர்கள், நடுநிலைவாதிகள் என இவர்கள் மூவரும் ஒரே நாணயத்தின் மூன்று பக்கங்கள்.
ரசிகர்களிடம் இருந்து வரும் அன்பையும், வெறுப்பவர்களிடமிருந்து வரும் வெறுப்பையும், நடுநிலையாளர்களிடமிருந்து வரும் நடுநிலையான விமர்சனங்களையும் நான் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன்.

வாழு! வாழ விடு!! நிபந்தனையற்ற அன்புகளுடன் எப்பொழுதும் - அஜித்குமார்' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இப்போது அந்த அறிக்கையை சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் பகிர்ந்து, 'யாருக்கெல்லாம் இது தற்போது தேவைப்படுமோ அவர்களுக்காக இதை மறுபகிர்வு செய்கிறேன். எப்பொழுதும் நிபந்தனையற்ற அன்புடன் - அஜித்குமார்' என அதில் குறிப்பிட்டுள்ளார். இதனால் இருதரப்புக்குமிடையே நிகழும் விமர்சனங்களுக்கு இனிமேல் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.